வியாழன், 3 ஜூன், 2010

செய்தித் துளிகள்



ஐ.தே.க – பாலித ரங்கே பண்டார பிளவு.............ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை........,தென்னிந்திய திரைப்பட சபை மீண்டும் எச்சரிக்கை............
.


ஐ.தே.க – பாலித ரங்கே பண்டார பிளவு
03.06.10
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அந்தக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கும் இடையிலான பிளவு வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், பாலித ரங்கே பண்டார தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் எழுத்து மூலம் அவர் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக சட்டத்தரணி அசேந்திர சிறிவர்த்தன தலைமையில் ஒழுக்காற்றுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார்.


ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணைக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.


இதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் டெயிலிமிரர் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதற்குப் பதிலளித்த அவர், மேற்படி தாக்குதலின் பின்னர் வாய்மூலமாக மாத்திரமே முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.


எழுத்து மூலம் தான் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும், ஏனெனில், தான் தாக்குதலுக்குள்ளான நிலையில் பல வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்ததாகவும் தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகுவதற்கு அல்லாவிடில் அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருப்பதாக பாலித ரங்கே பண்டார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றிருந்த கூட்டத்தின்போது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.


மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை; அழைப்புக்கு காத்திருக்கும் கூட்டமைப்பு
03.06.10
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


இந்நிலையில் குறித்த அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தயாராக உள்ள போதிலும் அதற்கான அழைப்பொன்றும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்றும் இரா.சம்பந்தன் கூறினார்.


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு உட்பட சில விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.


அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் வெகு விரைவில் பெச்சுவார்த்தையொன்று இடம்பெறும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை வந்த கலைஞர்களுக்கு தென்னிந்திய திரைப்பட சபை மீண்டும் எச்சரிக்கை


கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்தி நடிகர், நடிகைகளை புறக்கணிப்போம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று கொழும்பில் ஆரம்பமாகும் இந்த திரைப்பட விழா நாளை மறுதினம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இதில் கலந்துகொள்வதற்காக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் எல்.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கரீனா கபூர், விவேக் ஒபராய், பிபாஷாபாசு, ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக், சயீப் அலிகான், பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி, ரன்பீர் கபூர், சுனில் ஷெட்டி, சல்மான் கான், அமீர்கான் போன்றோர் வந்தடைந்துள்ளனர்.


இந்நிலையிலேயே, குறித்த விழாவில் பங்கேற்கும் இந்தி நடிகர், நடிகைகளை புறக்கணிப்போம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக