புதன், 9 ஜூன், 2010

இனவாதம் தூண்டப்படுமானால் போராட்டம் வன்னிக் காட்டிலன்றி .................!?

அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டு மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட்டு பழைய அழிவுப் பாதையிலேயே சென்றால் நாட்டை பிளவுபடுத்தும் போராட்டம் இனி வன்னிக் காட்டிலன்றி, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நியூயோர்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும்
என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
நாட்டில் யுத்தம் முடிவடைந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட போதிலும் அரசாங்கத்துக்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிந்ததா? எனினும் வன்னி பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டப்படுவதாக தகவல் கிடைத்திருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், படையினர் விடுதலைப்புலிகளை தோற்கடித்து அவர்களுக்குரிய பணியை நிறைவேற்றிவிட்டனர். இனி அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது அரசியல் வாதிகளின் பொறுப்பு. நாமே அதை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் இராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதியை தூக்கிலிடப்போவதாக பாதுகாப்பு செயலாளர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.


தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீண்டகால சமாதானத்திற்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டியது அவசியம் ஆனால், இன்று வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் இரண்டாம் பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


அது மட்டுமல்லாது வன்னிப் பிரதேசங்களில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டப்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றனர். அரசியல் தீர்வு பற்றி அக்கறைப்படாது ஜனாதிபதியின் பதவிக் காலம் பற்றியே முன்னுரிமை வழங்குகின்றனர். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண் டும்.


எனினும் அரசாங்கமோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் வளர்ச்சி குறித்தே கவனம் செலுத்துகிறார்கள். நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தால் நாட்டை பிளவுப்படுத்துவதற்காக மீண்டுமொரு போராட்டம் ஆரம்பமாகக் கூடும்.


எனினும் அந்த போராட்டமானது வன்னி காட்டிலன்றி நியூயோர்க், வாஷிங்டன் போன்ற பலம்வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும். போராட்டத்தில் ஆயுதங்களின்றி தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும். போராளிகள் சயனைட் குப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டவர்களாக இல்லாமல் நன்கு கல்வியறிவுடைய புலம்பெயர் வாழ் மக்களினாலேயே போராட்டம் இந்த மோசடி ஆட்சியின் கீழ் ஏற்படபோகின்றது.


பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பேதங்களற்ற உணர்வு தேவை. அது அரசியல் தீர்வொன்றின் ஊடாக தான் சாத்தியமாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக