ஞாயிறு, 20 ஜூன், 2010

உலக அகதிகள் தினம்( World Refugee Day)

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.


உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. இத் தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன..


அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.


அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12, 019, 700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34, 000, 000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. 2009 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பீ.பீ.ஸி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.


ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவிலானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்த்தானுகராலயம் தெரிவிக்கின்றது. அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிக அளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின்றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பி்டத்தக்கது.


அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும் 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.


அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் எனப் படுகின்றது.


இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும்கூட, கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.


2007ஆம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3, 50, 000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.


அதேநேரம், 1990களில் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்ட நேரம் சுமார் 1இலட்சம் அளவில் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். எமது இலங்கiயில் 30ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர் எனக் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது {2009 june} 117 முகாம்களில் 75, 738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வட புலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்.


அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும்போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனலாம். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.. ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே! அழகான இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து, உலகமெங்கனும் சமாதானமும், அமைதியும் , இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக