ஞாயிறு, 20 ஜூன், 2010

தமிழர் தரப்பின் நிலை..........

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் எப்படியெல்லாம் பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நாளுக்கு நாள் எம்மால் உணர முடிகிறது.
அரசியல் ரீதியாகவும் சரி- உரிமைப் போராட்ட ரீதியாகவும் சரி- ஊடகத்துறை ரீதியாகவும் சரி- தமிழர் தரப்பின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
தமிழர்களாகிய எமக்குள்ளே சண்டை போட்டுக் கொள்வதற்குத் தான் எமக்கெல்லாம் நேரம் கிடைத்துள்ளது.

ஆனால் சிங்களதேசமோ காலை நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு- நிறையவே காரியங்களைச் சாதிக்க முனைகிறது.
எப்படியெல்லாம் தமிழர் தேசத்தை விழுங்கலாம்-தமிழரைப் பலவீனப்படுத்தி ஒன்றுமில்லாதவர்கள் ஆக்கலாம் என்று கணக்குப் போடுகிறது.
தமிழரின் பலம் இப்போது அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் தான் தங்கியுள்ளது.


இது சிங்களதேசத்துக்கு நன்கு தெரியும்.


எனவே பொருளாதார ரீதியாக எம்மை வளரவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் சிங்களதேசம் இறங்கியுள்ளது.
வெளிப்படையாக- வடக்கில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைக்கிறது சிங்கள தேசம்.
வடக்கில் பொருளாதார வாய்ப்புகள் குவிகின்றன என்று செய்திகளும் வருகின்றன.


ஆனால் உண்மை அதுவல்ல.


உலகத்தை நம்ப வைப்பதற்காக சில காரியங்கள் செய்யப்படுகின்றன.
சர்வதேச தலையீட்டைத் தட்டிக் கழிக்க முடியாமல் சில காரியங்கள் செய்யப்படுகின்றன.
ஆனால் திறந்த மனதுடன் சிங்களதேசம் தமிழருக்காக எதையும் செய்து விடும் நிலையில் இல்லை.
வெளிநாட்டு உதவிகளில் செய்யப்படும் அபிவிருத்தித் வேலைத்திட்டங்கள் தவிர்ந்த- வேறெந்த உருப்படியாக முதலீட்டுத் திட்டங்களாவது வடக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?
அம்பாந்தோட்டையில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டுகிறது சிங்களதேசம்.


காரணம் அது சிங்களவர்களின் பாரம்பரிய பூமி.


அதில் நூறில் ஒரு பங்கு முதலீட்டுடன்- ஏதாவதொரு திட்டத்தையாவது சிங்களதேசம் வடக்கில் நடைமுறைப்படுத்தியுள்ளதா?
புலிகளிடம் இருந்து வடக்கை மீட்டதற்காக வெற்றி விழாக் கொண்டாடும் சிங்களதேசம்- இந்த ஒரு வருட காலத்தில் வடக்கில் எத்தனை கோடி ரூபா முதலீட்டில் தொழிற்துறைசார் திட்டங்களைத் தொடங்கியுள்ளது?
ஒரு தொழிற்சாலைக்காவது அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறதா?
இல்லை- எதுவுமேயில்லை.
ஏதோ தும்புத் தொழிற்சாலை, பனங்கட்டித் தொழிற்சாலை என்று பூட்டிக் கிடந்ததைத் திறந்து வைத்துப் படமெடுத்து உலகத்தை ஏமாற்றும் முயற்சிகள் தான் நடக்கின்றன.
இவையெல்லாம் சிறுகைத்தொழில் முயற்சிகள்.
இவற்றின் சந்தை வாய்ப்பும் பரப்பும் குறுகியது.
இதன்மூலம் தமிழரின் தேசிய பொருளாதார பலத்தை பெரியளவில் கட்டியெழுப்ப முடியாது.
ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு தொழில் முயற்சியையாவது அரசு வடக்கில் தொடங்கவும் இல்லை- தொடங்குவதற்கு முனையவுமில்லை.
தமிழர்கள் பொருளாதார ரீதியாகப் பலம் பெற்று விடக் கூடாதென்பதால் தான் சிங்களதேசம் இப்படி நடந்து கொள்கிறது.
தமிழரைப் பொருளாதார ரீதியாக முன்னேற விடக் கூடாதென்ற வெறி அவர்களுக்கு இருக்கிறது.
தமிழரை அடக்கியாளும் போக்கில் இருந்தோ- அவர்களை ஒன்றுமில்லாதவர்களாக்கும் எண்ணத்திலிருந்தோ சிங்களதேசம் விடுபடவில்லை.
டி.எஸ்.சேனநாயக்க தொடங்கி மகிந்த ராஜபக்ஸ, வரைக்கும் இதுவே அவர்களின் எண்ணம்.
தமிழரின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும்- அதற்கான கட்டுமானங்களை எழுப்புவதற்கும் ஒரு கட்டமைப்பு இருந்தது.
அது முள்ளியவாய்க்கால் பேரழிவோடு முற்றாகவே தகர்ந்து போனது.
இந்த நெருக்கடியான சூழலில் பொருளாதார ரீதியாக எம்மை வளப்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனமானது.
ஆனால் அதற்காக வாய்ப்புகளை விட்டு வைக்காமல் செயற்படுகிறது சிங்களதேசம்.
சிங்களதேசத்தின் இந்தச் சதியை முறியடித்து முன்னேறாத வரை எம்மால் எதுவுமே செய்ய முடியாது.
அவலங்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக