வெள்ளி, 4 ஜூன், 2010

செய்தித் துளிகள்........



இலங்கையில் மனித உரிமை மீறல்;சுயாதீன விசாரணை தேவை -பிலிப் அல்ஸ்டன்
-----------------------------------------------------------------------------------
இலங்கையில் இடம்பெற்றிருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டு வைத்த வருடாந்த அறிக்கையிலேயே, இதனைக் கூறினார்.


விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த யுத்தத்தில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், அங்கு மனித உரிமை மீறல் தொடர்பில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பிலிப் அல்ஸ்டன் சுட்டிக்காட்டினார்.


இந்நிலையிலேயே, சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டார்.


இஃபாவில் கலந்துகொள்ளாத நடிகர்களின் திரைப்படங்களுக்குத் தடைவிதிக்கப்படாது அமைச்சர் கெஹலிய கூறுகிறார்.
----------------------
இலங்கையில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் (இஃபா) விருது வழங்கும் வைபவத்தை தமிழ்த் திரையுலகினர் புறக்கணித்திருப்பதும் முன்னணி இந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்திருப்பதும் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதற்கு தடை விதிப்பதற்கான காரணமாக இருக்காதென அரசாங்கம் தெரிவிக்கிறது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த கருத்தை வெளியிட்டார்.


இஃபா விருது வழங்கும் வைபவம் இலங்கையில் நடத்தப்படுவதையிட்டு தமிழ்த் திரையுலகினர் அதைப்புறக்கணித்துள்ளதுடன், மட்டுமல்லாது அமிதாப்பச்சன் போன்ற பிரபல இந்தி சினிமா நட்சத்திரங்களும் அதில் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவது தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கக் கூடுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல;


இங்கு சினிமாக்களை தடை செய்வதற்கு அது ஒரு காரணமாக எமக்கு இருக்காது. சிலர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. சினிமா என்பது அதைவிட மாறுபட்டதொன்று.


அது மட்டுமல்லாது இதற்கு முன்னர் இந்த விருது வழங்கும் வைபவம் பிரிட்டன், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்றிருக்கிறது. இதன்போதும் விளம்பரப்படுத்தப்பட்ட அனைவரும் அந் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவரவரது வசதிகளுக்கு ஏற்பவே கலந்து கொள்வர் என்று கூறினார்.


மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் புதிய காலக்கெடு ஆகஸ்ட் மாதமே சாத்தியம் அமைச்சர் மில்றோய்
-----------
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக அரசாங்கம் புதிய காலக்கெடுவை அறிவித்திருக்கிறது. அரசின் 3 முகாம்களில் சுமார் 60 ஆயிரம் பேர் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்.) கூறுகிறது.


ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கெடுவானது யதார்த்த பூர்வமானது என்று மீள்குடியேற்றத்துக்கான புதிய அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ ஐ.ஆர்.ஐ.என்.னுக்குக் கூறியுள்ளார். அத்துடன், சாத்தியமான அளவுக்கு மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.


முன்னர் ஏப்ரல் வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அது சாத்தியமானதல்ல என்று குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்குப் பின்னர் அதிகளவிலான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வீடுகளை புனரமைத்தல் மற்றும் ஜீவாதார உதவித்திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துதல் என்பன இவற்றில் உள்ளடங்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


மீள்குடியேற்றத்திற்கு அனுசரணையாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்ல மிக ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால், கண்ணிவெடிகளை அகற்றும் பணி முடிவடையும் வரை பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அவர்களை அனுமதிக்க முடியாது. அவர்களின் சொந்தக்கிராமங்களில் ஜீவாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீள்குடியேற்றவும் சில திட்டங்களை நாம் தயாரித்து வருகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக