வெள்ளி, 4 ஜூன், 2010

தலைவரின் முகமே..!-கண்மணி





"எதிரி கருவி ஏந்தாவிட்டால் விமர்சனம் என்பதே கருவி. எதிரி கருவி ஏந்திவிட்டால், கருவி என்பதே விமர்சனம்". இந்த வரிகள் நம்மை நம்முடைய போராட்ட நியாயத்தை உணர்த்துகிறது. எதுவரை நாம் அமைதிகாக்க வேண்டும் என்பதை நமக்கு பகைவன்தான் கற்றுத்தருகிறான். இன்று அரசியல்சூழல் மாறிக் கொண்டிருக்கிறது.
இந்திய ஊடகங்கள் ஒருகாலத்தில் சிங்கள ஊதுகுழல்களாக இருந்தநிலை மாறுவதை சமீபகால நிகழ்வுகள் எடுத்து இயம்புகிறது. வரலாற்றில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்துக்கொண்டே இருக்கும் என்பதையும், இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்வை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். சில நாட்களுக்கு முன் இந்தியாவிலிருந்து ஒலிபரப்பாகும் என்.டி.டிவி என்கிற ஊடக நிறுவனம் ஒரு செய்தியை ஒலிபரப்பியது. இந்தியா ஒலிபரப்பிய இந்த செய்தி, சிங்கள பேரினவாத அரசுக்கு பேரிடியாய் ஆனது.


நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு முன்னே இருக்கும் நம்முடைய வாழ்வியல் தேவைகள் தான் கற்றுத்தருகிறது. அது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு மிகவும் ஆற்றலும் ஆளுமையும் மிக்கதாக அமைந்துவிடுகிறது. நமது விடுதலைப்போராட்டத்திலும்கூட இது பட்டவர்த்தனமாக நம்மால் உணர முடிந்தது. நம்முடைய போராட்டத்தின் நியாயம் என்று உலகெங்கும் இருக்கும் மாந்தநேய சிந்தனையாளர்கள் மனங்களில் தெளிவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. யார் என்ன நினைக்கிறார்களோ அது அவர்களுக்கே எதிராக அமைந்துவிடுகிறது. இந்தியாவை நம்பிக் கொண்டிருந்த சிங்களம், இன்று இந்தியாவின் எதிரியாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதின் அடையாளம்தான் இந்திய ஊடகமான என்.டி.டிவியின் காட்சி அமைப்பாகும்.


அதில், ராமேஸ்வரம் மீனவர்கள் கடல் நீருக்குப் பதிலாக குருதியிலே வாழ்கிறார்கள் என்பதை பல்வேறு ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தியது. அதேப்போன்றே ரனிலும் ராசபக்சேவும் வெவ்வேறல்ல. இருவரும் ஒரே நிலைத்தன்மை உடையவர்கள்தான் என்பதை தமிழீழ உறவுகளின் வாயாலே சொல்ல வைத்தது. இது இப்பொழுது இலங்கையிலே நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு வடஇந்திய நடிகர்கள் செல்வதற்கு இடையூறாகக்கூட அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழீழ விடுதலைக்கான இறுதிக்கட்ட சமர் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மயிரிழை அளவிற்குக்கூட நமக்கு ஆதரவு அளிக்காத இந்த இந்திய ஊடகங்கள், இன்று நமது நியாயத்தை எடுத்துரைப்பதின் மூலம் அது தமது சிங்கள தேசத்தை காட்டிக் கொடுக்கும் வேலையை தொடங்கி இருப்பதை காண முடிகிறது. நாமெல்லாம் கத்தி சொன்னபோது செவி மடுக்காத இந்த ஊடகங்கள் இன்று தாமாகவே உண்மையை சொல்வதற்கு நாம் பாராட்டித்தான் தீரவேண்டும்.


ஆனாலும் தொடர்ந்து கத்திக் கொண்டிருப்பவர்கள் வீழ்த்தப்படுவார்கள். அவர்கள் மாட்டி முழிப்பார்கள். இது சிங்கள தேசத்திற்கு, அதன் அரச தலைவர்களுக்கு நிகழத்தான் போகிறது. ராசபக்சே தொடர்ந்து பொய்யை சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த பொய்யே ராசபக்சேவை வீழ்த்தும் பேரிடராக அமையப்போகிறது என்பதை நிகழ்வுகள் எடுத்து இயம்புகிறது. ஒரு கதை இருக்கிறது. நாமும் கதை சொல்லி நாளாகிவிட்டது. ஒரு காட்டு வழியாக மூன்று நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மூன்று நவரத்தின கற்கள் கீழே கிடைத்தது. அதை அவர்கள் ஆளுக்கொன்றாக வைத்துக் கொண்டார்கள். கொஞ்ச தூரம் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில் ஒரு திருடன் வருவது தெரிந்தது. அவனைப் பார்த்ததும் மூன்று பேரில் ஒருவன் அந்த திருடன் இங்கே தான் வருகிறான். அவனுக்கு ஒரு படையே இருக்கும். நாம் அவர்களை வெற்றிக் கொள்ள முடியாது. ஆகவே இந்த நவரத்தினக் கற்களை ஆளுக்கொன்றாக விழுங்கிவிடுவோம் என்றான்.


இந்த ஆலோசனை மற்றவர்களுக்கு பொறுத்தமானதாக இருந்தது. திருடன் பக்கத்தில் வந்தான். நண்பர்களை மிரட்டினான். எதாவது வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்துப் பார்த்தான். உடைகளை கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கி அலசினான். இவர்கள் கற்களை விழுங்கிவிட்ட காரணத்தினால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் திருடனுக்கு இவர்கள்மேல் சந்தேகம் தீரவில்லை. அவன் அவர்களை போகவிடாமல் நீங்கள் என் பின்னால் வாருங்கள். இல்லையென்றால் உங்களை வெட்டிக் கொன்றுவிடுவேன் என்றான். அந்த மூன்று நண்பர்களும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவன் பின்னால் சென்றார்கள். சிறிது தூரம் நடந்து சென்றதும் அங்கே மறைவான ஒரு இடத்தில் திருடர்களின் கூட்டம் ஒன்று இருந்தது.


அந்த திருடர்கள் கூட்டத்தில் ஒரு வியக்கத்தக்க கிளி வளர்க்கப்பட்டு வந்தது. அந்த கிளிக்கு ஒரு அபார ஆற்றல் இருந்தது. அதாவது யாராவது விலைமதிப்பற்ற தங்கம், வைரம், வைடூரியம் போன்ற பொருட்களை வைத்திருந்தால் அது கீ... கீ... என்று கத்திக் கொண்டே இருக்கும். திருடன் அந்த நண்பர்களை அங்கே அழைத்துச் சென்றான். அவர்களிடம் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறியும் பொருட்டு அவர்களை மிரட்டினான். அவர்கள் பணியவில்லை.


ஆனால் இவர்கள் சென்றவுடன் அந்த கிளி மட்டும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தது. அவர்களின் வயிற்றில் நவரத்தின கற்கள் இருப்பதை உணர்ந்த கிளி இடைவிடாமல் கூச்சல் போட்டது. ஆனால் அவர்களிடம் சோதித்தறிந்ததில் அப்படி எதுவும் இல்லை என்பதை திருடர்கள் கூட்டம் நம்பியது. ஆனால் கிளி மட்டும் மீண்டும் மீண்டும் கத்தியது. இறுதியில் திருடர்களின் தலைவன் அந்த மூன்று நண்பர்களையும் அழைத்து வந்து கயிற்றிலே கட்டி முடிந்தவரை உதைத்தான். அப்போதும் அவர்களிடமிருந்து உண்மை வரவில்லை. அவர்கள் வயிற்றை கீறிப் பாருங்கள் என்றான். வயிற்றை கீறி பார்த்தபோதும் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கிளி மட்டும் இடைவிடாமல் கத்திக் கொண்டே இருந்தது.


திருடர்களின் தலைவனுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பியது. இந்த முட்டாள்மவ கிளி சும்மா கத்திக் கொண்டு இருக்கிறதே என்று கோபப்பட்டு அந்த கிளியை அடித்துக் கொன்றுவிடுங்கள் என்று உத்தரவிட்டான். உடனே உடனிருந்த அவன் கூட்டாளிகள் கிளியை கொன்றுவிட்டார்கள். இந்த மூன்று பேரிடமும் ஒன்றுமில்லை. பாவம் அவர்கள் போகட்டும் என்று உத்தரவிட்டான் திருடர்களின் தலைவர். இவர்கள் மூவரும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடி தமது வீட்டை அடைந்தார்கள்.


நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குறித்து, அதன் நியாயத்தைக் குறித்து, எமது விடுதலையின் தேவையைக் குறித்து, கிளியைப் போல் கத்திக் கொண்டே இருந்தோம். ஆனால் இந்தியா திருடர்களான இவர்களைத்தான் நம்பியதே தவிர, சிங்களனைத்தான் நம்பியதே தவிர, கிளியை நம்பவில்லை. உண்மை பேசிய கிளி கொன்றொழிக்கப்பட்டது. உண்மையைக் கூறிய எமது தேசம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலம் பொறுத்தாவது இந்த உண்மை உலகிற்கு தெரியும். இந்த கதை யாருக்குப் புரியுமோ. இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் புரிந்தாலும், நாம் சாகும்போது கூட உண்மையைச் சொல்லிக் கொண்டுதான் சாவோம். இதுதான் நமக்கான நீதி என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.


நமது சமர்களத்தின் நாயகர்கள் அந்த கிளியைப் போல் திருடர்களுக்கெதிராக தொடர்ந்து களத்திலே இருந்தார்கள். அவர்களின் நியாயங்கள் நிராகரிக்கப்பட்டது. அவர்களின் உண்மைகள் அழித்தொழிக்கப்பட்டது. ஆனாலும்கூட ஒருநாள் உண்மை விளங்கும் என்பதற்கு அடையாளமாக நமக்கு எதிர்களத்தில் இருந்த ஊடகங்கள் இப்பொழுது உணரத் தொடங்கி இருக்கிறது என்றெல்லாம் நாம் மிகவும் இறுமாந்து விடக்கூடாது. அரசியல்களம் மாறியிருக்கிறது. உலக அரங்கில் சிங்கள பாசிச இனவெறி ராசபக்சே அரசு இன அழிப்பு குற்றவாளி என்பதற்கான சான்றுகள் அடுக்கடுக்காக தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் அரங்கில் ராசபக்சேவின் போர் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கான பருவ நிலை எமது இனத்திற்கு சாதகமாக மலரத் தொடங்கியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூட்டாளியான இந்தியாவும் தாம் இணைந்து வெட்கப்பட்டுவிடக் கூடாது. இல்லாவிட்டால் குற்றவாளி பட்டியலிலே இடம்பெற்றுவிடக் கூடாது என்பதற்காக தாம் புதிய அரசியலை தொடங்கி இருக்கிறது. அதன் அடையாளம்தான் என்.டி.டிவியின் செய்தி தொகுப்பாகும்.


1974ஆம் ஆண்டு கச்சத்தீவு நமது கரங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்டவுடனேயே, தமிழக மீனவர்களின் உரிமையும் அவர்களுக்கான உயிர் வாழ்வதற்கான ஆதாரமான கடல் தொழிலும் பிடுங்கப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகாலம் நாம் நூற்றுக்கணக்கான மீனர்வர்களை சிங்கள கடற்படையினர் கொன்றொழித்தபோதும் எமது மீனவர்களின் மீன்பிடி படகுகள் சேதப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்டபோதும் கண்டுகொள்ளாத இந்திய ஊடகம், இப்பொழுது முதன்முறையாக ராமநாதபுர மாவட்டத்தில் நாம் தாக்கப்படுகிறோம். எமது மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தியை வெளியிட்டுள்ளது, செய்தி தர்மம் என்பதை மீறி அது அரசியல் மாற்றத்தின் அறிகுறி என்பதை நாம் அவதானிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே இன்றைய அரசியல் களத்தை உற்றுப்பார்க்கும் சிலருக்கு இது அதிர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை. அரசியல் பார்வையாளர்களுக்கு இப்படியெல்லாம் நிகழும் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கிறார்கள்.


நாம் என்னவெல்லாம் சொன்னோமோ அவையெல்லாம் நிகழத்தொடங்கியிருக்கிறது. அதன் ஆரம்பக்கட்டம்தான் என்.டி.டிவியின் இந்த செய்தித் தொகுப்பு. நமக்கான நியாயம் என்பது இப்போதுதான் உலக அரங்கிற்கு புரிந்திருக்கிறது. எமது தேசிய தலைவர் எமக்கான விடுதலையை நாம் போராடித்தான் வெல்ல வேண்டும் என்பதை எதார்த்தமாக புரிந்து வைத்திருந்தார். இந்த போராட்ட வரலாற்றிலே சிறிதும் கற்பனையில்லை. எமது போராட்டம் என்பது வாழ்வியலோடு பின்ணி பிணைந்திருக்கிறது. எமது விடுதலை என்பது எமக்கு உயிரைவிட மேலானது என்பதை புரிந்து, இப்போர் களத்திலே தமிழீழ உறவுகள் ஒன்றிணைந்தே நின்றார்கள். அந்த களத்திலே மக்கள் வேறு, புலி வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் அரசியல்நெறி படுத்தப்பட்டார்கள்.


ஆகவே யாழ்பானத்தைவிட்டு வெளியேறியபோதும், கிளிநொச்சியைவிட்டு வெளியேறியபோதும் அவர்கள் புலிகளை பின்தொடர்ந்தார்கள். காரணம் எமது தேசிய ராணுவத்தால் மட்டும்தான் எமக்கான விடுதலையை மீட்டுத்தர முடியும் என்பதை உலகெங்கும் வாழும் உறவுகள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் எமது தேசிய தலைவரின் தலைமையை உள்ளன்போடு நேரிய சிந்தனையோடு, நேர்மையான மனநிலையோடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆகவேதான் எத்தனை இடர் வந்தபோதிலும் அத்தனை இடர்களையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழ் உறவுகளுக்குள் எஃகைப்போன்று இறுகிப் போயிருக்கிறது.


இதுவரை ஆயிரக்கணக்கான குண்டுகள் வீசப்பட்டபோதும், தம் கண்ணெதிரே தமது உறவுகள் வெடித்து சிதறியபோதும், உள்ள உறுதியில் இந்த நொடிவரை யாரும் சிதறிப்போகாமல் இருக்கிறார்களே இதுதான் தமிழீழத்தின் வெற்றிக்கு அடையாளமாக இருக்கிறது. ஒரு பாரிய பின்னடைவை சந்தித்தப் பின்னரும் முன்னைக் காட்டிலும் மிக வீச்சோடு தமது களப்பணியை உலகெங்கும் இருக்கும் உறவுகள் தொடர்கிறார்கள் என்றால் அது நமக்கான நாடு அமைந்துவிட்டது என்ற நம்பிக்கையில்தான். இந்த நம்பிக்கைக்கு எமது தேசிய தலைவரின் ஆளுமையும், அவரின் தொலைநோக்கு பார்வையும், அவர்பால் மக்கள் கொண்ட அன்பும், அவர் தமது மக்கள்மீது கொண்ட அன்பும், விடுதலையை வென்றெடுக்க அவர் நடத்தும் நேரிய சமரும் நம்மை மேலும் மேலும் உற்சாகம் கொள்ள வைக்கிறது.


நாம் தோற்றுவிட மாட்டோம் என்பதை நமது தேசிய தலைவரின் முகத்தைப் பார்த்தாலே புரிந்து விடுகிறது. காலநிலை, கடுமையான வேதியியல் புகை, கொத்துக் குண்டுகள், கையெறி குண்டுகள், செல்லடி, வான்வழி தாக்குதல், வன்புணர்ச்சி, சித்ரவதை, பட்டினி இத்தனையும் தாண்டித்தான் நமது விடுதலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே இந்த உலகில் வேறு எந்த இனத்திற்கு இவ்வளவு இடையூறுகள் வந்திருக்காது. இவ்வளவையும் தாங்கிக் கொள்கிறோம் என்றால், நமக்குள் உண்டான உறுதி சாதாரணமானது கிடையாது. நாம் சோர்ந்து போகும்போதெல்லாம் தேசிய தலைவரின் முகத்தைப் பார்த்தால் மீண்டும் உற்சாகம் பீறிடுகிறது. மீண்டும் நமது போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இனி நமது போராட்ட களங்களில் தலைமைத் தாங்க தேசிய தலைவர் தேவையில்லை. அவரின் முகம் மட்டுமே போதும், நாம் வெல்வதற்கு.


நமது மனங்களில் மாட்டி வைத்துள்ள அவர்தம் முகத்தை நமது இல்லங்களில் படமாக மாட்டி வையுங்கள். அதை பார்க்கும் போதெல்லாம் நமது விடுதலையின் தேவை நமக்குப் புரியும். நாம் வெல்வோம். தமிழீழம் வெல்லும். தமிழர்கள் வெல்வார்கள். இந்த உலக வரைப்படத்தில் தமிழனுக்கான நாடு இடம்பெறும். அதற்கான காலம் அருகே இருக்கிறது. சோர்வில்லாமல் பயணப்படுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக