வெள்ளி, 11 ஜூன், 2010

மீள்குடியேற்றத்தின் பின்னான நெருக்கடி......?!


எத்தனை முழக்கங்கள் எத்தனை அவலங்கள் எல்லாம் சுமந்த வன்னி வாழ்க்கையின் கொரூரத்தில் இருந்து மக்களால் மீண்டுகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் வானைப் பிளப்பதாயே அமைகின்றன. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு அவலம் விதைந்தே கிடக்கிறது.

இந்த அவலத்தினை ஏற்படுத்தியவர்களே மீட்பர்களாகவும், அவதார புரிசர்களாகவும் தம்மைக் காட்டிக்கொள்ள அடிக்கடி வன்னியில் தலை நீட்டுகின்றார்கள்.


அடிக்கடி அவர்கள் வருகைக்காக வீதிமறியல்கள், வரவேற்புகள் என அரச மற்றும் அதன் அங்கத்துவக் கட்சிகளின் பிரசன்னம் வன்னியில் அதிகரித்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

அண்மையில் வன்னியின் முன்னணி பாடசாலை ஒன்றிற்கு திடீர் பயணம் செய்த குடும்ப ஆட்சி அரசியலின் தற்போதைய இளைய வாரிசு பாடசாலை தொடர்பில் எடுத்த உடனடி கரிசனையில் இரண்டு வாரத்தில் ஒரு பெரிய கட்டடப் பணி பூர்த்தியாகி தற்போது அந்தப் பாடசாலை கணிணிமயப்படுத்தப்படுவதற்கான முதற்கட்டப் பணிகள் இரண்டு நாட்களில் நிறைவுக்கு வந்தாக சொல்லிக் கொண்டார்கள்.

இன்னொரு புறத்தில், ஒரு காலத்தில் ஏதோ ஒன்றின் பின்னால் அதி உயர் விசுவாசிகளாக இருந்தவர்கள் இன்று மற்றொரு எதிர்நிலையெடுத்து அன்று எவ்வாறு வாழ்ந்தார்களோ அதே செழுமையுடன் தமது வாழ்வை சிறப்பாய்க் கழிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தாம் செழுமையுற வேண்டுமென்பதற்காக இன்னும் அப்பாவிகளையும் அப்பிராணிகளையும் தம்முடன் ஈர்த்து அல்லது இழுத்து தமது (சுயலாப) அரசியல் நர்த்தல்களை முன்னெடுக்கிறார்கள்.

இதனைவிடவும் புதிய அரசியல்பிரவேசம் அதாவது நாடாளுமன்றப் பிரவேசத்தினை மேற்கொண்டுள்ள அரச சார்பில் வென்ற தமிழ் பேசும் தமிழர், மக்களின் வயல்களில் இறங்கி நெல் விதைத்து படம் எடுத்து ஊடகங்களில் பிரபல்யம் தேடிக் கொள்கின்றார்கள்.

அதே முக்கியஸ்தர் வன்னியின் தேசியத்தை நேசித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று தேனீர் கேட்டுவாங்கிப் பருகி அரசியல் செய்கின்றாராம். அந்த உன்னத சிந்தனையை வழங்குகின்ற சிந்தனைச் சிற்பிகள் செய்கின்ற அரசியலின் ஆழம் என்பது மகிந்த சிந்தனையிலும் ஆழமானது. வீட்டிற்கு வந்தவர்களை அழைப்பதா தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி பின்னர் அழுவதா என்பதைப் புரியாத ஏக்கம் தேசியத்தை உள்ளார நேசித்தவர்களிடம் புதைந்து காணப்படுகின்றது.

வன்னியில் ஊடகப்பணியாற்றி முடியுமானவரை தம்மை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியவர்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் அடைக்கப்பட்டு பின்னர் எப்படியோ வெளியேறி அடுத்த வேளைக்காக ஏதாவது நம்பிக்கை ஒளி தெரிகிறதா? என ஏங்கிய வேளையில் புதிய வடிவில் புதிய நெருக்கடி ஒன்றினை எதிர்கொள்கின்றார்கள்.

புதிய பத்திரிகை ஒன்றின் வருகைபற்றிய தீவிர பேச்சுக்கள் யாழ்.ஊடகர்கள் மத்தியில் உலாவுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இந்தப் பத்திரிகை ஏற்கனவே யாழில் இருந்து வெளியாகி போரால், தேசியத்தை நேசித்ததால் இடைநடுவே நின்று போனது. அது மீண்டும் வரும் என்கிறார்கள்.

ஆனாலும் அதன் பெயர் மட்டும்தான் பழையது என்றாலும் விடயம் எல்லாம் புதிதாகவே இருக்கும் என்றும் பேச்சுக்கள் காற்றுவாக்கில் வருகின்றன. அதன் அங்கத்தவர்களும் பழையவர்களாம், அதிலும் வன்னியிலும், யாழிலிலும் பத்திரிகைப் பணிபுரிந்தவர்கள் தான் இந்தப் பத்திரிகையிலும் பணி செய்யப் போகின்றனராம். செய்யவேண்டுமாம். இவர்கள் பணியாற்றவேண்டும் என்ற கட்டளை அன்புகலந்து இறுக்கமாக வழங்கப்பட்டதாம். அமைச்சர் அழைத்ததால் கூனிக்குறுகிப் போன சில பிரமுகர்களை அவர் வாரி அணைத்தாராம். அவரே கேட்டுக்கொண்டதால் எஞ்சிய அனைவரையும் ஒன்றிணைத்து குறித்த பத்திரிகையில் பிணைத்துப் பணிசெய்தே தீருவோம் என்ற எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரியவருகின்றது.

வன்னி ஊடகர்களும், யாழில் நெருக்கடிகாலத்தில் வெளியேறி மீண்டும் யாழ். வந்துள்ள ஊடகர்களும் தமக்கான வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பல்வேறு பிரயத்தனங்களை கைக்கொண்ட போதிலும் அவர்களால் முடியவில்லை. அவர்களை வைத்து யார் யாரெல்லாம் பிழைப்பு நடத்தி இன்று பெரும் தனவந்தர்களாக இருந்தார்களோ அவர்கள் தற்போது கண்டுகொள்வதாகவே இல்லை. இந் நிலையில் தமக்குத் தெரிந்த தொழிலைச் செய்ய தலைப்பட்டாலும் அவர்கள் வன்னியில் பணியாற்றினர் என்கின்ற ஒரே காரணத்திற்காக ஒதுக்கப்படுகின்றனர் அல்லது போதிய ஊதியங்கள் வழங்க மறுக்கப்பட்டனர்.

அவர்களுக்கும் குடும்பங்கள் பிள்ளைகள் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கின்றது. தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள தற்போது தோற்றுவிக்கப்படவுள்ள குறித்தபணிக்குச் செல்வதில் பின்நிற்பார்களா என்பது சந்தேகமே?, கால ஓட்டத்தில் அவர்களையும் துரோகிகள் என்று சொல்லலாமா? அல்லது எங்காவது இருந்துகொண்டு ஏதாவது எழுதிக்கொள்வோர் துரோகப் பட்டம் சுமத்தப் பின்நிற்பார்களா என்று எண்ணினால் மனம் கனக்கிறது.

இதேவேளை சுய தேவை அரசியல் செய்வோர் தம்முடன் ஏனையவர்களையும் நனைக்கவே ஆலோசனை வழங்கிவருகின்றார்களாம். இந்த நிலையில் இவ்வாறான நிலையில் வன்னியில் எத்தனையாயிரம் செல்கள் வீழ்ந்தன. அவை ஏன் எம் தலைகளில் வீழவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டதாக நண்பர் ஒருவர் சொல்லிப் பொருமினார்.

இது இவ்வாறு இருக்க வன்னியின் மீள்குடியேற்றத்தின் பின்னான நெருக்கடி என்பது வார்த்தைக்குள் அடங்காத அளவிற்கு மிக மோசமாக உள்ளது. சராசரி ஒவ்வொரு குடும்பத்தினையும் சேர்ந்த உழைக்கும் நிலையில் உள்ள குடும்பத்தலைவர்களையோ, இளைஞர்களையோ வன்னி இழந்தே நிற்கின்றது. எங்கு பார்த்தாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வாழ்க்கை கழிகிறது.

சில தகரங்களையும், சில தடிகளையும் இழுத்துக்கட்டி அதனை வீடு என்று வாழ வேண்டிய நிலை. கூடுதலான காற்று வீசினால் அதன் தகரங்களோ, தறப்பாளோ மிகத் தொலைவிற்கே சென்றுவிடும். சிலபகுதிகளில் தமிழ்நாட்டு சீமெந்துப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

அவற்றினை மட்டும் வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியுமா? மணல், கல்லு, அவற்றுக்கான கூலி அன்றாட வாழ்க்கை முன்னெடுப்புக்கள் மாணவர்களுக்கான கல்வி, போக்குவரத்து, மருத்துவம், குடிநீர், சவர்க்காரம், தொழில்வாய்ப்புக்கள் என பல்லாயிரம் நெருக்கடிகள் வன்னிமக்களை சூழ்ந்திருக்கின்றது.

மக்களை முகாம்களில் இருந்து ஏற்றி அவர்களின் கிராமங்களில் இறக்கிவிட்டால் எல்லாம் முடிந்து போய்விடும் என்ற நினைப்பு அல்லது அந்த விம்பம் வெளியில் தோற்றுவிக்கப்படுகின்றது. எண்ணிக்கையை மட்டும் சொல்வதால் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்ற எண்ணம் எந்தளவிற்கு பொருத்தமானது.

உண்மையில் ஒரு வாக்கியத்தில் சொல்வதானால் வன்னிமக்கள் தற்போதும் முகாம்களில் வாழ்ந்தவாழ்க்கையைக்கூட வாழவில்லை. காரணம் முகாம்களில் தொண்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று பார்த்து ஏதாவது முடிந்தவற்றை செய்வார்கள். ஆனால் வன்னியில் கொண்டு சென்று இறக்கப்பட்ட மக்களை யார் தான் திரும்பிப்பார்ப்பார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிடையே பயணிக்கிறது. அவர்களிடம் மக்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம், நீங்கள் அடிக்கடி எங்களை வந்து பாருங்கள். எங்களுடன் பேசுங்கள்.

எங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்லங்கள் என்பதுடன் எமது தடுப்பில் இருக்கும் பிள்ளைகளை விடுவித்துத்தந்தால் எமக்கு யாரும் உதவி செய்ய வேண்டியதில்லை. உழைக்கும் நிலையில் இருக்கின்ற எமது பிள்ளைகளே எம்மை உழைத்துப்பார்ப்பார்கள் என கண்ணீருடன் இறைஞ்சுகின்றார்கள்.

எனவே செழுமையும், செழிப்பும் நிறைந்த வன்னி மீண்டும் தனது வனப்பை எட்டவேண்டும். முடிந்தால் அனைவரும் உதவமுடியும், உதவி செய்தால் வீழ்ந்து கிடக்கும் அந்த மக்களை தூக்கி நிறுத்த முடியும். அவர்களுக்கு உதவ இருக்கும் சாத்தியமான வழிவகைகள் பற்றி ஆய்ந்து புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமூகம், உலகம் முழுமையிலும் பரந்திருக்கும் தமிழ் உள்ளங்கள் எமது மக்களின் கண்ணீர்களுக்கு முற்றுப்புள்ள வைக்க முன்வரவேண்டும். அதுவே எமது மக்களுக்குச் செய்யும் உயர்ந்த உதவியாக உங்கள் வாழ்க்கையில் அமையும் என்பது உண்மை.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் உதவிகள் தாயகத்தை உரிய முறையில் வந்தடைவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டிய தேவை தாயகத்தில் வாழும் தமிழர் பிரதிநிதிகளுக்கும், அவ்வாறான பொதுவான கட்டமைப்பு ஏற்படுத்தும்போது அதற்கான முழுமையான ஒத்துழைப்பை செய்யவேண்டிய கடமை புலம் பெயர்ந்துவாழும் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக