வெள்ளி, 11 ஜூன், 2010

டக்ளஸ் மீதான வழக்கு ?

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு தமிழ் நாடு மக்கள் உரிமை பேரவையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம் வை இக்பால் ரி. எஸ் சிவஞானம் ஆகியோர் வழக்கினை எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.



இதேநேரம் டக்ளஸ் இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர் புலிகளின் ஆதரவாளர்கள் பழைய விடயங்களை தோண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இந்திய இலங்கை ஒப்பந்தின் பிரகாரம் போராட்ட குழுக்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் பிரகாரம் தனக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட பிடியாணையின் பிரகாரம் அவரை கைது செய்துமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டிருக்கும். மாறாக வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் டக்கிளசுக்கு இந்தியாவில் பிடிவிறாந்து உள்ளது என்பது நிருபனமாகியுள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி கொடுத்துள்ள மனுவில் 1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.


1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று பொறுப்பேற்ற புதிய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், பொதுநலன் கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். இந்தியா வந்துள்ள டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் ஆகிய 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். 16 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்று வாதிட்டார்.


அப்போது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளி வைப்பதாகத் தெரிவித்தார்.


இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை நாட்டை விட்டு தப்பிக்க விடக்கூடாது, உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். கொலை, ஆள் கடத்தல், கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.


ஒரு நாட்டின் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரை இலங்கை அதிபர் ராஜபக்சே துணிச்சலாக அழைத்து வந்துள்ளார். இந்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் தான் இதற்குக் காரணம்.


டக்ளஸ் தேவானந்தா பற்றிய முழு வரலாறும் தெரியாமல் அவரை ராஜபக்சே அழைத்து வந்ததாக கருத முடியாது. நான் அழைத்து வந்தால், உங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற ராஜபக்சேயின் ஆணவ வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க வோண்டும்.


ராஜபக்சேயின் இந்த துணிச்சலுக்கு பின்னணி இருக்கவும் வாய்ப்பு உண்டு. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, ராஜபக்சேக்கு ஏதோ ஒரு வகையில் நன்றிக் கடன்பட்டுள்ளது. எனவே தான் இவ்வளவு துணிச்சலாக டக்ளஸ் தேவனந்தாவை ராஜபக்சே அழைத்து வந்துள்ளார்.


போபால் விஷவாயு வழக்கிலும் அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசும், ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசும் யூனியன் கார்பைடு ஆலை தலைவர் ஆன்டர்சனை தப்ப வைத்துள்ளன.


இந்த உண்மைகள் எல்லாம் ராஜபக்சேவுக்கு தெரியும். எனவே தான் கையாலாகாத இந்த மத்திய அரசால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற திடமான நம்பிக்கையில் தான் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை உடன் அழைத்து வந்துள்ளார்.


தேடப்படும் குற்றவாளிகளை தேடிக்கொண்டு இருப்பதை விட தானாக முன்வந்து நாட்டின் பிரதமரிடம் கைகுலுக்கி உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நகையாடி இருப்பது இனிமேல் நமது நாட்டின் 'தேடப்படும் குற்றவாளி' என்ற வார்த்தையை பயன்படுத்துவதே அர்த்தமற்றதாகிவிடும்.


சென்னை நகர போலீஸ் கமிஷனர் டக்ளஸ் தேவானந்தா பற்றி டெல்லி போலீசுக்கு தகவல் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். மற்ற குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகளை அனுப்வது போல தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய சிறப்பு படையை அனுப்ப வேண்டியது தானே?.


அவரை நாட்டை விட்டு தப்பிக்க விடக்கூடாது. உடனே கைது செய்ய வேண்டும். தேடப்படும் குற்றவாளியை மறைத்து வைப்பதும் சட்டப்படி குற்றம். எனவே இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக