வெள்ளி, 4 ஜூன், 2010

வாகரையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஜவத்தை என்னும் கடற்கரையை அண்டிய பிரதேசத்திலேயே தற்போது சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



இக்குடியேற்றம் இன்று காலையில் இருந்து நடைபெறுவதாகவும், அண்மையில் அமைக்கப்பட்ட கடற்படை முகாமிற்கு அண்டிய பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மரமுந்திரிகை பயிரிடப்படுகின்ற இடத்திலேயே இடம்பெறுவதாகவும், அத்துடன் இலங்கை கடற்படையினரே இக்குடியேற்றத்தை முன்னின்று நடைமுறைப்படுத்துவதாகவும், இவ்வத்துமீறிய குடியேற்றம் பற்றி அங்குள்ள தமிழ் மக்கள் தன்னிடம் முறையிட்டதாகவும் திரு பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.


இக்குடியேற்றம் பற்றி அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் தான் தொடர்புகொண்டு தெரிவித்ததாகவும், நாளை கொழும்பில் ஒரு காணி சம்பந்தமான கூட்டம் நடைபெற இருப்பதால் அதில் இக்குடியேற்றம் பற்றி அரசிடம் அரசாங்க அதிபர் முறையிட உள்ளதாகவும், தன்னிடம் சொன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


மேலும் இந்த அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு தொலைநகலூடாக அவசர கடிதம் ஒன்றை தான் இன்று அனுப்பியுள்ளதாகவும் திரு பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.


தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிக்கின்ற இந்த அரசு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மட்டும் தற்போது அவசர அவசரமாக செய்துவருவதானது எந்தவொரு அரசியல் தீர்வையேனும் இனி தமிழர்களுக்கு வழங்குமா? என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் தற்போது எழுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக