புதன், 9 ஜூன், 2010

சீறிவரும் புலியாக...!-கண்மணி



ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான் வரலாறு. சமநிலை காண்பதற்கு வரலாறு ஒன்றும் எந்திரம் அல்ல. அது தம்மை இழந்து, தம்மை அழித்து, அதிலிருந்து துளிர்விடும் ஓர் அற்புதம். படர்ந்து வளரும் மரங்களின் இலைகள் அந்த மரம் உயிர்வாழ உரமாவதை இயற்கை தத்துவமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே எந்தஒரு இயக்கமானாலும் போராட்ட வரலாறானாலும் அதை விழுவதும், எழுவதும் இயல்பானதுதான். விழுவதிலிருந்து எழாமல் இருப்பதுதான் நம்மை ஏற்றமுறாமல் செய்துவிடும்.
ஆனால் நம்முடைய விடுதலைப் போராட்டம் மிக சிறப்பான நிலையை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உலகெங்கும் நமக்கான எழுச்சி நிலை மேலோங்கி இருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது? இந்த நிகழ்வு யாராலும் திணிக்கப்பட்டது கிடையாது. இயற்கையாக அவை அமைகிறது. அமைய வேண்டும் என்பது நியதி.


காரணம், ஒடுக்கப்பட்ட எந்த ஒரு வரலாறும் இறுதிவரை ஒடுக்குமுறைக்கு வாழ்க்கைப்பட்டிருப்பது கிடையாது. மண் மூடி கிடக்கும் சிறு விதை மண்ணின் வலிமையைக் கண்டு அச்சமுற்று, மண்ணுக்குள் புதைந்து போனால் அவை பிணமாகிவிடும். ஆனால் அந்த மண்ணை கீறிக் கொண்டு முளைவிடும்போது அவை மரமாகிவிடுகிறது. எந்த விடுதலைப் போராட்டமானாலும் அவை மண்ணுக்குள் புதைந்து கிடக்க விரும்புவது கிடையாது. இது மாந்த வாழ்வில் தொடர்ந்து நாம் கண்டுக் கொண்டிருக்கும் இயக்க தத்துவமாகும். எப்போது குமுக வாழ்வு தோன்றி, மொழி, கலாச்சாரம் தோன்றியதோ, மாந்த வாழ்வில் விலங்கின நிலையிலிருந்து உருமாறி தமது ஆறாம் அறிவை பயன்படுத்தி அவன் தம்மை உயர்த்திக் கொள்ள முனைந்தானோ, அன்றுமுதல் விடுதலைக்கான போராட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.


இந்த விடுதலையை ஒடுக்க ஒரு குழு முனைப்புக் காட்டுவதும், அதை உடைத்தெறிந்து தமது எழுச்சியை அந்த ஒடுக்கப்பட்ட குழு வெளிகொணர்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடரும். தொடரத்தான் வேண்டும். இது மாந்த வாழ்வின் வரலாற்று கட்டாயம். இதில் மீறுதல் என்பதற்கு ஒரு சிறு துளிக்கூட இருக்க வாய்ப்பில்லை. மீறுதலே விடுதலையின் தொடக்கமாக இருக்கிறது. புதைந்துபோதல் இயற்கைக்கு முரண் செயல் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் எந்த ஒரு அகப்புறத் தன்மையும் புதைந்து போதலால் அடையாளத்தை இழந்து விடுகிறது. அது தமது அடையாளத்தை இழப்பதின் மூலம் தம்மையும் இழந்துவிடுகிறது. இது அழிவு நிலை தத்துவம்.


அப்படியானால், மாந்த வாழ்வு மீறுதலில் இருந்தே நிறைவடைந்திருக்கிறது. கடல் நீரில் படகு செலுத்துதல் நீரை மீறி செல்லுதல். மாந்த வாழ்வில் நீரை மீறிச் செல்லுதல் அவனுக்கான வாழ்வின் அடையாளத்தை கொடுத்தது. வானிலிருந்து ஏதோ இனம் புரியா உணர்வு இருப்பதாய் திகைத்துக் கொண்டிருந்தபோது, வானை நோக்கி விண்கலம் செலுத்தப்பட்டது. இது வானை மீறுதலாக அமைந்தது. இந்த மீறுதல் நமக்கு பல்வேறு அறிவியல் உண்மைகளை வெளிகொணர பேருதவி புரிந்தது. பூமியை குடைந்து உள்நோக்கி நுழைந்து கனிமங்களை எடுத்து வந்தபோது, அவை எரிசக்தியாய் மாந்த வாழ்வில் பிணையத் தொடங்கியது.


நிலக்கரி என்பதை மாந்தம் அடையாளம் கண்டது. பூமியைக் குடைதல் எனும் மீறுதலே அவனுக்கு பல கனிமங்களை அடையாளப்படுத்தியது. இது வெற்றியின் அடையாளமாக மாந்த வாழ்விற்கான ஒரு பருப்பொருளாக இருக்கத் தொடங்கியது. ஆக, இயற்கையை மீறுதல் என்பது இருவேறு பொருள் கொண்டதாக இருக்கிறது. இயற்கையை நேசித்தல் என்பது ஒரே பொருள் கொண்டதாக நிறைவேறுகிறது. மீறுதல் என்றால் நாம் மாந்த தேவைக்கான வெற்றியை அடைவதற்காக மீறும் போது அவை அறிவியலாக உருமாற்றம் பெறுகிறது. ஆனால் தன்னலத்திற்காக காடுகளை அழிப்பதும், தன்னுடைய தன்னலத்திற்காக இயற்கையை சுரண்டுவதும் ஒரு மீறுதல் தான். இவை எதிர் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நாம் முதல் சொன்ன மீறுதலாக இருக்கிறது. நாம் அடிமை காற்றை கிழித்து, விடுதலை வெளியை அடைய மீறுதலை தொடங்கினோம்.


நமது உரிமைகளை வென்றெடுக்க அடிமைத்தளையை உடைத்தெறிய நாம் மீறுதலை கைக் கொண்டோம். இந்த மீறுதல் ஒவ்வொரு நிலையிலும் தேவைப்படுகிறது. இதுதான் நமது விடுதலையின் அடையாளமாக, நமது மாந்த வாழ்வின் எழுச்சியாக பீறிட்டு கிளம்புகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இந்த மீறுதல் அடங்கா எரிச்சலை கிளப்புகிறது. ஆனால் நமக்கு அதுதான் மீட்சியைத் தரும் என்பதால், நாம் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் மீறுதலை கைக் கொள்கிறோம். இந்த மீறுதலுக்கான சமர் களத்தில் பல்வேறு சம்பவங்கள் சுவையாகவும், அறுவெறுப்பாகவும், கண்ணீராகவும், கவலையாகவும் சுழன்று வீசுகின்றன. பயணம் போகும்போது நாம் பல்வேறு நிலங்களை கடந்துதான் முடிவுக்கு வரவேண்டும். அப்படி கடக்கப்படும் நிலங்கள்தான் நமது ஒவ்வொரு நிகழ்வுமாக நம்மை அழுத்திப் போடுகிறது.


தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் அறவழி போராட்டத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த திலீபனின் எழுச்சிமிக்க மரணப் போராட்டம் இணையில்லா போராட்ட வரலாற்றின் அதன் ராஜ கிரீடத்தில் ஒரு வைரக்கல்லாக இன்றுவரை யாராலும் அகற்ற முடியாத அர்த்தம் பொதிந்த நிலைத்த தன்மை வாய்ந்த பதிவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் அருந்தாமல் தமது உயிரை ஒவ்வொருநாளும் காலத்திற்கு திண்ணக் கொடுத்த அந்த சாகா வரம் பெற்ற தியாக செம்மல் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதுபோல தமிழ்நாட்டிலும் சாகும்வரை போராட்டம் நடத்தப்பட்டது, வெறும் 4 மணி நேரத்திற்கு. இப்படி போராட்டங்களை அவமானப்படுத்துவதே சிலருக்கு வேலையாக போய்விட்டது.


தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் நாம் பல்வேறு சமர் கள நாயகர்களை காணமுடியும். நமது முதல் கள பலியான சங்கர் தொடங்கி, சிங்கள பாசிச அடக்குமுறையாளர்களின் கொட்டத்தை வேறறுத்த மில்லர் வரை நாம் பல்வேறு மாவீரர்களை நம்முடைய போராட்ட வரலாற்றிலே கொடையாக கொடுத்திருக்கிறோம். கொடை கொடுத்து வெல்வதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் நம்முடைய போராட்டத்திலே நாம் உயிர்கொடை கொடுத்து விடுதலைக்காக இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். விடுதலை என்பது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இணையில்லா செயல். அது காலத்தை திசைமாற்றும். கடும் சூறாவளியை ஓரிடத்தில் நிலைத்துநிற்க கட்டளையிடும். ஆற்றின் பாதையை அடங்கச் சொல்லி விரல் நீட்டும். காரணம், விடுதலை தூய்மையானது. அது தமக்கானதல்ல. தமது எதிர்கால சந்ததிக்கானது. நமது நிகழ்கால வாழ்வே இந்த எதிர்கால சந்ததிக்காக நாம் கொடையாக தருகிறோம். தமிழீழத்தின் விடுதலையை எமது மேதகு தேசியத் தலைவர் அவர்கள் உள்ளார்ந்து நேசித்தார்.


ஆகவேதான் தமது வாழ்வையே இந்த போராட்டத்திற்கு கொடையாகத் தந்தார். அவர் போராட்டத்தை நடத்தவில்லை. விடுதலைப் போராட்டமாகவே மாறி நின்றார். இப்படி இவர் நிகழ்த்திய இந்த போராட்டத்தின் தளபதிகள் தேசிய தலைவரின் முகங்களாக, ஆன்மாக்களாக, அடலேறுகளாக தம்மை அடையாளப்படுத்தினார்கள். ஒரு தேசிய தலைவரின் சுவாசக் காற்று களத்தில் இருந்த ஒவ்வொரு புலியின் நுரையீரலிலும் நிலைத்திருந்தது. தேசியத் தலைவரின் இதயம் புலிகளின் இதயங்களாக மாற்றப்பட்டிருந்தது. ஆகவேதான் தாம் ஒவ்வொரு நிலையிலும் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளாமல் தமது விடுதலையை சுட்டிக் காட்டிய அளப்பரியா பணியை அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். தற்பொழுது தேசியத் தலைவரின் நிழலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொட்டு அம்மான், இயக்கத்தின் நிழல் என்று சொல்வதை விட, தேசிய தலைவரின் அடையாளம் என்றுகூட சொல்லலாம்.


எம் தலைவர் எதை விரும்பினாரோ, அதைவிட கூடுதலாக எம் தலைவர் எதை திட்டமிட்டாரோ, அதில் ஒரு சிறு துளிக்கூட அசைவு ஏற்படாமல் வென்று முடித்த மகத்தான தளபதிகள் தலைவரின் அருகில் இருந்ததால்தான் இந்த விடுதலை நமக்கு கைக்கு வந்தது. நம்மால் மீட்டெடுக்க முடிந்த இந்த விடுதலைக்கு தேசிய தலைவரின் இடைவிடாச் சிந்தனை, அவரின் தொலைநோக்கு, அச்சமற்ற செயல்பாடு, அடக்கமுடியாத தமிழீழ தாகம், தம் மக்கள் மேல் கொண்ட அன்பு, தன் மண்ணின் மீது கொண்ட பற்று, அதையெல்லாம் மீறி விடுதலையின் மீது கொண்ட காதல் தம்மை ஒவ்வொரு அடியும் உற்சாகமாகவும், அசைக்க முடியாததாகவும் நடத்திச் செல்ல முடிந்தது.


எமது இயக்கம் கட்டியமைக்கப்பட்ட போது முதல்முறையாக ஒரு வாக்குச்சாவடி தாக்குதல் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டபோது, அந்த தாக்குதல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தாக்குதலில் ஒரு சிங்கள படைவீரன் சுட்டுவீழ்த்தப்படுகிறான். சுற்றிலும் பலத்த காவல். சுட்டு வீழ்த்தப்பட்டவனின் கரத்தில் நவீன ரக துப்பாக்கி. திடீரென மதில் சுவர் தாண்டி ஏறி குதித்த ஒரு இளைஞன், அந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மீண்டும் தமது இடத்திற்கு திரும்புகிறான். அதற்காக இயக்கம் அவனுக்கு தண்டனை வழங்குகிறது. காரணம், தவறு ஏதும் செய்யவில்லை. தமது இயக்கத்திற்கு ஒரு புதிய துப்பாக்கியை கொண்டு வந்து சேர்த்தான். ஆனால் இயக்கப் போர் முறைக்கு எதிராக கட்டுப்பாட்டை மீறியதால் இந்த தண்டனை அவனுக்கு வழங்கப்பட்டது.


அந்த தண்டனையைக் கூட மகிழ்வோடு அனுபவித்து, மேலும் மேலுமாய் அந்த இயக்கத்திலே தம்மை இணைத்து, அந்த இயக்கத்தோடு தம்மை ஒரு உயிராக பொருத்திக் கொண்டவன். அவன்தான் உலகெங்கும் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சிவசங்கரன் சண்முகநாதன். ஒரு நிகழ்ச்சியில் தமது கையைக்கீறி குருதியைத் தொட்டு அன்றைய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவருக்கு பொட்டிட்டதால் அவரை பொட்டு அன்று அழைத்தார்கள். வேடிக்கையாக சொல்லப்பட்ட இந்த பொட்டு, நமது இயக்க வரலாற்றில் திலகமாக மாறி, விடுதலைக்கு உயிர் பொருள் ஊட்டுகிறான். இப்படிப்பட்ட உயிர் அணுக்கள் இந்த விடுதலைப் போராட்டத்திலே கலந்திருக்கும்போது, எவன் வந்து நமது விடுதலையை நொறுக்கிவிட முடியும்? யாரால் நமது விடுதலையை தடை செய்ய முடியும்? அடக்க முடியாத ஆற்றல் கொண்ட இந்த வரிசையின் வீரர்களை நாம் பெற்றிருக்கின்றோம். இதைவிட செழிப்பான, வீரியம் பொருந்திய அடுத்த தலைமுறை அடையாளங்களை நம் பக்கத்திலே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க விடுதலை ஒன்றும் நம் கைக்கெட்டாத மாபெரும் ஆற்றல் அல்ல. அது நாம் தொட்டுவிடும் தூரத்தில்தான் கிடைக்கிறது.


நாம் துடிப்புடன் சென்று அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான களப்பணியை தோய்வில்லாமல், நம்பிக்கை இழக்காமல், எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல், அடக்குமுறையை தூள் தூளாக்கும் மனநலம் படைத்த புலிகளின் பாசறையிலிருந்து புறப்பட்ட தமிழ்குலம் நாம் என்பதை நமது பகைவனுக்கு எடுத்தியம்ப வேண்டும். துள்ளி எழும் வேலாக, சீறிவரும் புலியாக நமது செயல்பாடு அமைய வேண்டும். விரைவில் நாமெல்லாம் ஒன்றிணைந்து சங்கே முழங்கு என தமிழர் அடிமைதனை ஒழித்த சங்கே முழங்கு என வெற்றி முழக்கம் எழுப்புவோம். நமது முரசறையில் இந்த நரிகள் கூட்டம் நாலா திசையில் ஓடி மறையும். விடுதலை வெளி விரியும். புலிக் கொடி பறக்கும். தமிழீழம் சிறக்கும். தலைவன் சிரிப்பில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக