வெள்ளி, 11 ஜூன், 2010

பலர் வாட... -கண்மணி

. இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு. இங்கு அடித்தள மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் பிரிவினை பேதம் ஏதும் கிடையாது. சிங்கமும் ஆடுகளும் ஒரே குளத்தில் நீர் அருந்தும். ஆடுகளின் குரல் சத்தத்தைக் கேட்டு சிங்கங்களும் புல் தின்ன பழகும். இது இந்திய நாடு. சமத்துவம் நிறைந்த ஒரு மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்பாவிட்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இங்கு சட்டங்கள் சாதாரண நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம்வரை எல்லோருக்கும் சமமாகத்தான் இருக்கும். இது நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும். ஆயிரம் ரூபாய் களவாடிய ஆறுமுகமும், ஆயிரம் கோடி களவாடும் அம்பானியும், ஒரே நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுவார்கள்.
பத்து காவலர்கள் ஒன்றிணைந்து ஆறுமுகத்தை தெருவெல்லாம் அடித்து இழுத்து செல்வார்கள்.

காவல்நிலையத்திற்குப்போய் கட்டிப்போட்டு குருதி கொட்டும் வரை அடித்து துவைப்பார்கள். அம்பானியையும் அப்படித்தான் செய்வார்கள். நீங்கள் நம்ப வேண்டாமா? இந்த நாடு ஜனநாயக குடியரசு நாடு. இங்கு அனைவரும் சமம். போபால் நச்சு வாயு கக்கியபோது, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் செத்துப்போக காரணமான ஒருவனை காப்பாற்றுவதற்காக அப்போது மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் உதவி செய்ததாக இன்று செய்திகள் கசிகின்றன. ஆண்டர்சன் என்கின்ற யூனியன் கார்பைட் நிறுவத்தின் தலைவர் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்தப்பின், அவனை தப்பிக்கவிடாமல் நம்முடைய காவலர் மொழியில் சொன்னால், கட்டி வைத்து லாடம் கட்டி, நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள். நீங்கள் நம்பித்தான் தீரவேண்டும், நாம் வாழ்வது ஜனநாயக குடியரசு. இங்கு வாரன் ஆண்டர்சனானாலும், வந்தவாசி குமாரானாலும் ஒரே மாதிரித்தான் விசாரிக்கப்படுவார்கள்.

ஏற்றத்தாழ்வற்ற விசாரணையை நமது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்துகிறது. இதிலிருந்து ஒரு மயிரிழை அளவுக்கூட சட்டத்திலிருந்து மாறமாட்டார்கள். நமது காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் இந்திய அரசின் சட்டத்தின் காவலர்கள். அந்த காவலர்களின் கண்காணிப்பிலிருந்து எந்த குற்றவாளியும் தப்பிவிட முடியாது. ஆண்டர்சனானாலும், அல்லது ஆறுமுகமானாலும் இவர்களுக்கு ஒன்றுதான். நாம் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் அதற்கு நாம் எப்படி பொறுப்பேற்க முடியும். இந்த நாடு ஜனநாயக நாடு. இதில் எதுவும் நடக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின்படி தேடப்படும் ஒரு குற்றவாளியை உபசரித்து, ஆதரிப்பது சட்டப்படி குற்றமாகும். அவருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க இந்திய அரசியல் சட்டத்திலே இடம் இருக்கிறது. சாதாரண ஒரு அடிதடி வழக்கில் தப்பித்துச் செல்லும் சிலரை கைது செய்வதற்காக அப்பாவி குடும்பத்தின் நபர்கள் அத்தனைப் பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அடித்து துவைத்து அந்த நபர் கிடைக்கும்வரை சட்டத்திற்கு புறம்பாக அவர்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கும் கண்ணியத்தின் காவலர்கள் அரசாட்சிபுரியும் ஒரு அற்புதமான நாட்டில் நாமும் வசிக்கிறோம்.
தமிழீழ மக்களின் துயர் துடைப்புக்காக நாம் எந்த போராட்டங்களையோ, அல்லது நடைமுறை சார்ந்த அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அறம் சார்ந்த பணிகளையோ செய்தால் நாம் சட்டப்படி குற்றவாளிகளாக்கப்படுவோம். காரணம் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தன்மையை ஆதரிப்பது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்தை யார் இழைத்தாலும் இந்திய பயங்கரவாத சட்டங்களான தடா, பெடா என பல்வேறு கருப்புச் சட்டங்கள் காட்டி அச்சுறுத்தப்படலாம். மீறும்போது, நாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம். இது எல்லோருக்கும் பொதுவானதுதான். இந்திய அரசியல் சட்டம் யாருக்குமே வெவ்வேறாக இருப்பது கிடையாது. பாரபட்சமற்ற அரசியல் சட்ட அமைப்பைக் கொண்ட ஒரு அறம் சார்ந்த நாட்டிலே நாம் வாழ்கிறோம் என்பதே ஒப்பற்ற நம் வாழ்விற்கு இலக்கணமாக இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் மீறி நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் இந்திய அரசியல் சட்டம் என்பது எல்லோரையும் ஒரே நிலையில்தான் பார்க்கும். அது யாரையும் எந்த சார்பு நிலைக் கொண்டும் பார்க்காது. காரணம் சட்டத்தின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது. அது ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒரே தீர்ப்பைத்தான் வழங்கும். நாம் சொல்வதை உங்களால் ஏற்க முடியா விட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நம்மால் முடிந்ததை நாம் சொல்கிறோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நடக்கிறது என்று நம்புகிறோம். நீங்கள் அப்படியெல்லாம் நம்பவில்லை அது பொய் என்று சொன்னால், சொல்லிக் கொண்டு போங்கள். ஆனால் இந்தியா அனைவரையும் ஒரே அளவுக் கோலில் பார்க்கும் நீதி நெறி தவறாத நாடு. எந்த ஒரு நீதியின் செயலிலும் அது தடம் புரளாது.

அந்த அளவிற்கு மிக மிக சிறப்பு வாய்ந்த சட்டத்தை மதிக்கும், சட்டத்தின் ஆட்சி நடக்கும், அநீதியை சுட்டெரிக்கும் நாடு இந்தியா. நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும். நீங்கள் கேட்பது எமது செவிகளிலும் ஒலிக்கத்தான் செய்கிறது. அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கும் போர் குற்றவாளி, இன அழிப்பு குற்றவாளி ராசபக்சே, இந்தியாவிற்கு வந்தவுடன் இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறாரே, அது எப்படி நீதியாகும்? குற்றவாளிகளை தண்டிக்கும் ஒரு நாட்டில் குற்றவாளி வருவது தவறல்லவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. காரணம் இந்தியா நீதி நெறி தவறாத நாடு. ஆகவே தான் போர் குற்றவாளியான கொலைக்காரன் ராசபக்சேவுக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளித்திருக்கிறது.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ராசபக்சேவைப் பார்த்து அவன் ஒரு சிங்கள தீவிரவாதி. இலங்கை ஒரு குடியரசு நாடல்ல. லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ஒரு கொலைக்காரன் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இக்குற்றச்சாட்டு தமிழ்நாட்டில், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, டி.ராசேந்தர், மணியரசன், சீமான் அல்லது சிறு இயக்கங்களைக் கட்டி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பல்வேறு இளைஞர் குழுமங்கள் இவைகளிலிருந்து யாரோ ஒருவர் எழுப்பிய குற்றசாட்டல்ல.

லீ குவான் யூ சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியான் லூன் அவர்களின் மகன். அவர் பிரதமராக இருந்து இறங்கியப் பின்னரும் கூட பல்வேறு அரசு பொறுப்புகளில் முக்கிய ஆலோசகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஹென்றி கிங்சிங்கர் இரண்டுமுறை இவரிடம் தமது அரசியல் ஆலோசனைகளை பெற நாடியிருக்கிறார். சீனத்தின் அசூர வளர்ச்சியை முன்கூட்டியே எடுத்துரைத்த ஒரு அற்புத அரசியல் தலைவராக லீ இருக்கிறார். ஆகவே அவரின் விமர்சனத்தை, அறிவுரையை அல்லது குற்றச்சாட்டை நாம் நிராகரிக்க முடியாது. அவர் சொல்கிறார், இலங்கையில் போர் முடிந்து அமைதி நிலவுகிறது என்று எங்காவது படித்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்று.
மேலும், நான் ராசபக்சேவின் சில பரப்புரைகளையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது அவரை ஒரு சிங்கள தீவிரவாதி என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியமல்ல. மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டது என்பதற்காக மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என்று கூறிவிட முடியாது. அந்த நாட்டில்வாழும் சிங்களர்களுக்கு இருக்கும் உரிமை, அதே அளவுக்கு தமிழர்களுக்கு தரப்பட வேண்டும். அந்த நாட்டு வரலாற்றை புரட்டிப் பார்த்தால், அப்படி எங்கேயும் காணப்படவில்லை. யாழ்பானத்தில் தமிழர்களுக்கு சிங்களர்களால் இழைக்கப்படும் கொடுமைகளை பார்த்தாலே இது புரியும். எனக்கென்னவோ சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால்தான் தமிழர்களை விரட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது. சிங்களர்களை விட தமிழர்கள் அதிக செயல்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி நானும் தமிழனாக இருந்திருந்தால் அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்பேன்.

நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழர்களின் இந்த தோல்வி தற்காலிகமானதே. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இலங்கை அரசுக்கு எதிராக திரும்பவும் போர் தொடுப்பார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இது யாரோ ஒரு மூன்றாவது மனிதர் பேசும் பேச்சல்ல. இதை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு நாட்டில் முன்னாள் பிரதமர் போர் குற்றவாளி, கொலைக்காரன் என்று அறிவித்தவனுக்கு இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டிருக்கின்ற கொடுமை இந்திய திருநாட்டில் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் நாம் நம்ப வேண்டும் இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற விசாரணையும் தீர்ப்பும் வழங்கப்படுகிறது என்பதை. ஆனால் இதைவிட ஒரு பெருங்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. அது நம்மை மேலும் மேலும் இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை நம்பியே தீர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ராசபக்சே என்று கொலைக்காரன் இந்தியாவிற்கு வருகிறான். அவனோடு இணைந்து வேறொரு கொலைக்காரனும் வருகிறான். ராசபக்சே இந்தியாவிற்கு வந்து, குற்றவாளிகளை பறிமாறி கொள்வது, குற்றவியல் நடவடிக்கைகளில் சட்டரீதியான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்துகொள்வது போன்ற ஒப்பந்தங்களில் கையெப்பம் இடப்பட்டுள்ளன. நாம்கூட மிக மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தான் ராசபக்சே அழைத்து வந்திருக்கிறானோ என. ஆனால் தலைகீழாக மாறிவிட்டது. அரசுமுறை பயணம் என்று இந்தியாவிற்கு வந்திருக்கின்ற ராசபக்சேவுடன் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்திருக்கிறான். இவன்மீது கொலை, கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்திய நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. 9 பேர் கொண்ட கூட்டத்துடன் இந்த தேவானந்தா 1986ல் சென்னை சூளைமேட்டில் சாலையில் போவோர் வருவோரை சுட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிர் இழந்தார். இந்த வழக்குகளில் பிணை பெற்ற டக்ளஸ், 1994ல் தலைமறைவானார். அதன் பின்னர் அவர் தேடப்படும் குற்றவாளியாகவே அறிவிக்கப்பட்டார்.

இதை தவிர்த்து 1989 மார்ச் மாதம் பணத்துக்கான ஒரு சிறுவனை கடத்திய வழக்கும் இந்த குற்றவாளி மீது நிலுவையில் இருக்கிறது. 1990ல் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், வளவன் என்பவரை அச்சுறுத்தியதாகவும் இவன் மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை, நீதிபதி உத்தரவில்லாமல் பிடி ஆணை இல்லாமல் பார்த்தவுடன் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தின்படி. இவ்வளவு இருந்தும் இந்தியா என்ன பெரிய......... என்ற எண்ணத்தில் டக்ளஸ் தேவானந்தாவை தன்னுடைய அழைத்து வந்த ராசபக்சேவிற்கு இந்தியாவை பற்றிய மதிப்பீடு எப்படி இருக்கிறது என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. தேசியத் தலைவரின் தாயார் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, தேசிய தலைவரின் தாயார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திருப்பி அனுப்பப்பட்ட பெரும் கொடுமை நிகழ்த்தப்பட்டது. ஆனால் இந்திய நீதிமன்றங்களில் குற்றவாளி பட்டியலில் இருக்கும் ஒருவன், அச்சமின்றி இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி என்ற கேள்வி சட்டத்தை நேசிக்கும் எல்லோரையும் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவரும் அந்த குற்றவாளிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? ஏற்புடையதா? என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவர் குற்றவாளி என்பது பிரதமருக்கு தெரியாது என்று பொய் சொல்லப்படலாம். அதை நாம் கேட்டுக் கொண்டுதான் தீரவேண்டு. இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தில்லி காவல்துறையினருக்கு டக்ளசை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பும்கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டத்திற்கு பின்னர் தான் வந்திருக்கிறது. டக்ளஸ் இபிஆர்எல்எஃப் இயக்கத்தில் இருந்தபோது 1986 முதல் 90 வரை சென்னையில் தங்கியிருந்தார். அந்த காலத்தில் கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒருவேளை நாம் யாராவது டக்ளசோடு கைகுலுக்கி நின்றிருப்போமேயானால் இந்நேரத்திற்கெல்லாம் நீதிநெறி மாறாத காவல்துறையினர், நம்மை அழைத்துச் சென்று நையப்புடைத்து குற்றவாளியின் கூட்டாளி என ஊடகங்களுக்கு முன்னால் அறிவிப்பு செய்திருப்பார்கள். என்ன செய்வது? நாம் இந்திய ஜனநாயக குடியரசில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதெல்லாம் இங்கு நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நமக்கு இருக்கக்கூடாது. இருந்தால் நாம் குற்றவாளியாக்கப்படுவோம். நாம் அச்சப்பட்டு, அடங்கி, பாரதி சொன்னதைப் போன்று, `சோறு நிதம் தேடி திண்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாட பல செயல்கள் செய்து, நரை கூடி கிழ பருவம் எய்தி, கொடுங் கூற்றுக்கு இரை என மாயும் பல வேடிக்கை மனிதர்களைப் போல் இருப்பேன்' என்று உறுதியெடுக்க வேண்டும். அப்போதுதான் நீ உண்மையான இந்தியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக