புதன், 9 ஜூன், 2010

செய்தித் துளிகள்


பாராளுமன்றத்தில் 69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்
--------------------------------------------------
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் திருத்தம் செய்யப்பட்ட அவசர காலச்சட்டம் மீதான பிரேரணை 69 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த போதும் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.ஏ. காதர் ஆளும் கட்சியுடன் இனைந்து அவசரகாலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்.

இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதோடு வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடதக்கது

புனர்வாழ்வு முகாமிலுள்ளோரை பார்வையிட இலவச பஸ்சேவை
----------------------------------------------------
விடுதலைப் புலிகள் உறுப்பினர்களாக இருந்து தற்போது வெலிக்கந்தைப் பகுதியில் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்று வருபவர்களை பார்வையிட உறவினர்களுக்கான இலவச பஸ்சேவை வவுனியாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மனிதஉரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இச்சேவையானது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதற்கென வவுனியா வைரவப்புளியங்குளம் மூன்றாம் ஒழுங்கையிலுள்ள மனித உரிமைகள் இல்லத்தில் முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுமாறும் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை, பதிவுகளை மேற்கொண்டு தமக்கான திகதிகளை பெற்று அன்றைய தினமே அங்கு காலை சமூகமளிக்குமாறும் மனிதஉரிமை இல்லப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

என் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய பெண் காதலியாக இருந்திருந்தால் பெருமையடைவேன் சபையில் ஜெனரல் பொன்சேகா
----------------------------------
‘என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பெண் என் காதலியாக இருந்திருந்தால் அது குறித்து நான் பெருமையடைவேன்’ என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் கூறியதாவது;

« என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பெண் என் காதலியென அமைச்சர்கள் கூறுகின்றனர். அவ்வாறான ஒருவர் எனது காதலியாக இருந்திருப்பின் நான் பெருமையடைவேன்.

சபை நடவடிக்கைகளை பொதுமக்கள், மாணவர்கள் அவதானிக்கின்றனர் என்பதனால் இங்கு அர்த்தமற்ற பேச்சுகளைப் பேச இடமளிக்கக்கூடாது. இராணுவ அதிகாரிகள் தமது மனைவி மீது நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, இராணுவ வீரர்களைத் தரக்குறைவாக பேசக்கூடாது.

என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பெண் என் காதலி என்கின்றனர். 32 பெண்களை நான் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கும் அதிகாரம் உள்ளதா? போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபட முடியும். இராணுவத்தினர் ஒருபோதும் தரக்குறைவாகச் செயற்படமாட்டார்கள்

தனுன திலகரட்ண நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக தெரிவிப்பு: இன்ரர்போலின் உதவியை நாடும் பொலிஸார்
==================================
ஹைகோப் நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைதுசெய்யப்பட வேண்டிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ண நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

அவர் கடல் வழியாக படகொன்றின் மூலம் தப்பிச் சென்றிருக்கலாமென புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தியிருக்கும் பொலிஸார் தனுனவைக் கைதுசெய்யும் பொருட்டு சர்வதேச பொலிஸாரின் (இன்ரர்போல்) உதவியை நாடியுள்ளனர். தனுன திலகரட்ணவுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள், உறவினர்கள், அவரிடம் வேலை பார்த்தவர்கள் உட்பட பலரிடம் பொலிஸார் இதுவரையில் வாக்குமூலங்களைப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பாவித்த கையடக்கத் தொலைபேசியும் தற்போது துண்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பொலிஸார் அவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கிடையில்தான் தப்பிச் சென்றிருக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.

அவர் உடனடியாக சரணடையத் தவறினால் அவர் பெயரில் காணப்படும் அத்தனை சொத்துகளும் பறிமுதல் செய்யப்படுமெனவும் அதற்கான உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக