வெள்ளி, 11 ஜூன், 2010

கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தை சிங்களமயப்படுத்த அரசு முயற்சி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என முறைப்ப்பாடுகள் கிடைத்துள்ளன. திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞான பீடம். சித்தமருத்துவ பீடம் ஆகிய மூன்று பீடங்கள் இருக்கின்றன.



முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவற்றில் கணிசமான தொகையில் சிங்கள மாணவர்களும்,சித்தமருத்துவ பீடத்தில் தமிழ் பேசும் மாணவர்கள் 36 பேரும் பயில்கின்றார்கள். சித்த மருத்துவ துறைக்காக ஐந்து விரிவுரையாளர்கள் இருக்கின்றார்கள். விரிவுரைகளும் கற்றல் நடவடிக்கைகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.இந்திய அரசிடமிருந்து 100 மில்லியன் ருபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் விரைவில் இப்பீடத்துக்குக் கிடைக்கவிருக்கின்றன.


இந்நிலையில் சித்தமருத்துவபீடத்துக்கு மூடுவிழா நடத்த அரசு முனைப்புக்களை எடுத்து வருகின்றது.தற்சமயம் அங்கு பயிலும் சித்தமருத்துவ துறை மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களில் சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இச்சிங்களமயப்படுத்தும் நடவடிக்கை குறித்து மேற்படி சித்தமருத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.


அவர் உயர்கல்வி அமைச்சருடன் பேசி வெகுவிரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர முயல்வார் என்று வாக்குறுதி வழங்கி உள்ளார். கிழக்குப் பல்கைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ரவிந்திரநாத், திருகோணமலை வளாகத்தின் அன்றைய முதல்வர் இராஜேந்திரம் ஆகியோரின் முயற்சியால் பல்கலைகழக மானியங்கள் ஆணைக் குழுவின் நிலையியல் குழுக்கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு அளவில் சித்தமருத்துவ பீடம் திருகோணமலை வளாகத்தில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக