ஞாயிறு, 20 ஜூன், 2010

நேற்றைய ஜப்பானும் இன்றைய தமிழீழமும்!!!!

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் 12 மணித்தியாலமும் 15 நிமிடமும் 17 விநாடிகளும் பறந்து 1945 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ம் திகதி காலை 8 மணிக்கு ஜப்பானின் ஹிரோஷிமா என்ற மிகம்பெரிய கைத்தொழில் நகரம் மீது குட்டிப்பையன் (Little boy) என்ற பெயருடைய அணுகுண்டை வீசியது.


அதனைத் தொடர்ந்து 3வது நாள் அதவாது 9 ம் திகதி நாகசாகி என்ற மற்றொரு கைத்தொழில் நகரம் மீதும் 2வது பெரிய பையன் (Big boy) என்ற பெயருடைய அணுகுண்டையும் அந்த விமானம் வீசியது. உலகம் அதிர்ந்து போனது. முதல் அணுகுண்டு யுரேனியம் இரண்டாவது புளுட்டோனியம்.



ஆதனைத் தொடர்ந்து ஜப்பான் இராணுவத்தினர் நடுக்கடலில் அமெரிக்க இராணுவத் தளபதியான மெக் ஆர்த்தர் முன்னிலையில் சரண் அடைந்தனர். அத்துடன் இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.


ஹிரோஷிமா மற்றும் நாகசாகியும் அதனை அண்டிய பகுதியிலும் உள்ள மிகப்பெரிய கட்டிடங்கள் எல்லாம் உருத்தெரியாமல் ஆனது. கட்டிங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புகள் எல்லாம் உருகி ஓடியது. கற்தூண்கள் கூட சிதறி சின்னாபின்னமானது. பச்சை மரங்கள் தீப்பிடித்தெரிந்தது. ஒரு இலட்சத்து 79 ஆயிரம் பேர் மாண்டனர். வெடிக்கும் போது வெளிச்சத்தைப் பார்த்தவர்கள் கண்பார்வையை இழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். ஹிரோஷிமா நாகசாகியில் வாழ்ந்தவர்களில் 12 ஆயிரம் பேர் உயிர் பிழைத்தும் கூட பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறந்தனர் இன்று வரை அதன் தாக்கம் இருக்கின்றது. போரினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் ஒரு புறமிருக்க ஜப்பானியக் கட்டுமானமே நிலைகுலைந்து போனது.


போரினாலும் 2 அணுகுண்டு தாக்கத்தினாலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான கைத்தொழில் நிறுவனங்கள் மண்ணோடு மண்ணாகியது. ஜப்பானில் உள்ள மொத்த வீடுகளில 25 சதவீதமானவை அழிந்து போனது. மொத்த தேசிய வருமானத்தைப் போல 2 மடங்குகள் சேதம் ஏற்பட்டதாக அப்போது கணக்கிட்டார்கள். பொருளாதாரம் முழுதாக சீர் குலைந்து போனது.


அணுகுண்டுத் தாக்குதலுக்கு முன் உலக வர்த்தக நடவடிக்கையில் 5வது இடத்திலிருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் நல்ல நலையில் வாழ்ந்த ஜப்பானிய மக்கள் அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின் ஒரு வேளை உணவுக்கே கஸ்ட்டப்பட்டனர். பணவீக்கம் கட்டுப்பாடு இல்லாமல் ஏறிக்கொண்டே போனது. ஜப்பானியர்கள் நம்பிக்கை இழந்தனர் எதிர்க்காலம் இருண்டு போயிருந்தது.


அவ்வாறு இருந்த ஜப்பானின் இன்றைய நிலையைப் பார்த்தால் அதன் உழைப்பையும் முன்னேற்றத்தையும் நல்லதொரு முன்னுதாரணமாகக் கொண்டு நமது தாயகத்தையும் நாம் கட்டியெழுப்புவதொன்றும் கடினமான வேலையன்று. வரலாறு தான் நமது நண்பன். எனவே வரலாற்றைப் பார்த்து தான் நாமும் நகர வேண்டியத் தேவை இருக்கிறது. இன்றைய ஜப்பானில்


* மக்கள் தொகை :12 கோடியே 79 லட்சம்
* ஆயுள் காலம் : ஆண் 72.3 ஆண்டுகள் பெண் 77.7 ஆண்டுகள்
* கிராம புறங்களில் வாழ்பவர்கள் 35%
* நகரங்களில் வாழ்வோர் 65%
* வானொலி வைத்திருப்போர் 1000 பேருக்கு 946 பேர்
* தொலைக்காட்சி வைத்திருப்போர் 1000 பேருக்கு 679 பேர்
* தொலைப்பேசி வைத்திருப்போர் 1000 பேருக்கு 558 பேர்
* அலைபேசி வைத்திருப்பேர் 1000 பேருக்கு 680 பேர்
* கணினி வைத்திருப்போர் 1000 பேருக்கு 314 பேர்
* இணையத்தளம் வைத்திருப்போர் 1000 பேருக்கு 449 பேர்
* காவல் துறையினர் 1000 பேருக்கு 2 பேர்
* வைத்தியர்கள் 1000 பேருக்கு 2 பேர்
* தாதிகள் 1000 பேருக்கு 8 பேர்
* வைத்தியச்சாலை படுக்கை வசதி 1000 பேருக்கு 16 படுக்கைகள்
* தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 28000 டொலர்
* வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் யாரும் இல்லை
* வேலையில்லாதோர் சதவிதம் 5.3%
* வெளிநாட்டுக்கடன் இல்லை


இவ்வாறு வளர்ச்சியடைந்த ஜப்பான் ஒன்றும் மிகப்பெரிய நாடு என்று சொல்வதற்கு இல்லை 4 பெரிய தீவுகளையும் ஆயிரக்கணக்கான சின்னங் சிறிய தீவுக்கூட்டத்தைக் கொண்டது. வடக்கே ஹேக்கைடோ (Hokkaido) தொடங்கி தெற்கில் கியூஷ (kiyushu) வரையுலும் 1900 கிலோ மீற்றர் அதாவது ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 884 சதுர மைல்கள் மட்டுமே. சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழீழம் அடங்கிய ஸ்ரீலங்காவைப் போல் இரண்டரை மடங்கு எனலாம். மொத்த நிலப்பரப்பில 15% நிலத்திலே மட்டுமே விவசாயம் செய்யக்கூடியதாகவும் இருந்தது.


அணுகுண்டு வீசப்பட்டு ஆறாவது நாள் ஜப்பானின் மன்னர் வானொலி மூலமாகப் பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஜப்பானில் மன்னனுக்கும் மக்களுக்கும் பெரிய இடைவெளியே நிலவி வந்தது. மன்னரின் குரலை மக்கள் கேட்டதேயில்லை. எனவே மக்கள் மன்னர் சொல்லப்போவதை ஆர்வமுடன் கேட்டனர். மன்னர் தனதுரையில் போர் மற்றும் அணுகுண்டுத் தாக்குதலின் விளைவாக எதிர்க்காலம் மிகவும் கடினமானதாக இருக்கும் . எதிர்கால சந்ததியின் ஒளிமயமான வாழ்க்கைக்காக இன்றைய சந்ததி அர்பணிப்புடன் செயற்பட்டு எந்த விதமான தியாகங்களையும் செய்ய தயாராக ஜப்பானியர்கள் இருக்க வேண்டும் என்றும் உலக முன்னேற்றத்திற்கு இணையாக ஜப்பானும் முன்னேற வேண்டும் அத்துடன் வளமான ஜப்பானை நிர்மானிக்க முழு சக்தியை ஒன்று திரட்டும் படியும் எப்போதும் நம்பிக்கை இழக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.


அதனையே வேத வாக்காக கொண்டு ஜப்பானியர்கள் அசுரத்தனமாக உழைத்தனர். ஜப்பான் மன்னன் அன்று தனது மக்களுக்குச் சொன்னதை ஒரு அசரீதியான ஒலியாகவோ அல்லது இன அழிப்பின் போது தயாக மண்ணில் ஆகுதியாகிப்போன மாவீரர்களினதும் எம் மக்களினதும் குரலாகவோ இன்று நாம் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?


ஓப்பீட்டளவில் 2ம் உலகப் போரில் ஜப்பானியர்கள் எம்மை விட அதிகளவிலான பொருட்சேதத்தையும் உயிர்சேதத்தையும் கொண்டிருந்த போதிலும் அவர்களால் மிகவேகமாக எழுந்திருக்க முடியுமெனில் புலம்பெயர் உறவுகளின் ஒத்தாசையுடன் தமிழீழ மக்களும் தலைநிமிர முடியும் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது என கருதுகிறேன்.


ஜப்பானில் உள்ள மாடசூஷிடா (Matsushita) என்ற நிறுவனம் தனது அன்றாட வேலைகளை தொடங்குவதற்கு முன் சொல்லும் ஒரு கவிநயம் மிக்கவரிகளை நினைவூட்டுகிறேன். ஏறத்தாள அது ஒரு இறைவணக்கம் போல இருந்தது.
“ புதிய ஜப்பானை உருவாக்கிட
நம் மனதையும் பலத்தையும் ஒருங்கினைப்போம்
உற்பத்தியை பெருக்கிட
முழுமையாக உழைத்திடுவோம்.
பொருள்களை உற்பத்தி செயது உலகமெங்கும் அனுப்பிடவோம்
அது முடிவே இல்லாமல் தொடரட்டும்
நீருற்றில் இருந்து பொங்கி எழும் தண்ணீர் போல
வளரட்டும் தொழில்கள்;
வளரட்டும் வளரட்டும் நல்லிணக்கமும் கபடமற்ற உண்மையும்”


நாமும் நமக்கான வரியை உருவாக்குவோம் தினமும் அதனை ஒரு இறைவணக்கம் போல சொல்வோம் நமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம். அயராது உழைப்போம் அடுத்த எமது ஒவ்வொரு அடியும் இடியாய் இருக்கட்டும் எதிரிக்கு.


2ம் உலகப்போரில் இருந்து எழ வேண்டும் என்ற வெறியும் நாட்டுப்பற்றும் தான் ஜப்பானியர்களை எழிச்சி கொள்ள வைத்தது. ஒரு ஜப்பானியன் தன்னை ஒரு பொறியியலாளன் என்று அறிமுகப்படுத்துவதைவிட தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்துவதையே விரும்புகிறான்.


நமது பண்பாட்டிலும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளிலும் தீபாவளி நத்தார் போன்ற விழா என்றால் முதலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துவது தான் வழமை. ஆனால் ஜப்பானியர்கள் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்தவதையே வழமையாக கொண்டிருக்கிறார்கள்.


ஜப்பானின் பிரபல தொழிலதிபரான எஸ். ஹோன்டா ஒரு முறை ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தினை இங்கே பதிய விரும்புகிறேன் “நான் அதிவேகமாக என் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை அதிகரித்துக்கொண்டு போகிறேன். அதனால் எனக்கு சிலவேளை நட்டம் வரலாம். ஆனாலும் அது ஜப்பானின் தொழில் வளர்ச்சிக்கு தனது பங்கினை அளிக்கத் தவறாது. அதற்காக நான் துணிந்து சவாலுடன் செயற்படத் தயாராக இருக்கின்றேன்” என்றார்.


ஜப்பானின் அபாரமான வளர்ச்சிக்கு நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஜப்பானின் பெருமை பேசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். 1945 களில் ஜப்பான் இருந்ததைப் போன்று இன்று நாமிருக்கின்றோம். ஆனால் ஜப்பானியர்களை விடவும் தேசபக்தி எம்மவர்களுக்கு அதிகமாகவே இருக்கின்றது. தம் சொத்துக்களை மட்டுமன்றி உயிரையும் கொடுக்க எம் மக்கள் தயாராகவே இருந்திருக்கின்றார்கள் இப்பொழுதும் இருக்கின்றார்கள். அதனை இணைக்கின்ற புள்ளி எது என்பது தான் இன்றைய சவாலாய் எம் முன்னே இருக்கின்றது.


1946 ஆம் மற்றும் 1950 ம் ஆண்டுகளில் அமெரிக்க கல்விக்குழு ஒன்று ஜப்பானுக்குச் சென்று அங்கு நடைமுறையிலிருந்த கல்விமுறையினை ஆய்வ செய்து சில சீர் திருத்தங்களை பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் திறமைசாலிகளை மட்டும் உருவாக்காமல் நாட்டுப்பற்று மிக்கவர்களையும் நல்ல பிரஜைகளையும் உருவாக்க வேண்டும் என எண்ணினர். அதற்கேற்ப கல்வி முறையினை வடிவமைத்தனர். கட்டாயமாக 9 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமென அரசு சட்டத்தினை கொண்டு வந்தது. எனவே தான் ஜப்பானில் கல்வியறிவு 100% ஆக உள்ளது அதன் பயனை ஜப்பானியர்கள் இப்போது அனுபவிக்கின்றார்கள்.


தமிழ் சமுகம் மீது வெட்டுப்புள்ளியினை திணித்து தமிழ் சமுகத்தின் கல்வியில் கை வைத்தது சிங்கள அரசு. பாடத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்தது குறிப்பாக வரலாற்றுப் பாடத்தினை சிங்களவர்களுக்கு சாதகமானதாக மாற்றினார்கள். தமிழ் மொழி மூல ஆசிரியர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்டாமலேயே இன்று வரை இருக்கின்றது. ஆனால் சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் தேவைக்கதிகமாக பணிக்கமர்த்தப்பட்டனர்.


அது மட்டுமன்றி யாழ் பொதுநூலகத்தை திட்டமிட்டு எரித்தனர் அது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு எனினும் அதிலிருந்தும் மீள்வதற்கான முயற்சியையும் அடுத்த சந்ததியின் கல்வியில் புலத்திலும் நிலத்திலம் உள்ளவர்கள் அக்கறை காட்டுவது காலத்தின் தேவையுமாகும். இதற்கு ஜப்பான் மட்டுமன்றி அமெரிக்காவும் கூட ஒரு சிறந்த உதாரணமே.


அமெரிக்கா ஒரு குடியேற்ற நாடு என்பது நாம் அறிந்ததே. அங்கே குடியேற சென்றவர்கள் எடுத்துச் சென்றது நூல்களை மட்டுமே ஆகும். அமெரிக்காவின் வளர்ச்சி பற்றி விபரிக்கவேண்டியத் தேவை இல்லை.


கல்வியில் உச்சத்திலிருந்த தமிழ் சமுகம் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதை நாம் அறிவோம். புலத்தில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கினறது ஆனால் நிலத்தில் உள்ள மாணவர்களை நாம் எவ்வாறு கல்வியில் ஊக்குவிக்கப்போகிறோம் என்பது பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியத் தேவை இருக்கிறது.


எதிரி எதனையெல்லாம் அழித்தானோ அல்லது அழிக்க முயற்சி செய்தானோ அதனையெல்லாம் நாம் மீள் கட்டுமானம் செய்ய வேண்டிய பொறுப்பு இன்று நம் கரங்களில். எமது பலம் என்று எதனையெல்லாம் அவன் நினைத்தானோ அதனையே அவன் அழித்தான் அல்லது அழிக்க எத்தனித்தான்.


உலகிலே ஒடுக்கப்படுகின்ற சமுதாயத்தினரை கல்வியிலும் பண்பாட்டு ரீதியாகவும் முன்னேற விடாமல் தடுப்பதை ஒரு வழக்கமாகவே ஒடுக்கும் சமுதாயம் கடைபிடித்து வருகின்றது இதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் விதிவிலக்கானவர்கள் அல்ல. எம்மிடையே ஆரோக்கியமற்ற நலிவுற்ற ஒரு சந்ததியை உருவாக்குவதற்கான முயற்சியில் சிங்கள தேசம் முயன்று கொன்டு இருக்கின்றது. அவன் முயன்றதற்கு நேரெதிராக நாம் செயற்பட்டு அவற்றினை மீளமைக்க வேண்டும; அதில் கல்வி முக்கியமானதும் அவசரமானதுமாகும்.


இதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதை சிந்திக்க வேண்டயது ஒவ்வொரு தமிழனின் வேலையாகும். ஒரு சமூகமாற்றத்திற்கு ஒரு சிந்தனையாளனின் சிந்தனையும் குறித்த சமூகத்தின் ஒட்டுமொதத் உழைப்பும் போதும் என்கிறார் அறிஞர் பேனாட்ஷா. நாம் எல்லோரும் சிந்திப்போம் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவோம்


2ம் உலகப் போரில் அணுகுண்டுத் தூக்குதலுக்கு பின் ஜப்பான் தோல்வியை ஒப்புக்கொண்டது அதனையடுத்து 1945 தொடக்கம் 1952 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தாகும்வரை நேசநாடுகளின் படைகள் ஜப்பானில் இருந்தது. அவ்வாறு நேசநாட்டு இராணுவம் இருந்த காலப்பகுதியில் அமெரிக்க இராணுவத்தின ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்த்தர் ஜப்பானிய இராணுவ இயந்திரத்தை முற்றாக சிதைத்தார் இராணுவ தளபாட தொழிற்சாலைகளின் உற்பத்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அய்ரோப்பாவின் அமைதிப் பூங்காவாக சுவிட்சலாந்து இருப்பதைப் போல ஆசியாவில் ஜப்பான் இருக்க வேண்டும் என எண்ணினார். ஜப்பான் தனது தேசியபாதுகாப்பிற்காக அமெரிக்காவையே நம்பியிருந்தது. 2ம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கு சிம்ம சொற்பனமாய் இருந்த ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு கூட அமெரிக்காவையே நம்பியிருக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருந்ததது.


1950 களில் கொரிய போர் தொடங்கிய பின்பே உள்நாட்டு தேசிய பாதுகாப்பிற்கு என தேசிய பொலிஸ் படையயை உருவாக்கி அதன் பின்னரே இராணுவத்தை கட்டியது. இன்று தமிழ் சமுகத்தின் இராணுவப் பலம் சிதைக்கப்பட்ட நிலையில் தமிழ் சமுகம் இராணுவ சமநிலையினை இழந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு இராணுவ சமநிலையினை கொண்டுவர முடியும் அதற்கு ஜப்பான் போன்ற நாட்டினைக் உதாரணம் காட்டினால் இது உண்மைக்குப் புறப்பானது என்று நம்மில் சிலரோ அல்லது பலரோ எண்ணக்கூடும். வரலாறு என்ற நமது நண்பன் அதனையே காட்டி நிற்கிறான்.


இந்தியாவினுடைய விடுதலைக்காய் காலனித்துவ ஆட்சியிலே ஒரு லட்சம் ஜப்பானியர்கள் பிரிட்டிஸ் இராணுவத்துடன் சண்டையிட்டு களப்பலியானர்கள். பங்காளதேஸ் என்ற நாடு உருவாக ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் பாக்கிஸ்தான் இராணுவத்துடன் சண்டையிட்டு களப்பலியானர்கள் கொசோவோ என்ற சுதந்திர நாடு உருவாக நேற்றோ படைகள் தன்சானியாவுடன் சண்டையிட்டன அவையனைத்தின் பின்னனியிலும் எதோவொரு உள்நோக்கம் அல்லது பிராந்திய நலன்கள் இருப்பினும் கூட அது சாத்தியமெனில் மீளவும் ஒரு படையணியை தமிழர் தரப்பு கட்டாது என எவ்வாறு வாதிடுவது?


தாயகத்தில நடைப்பெற்ற இறுதி யுத்தத்தில் தனது 2 கைகளையும் 2 தங்கைகளையும் இழந்த 16 வயதுடைய சிறுவனுடன் உரையாடும் போது ( பாதுகாப்பு காரணங்களுக்காக பெயரினை வெளியிடவில்லை) சிங்கள அரசடன் பேச்சு வார்த்தை நடத்தி தான் நமது உரிமையினை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் இனி வேறு வழியில்லை என்றேன். பேச்சுவர்த்தையெல்லாம் அவர்களுக்குப் புரியாது வலிதந்தோருக்கு நாமும் வலியை கொடுக்க வேண்டும் என்றான் சிறுவன். அந்தச் சிறுவனைப்போலத் தான் இன்று ஏராளமான மக்களின் மனநிலையும் கூட.


ஒடுக்கப்பட்ட எந்த ஒரு சமுகமும் தொடர்ந்து அடக்கப்பட்டதாய் இதுவரை எந்த வரலாறும் நமக்கு போதிக்கவில்லை. ஒடுக்கு முறைக்கு எதிராக ஏதோவொரு வழியில் அது தனது எதிர்பினைக் காட்டிக்கொண்கொண்டேயிருக்கம். நாகரீகமான முறையில் பிரச்சினைகளை சிங்கள தேசம் தீர்க்கும் என நாம் பகற்கனவு காணக்கூடாது. நமக்கான நாடு நமது மக்களுக்கான சுதந்திரம் நமக்கு தேவையெனில் விரும்பியோ விருப்பாமலோ மீளவும் நமது படையணியை கட்டுவதை விட வேறு வழியிருப்பதாக தெரியவில்லை.


சிங்கள தேசத்திற்கு புரிகின்ற மொழியில் தான் அவர்களுடன் பேச வேண்டிய நிலை நமக்கு இருக்கின்றது. தமிழர் (வவுனியாவில் ) பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில். நாம் சிங்களவர்கள் நான் சிங்களவன் நாம் சொல்வதை நீங்கள் கேட்கத் தான் வேண்டும் என கர்ச்சிக்கின்றான்(ர்) மகிந்த ராஜபக்ஸ். கர்ச்சிக்கின்றவனிடம் புன்னகைக்க முடியுமா? கர்ச்சிக்கின்றவர்களைப் பார்த்து உறுமுவதைவிட வேறு வழியில்லை.


மீண்டுமொரு இராணுவ சமநிலையை உருவாக்குவதற்கான காலமும் நேரமும் கனிந்தே தீரும. உலக ஒட்டம் அதனை நமக்கு உருவாக்கும் அதற்கான இன்றையப் பணிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்குமான பொறுப்பு ஆகும். கடந்த காலங்களில் சிங்கள தேசம் செய்த இன அழிப்பினை நமது இயந்திரத்தனமான நாளாந்த வாழ்க்கையின் மத்தியிலும் ஆகக் குறைந்தது 3 தடவையேனும் நினைக்கவேண்டும். அடுத்த சந்ததிக்கும் அதனை போதிக்க வேண்டும்.


இன அழிப்பின் போது நம் மக்கள் பட்ட துன்ப துயரங்களையும் போரின் வடுக்களையும் நாம் கால ஓட்டத்தில் மறந்து விடக் கூடாது. இன அழிப்பின் ஒளிப்படங்கள் கானொளி போன்றவற்றினை நம் பிள்ளைகளும் இடையிடையே பார்க்க ஒழுங்கு செய்ய வேண்டும். நாடின்றி போன இஸ்ரவேலர்கள் தமக்கிடையே சந்ததி சந்ததியாக தமக்கு நாடும் விடுதலையும் உண்டு என நம்பினார்கள் அது மட்டுமன்றி அதற்கான காய்நகர்த்தலையும் உலக அரங்கிலே மேற்கொண்டார்கள் அதன் வாயிலாக வெற்றி பெற்றார்கள்.


ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட இனத்தின் மொழியை அழித்தால் இனம் அழியும் என்கிறார்கள். எமது சமூகத்தைப் பொறுத்தவரை இனமும் அழிக்கப்படுகிறது மொழியும் அழிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 300 ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென யுனெஸ்க்கோ அறிக்னையினை வெளியிட்டபோது அது சாத்தியமில்லை என்று தான் நம்மில் அநேகர் அன்று நினைத்தோம்


ஆனால் யுனெஸ்க்கோவின் அறிக்கையினை அவ்வளவு இலகுவாக இன்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆறரைக் கோடித் தமிழர்கள் தமிழகத்திலே இருக்கின்றார்கள் எவ்வாறு தமிழ் அழியும் என நீங்கள் கேட்டால் அது தவறான கணிப்பே.


தமிழகம் வந்துவிட்டுச் சென்றவர்களுக்கு அது விளங்கும். ஆங்கில மொழி மூலமாக கற்றவர்களுக்கே வேலைவாய்பிபிற்கான சந்தர்ப்பம் இங்கு அதிகமாகையால் தமிழகத்தில் கற்றவர்களில் 75% மான தமிழர்களுக்கு தமிழ் எழுத தெரியாது என்பது யதார்த்தமானது. இதில் வாழும் வள்ளுவர் என வர்ணிக்கப்படுகின்ற கலைஞர் கருனாநிதியின் பேரன் பேத்திகளும் கொள்ளுப் பேரன் பேத்திகளும் அடக்கம்


நமது இனத்தையும் மொழியையும் காக்க உறுதிபூண வேண்டியது நம் ஒவ்வொருவருக்குமான கடமையாகும். இதிலிருந்து விலகினாலோ அல்லது ஏனோ தானோ என்ற அசமந்த போக்கை நாம் கடைப்பிடிப்போமானால் நிச்சயம் அதன் தாக்கத்தை நமது சந்ததி சந்திக்கும்.


எல்லாவிதமான தியாகங்களுக்கும் அர்பணிப்புக்களுக்கும் இன்று நாம் தயாரானால் நமது அடுத்த சந்ததியேனும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதோடு நமது பண்பாட்டில் உள்ள அனுகூலங்களை அனுபவிப்பர். நமது இனத்தையும் பண்பாட்டையும் மொழியினையும் காக்கவும் அதனை வளர்க்கவும் உறுதிபூணுவோம் அதற்காய் உழைப்போம். - இளையவன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக