சனி, 26 ஜூன், 2010

சரணடைவது தொடர்பாக அரசுடனும், கே.பி யுடனும் நோர்வே தொடர்பு !

இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு நோர்வே ஆதரவு வழங்குவதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹேய்ம் தெரிவித்தார்.

நோர்வேக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவினருடனான சந்திப்பின்போதே எரிக் சொல்ஹேய்ம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது, இலங்கைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் சிறந்த சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களுக்கு இலங்கைக்கு நோர்வே தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும்.


மேலும் நோர்வேயில் வசிக்கின்ற புலம்பெயர் தமிழர்களுடன் நோர்வே அரசாங்கம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதுடன், ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றது. எனினும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு மட்டுமே நோர்வே அரசாங்கம் ஆதரவைப் பெற்றுக்கொடுக்கும்.


மாறாக, மீண்டும் யுத்தம் நடத்துவதென்பது ஒரு தெரிவல்ல என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். தற்போது இலங்கையில் மிகவும் பலமான அரசாங்கமொன்று பதவியிலிருக்கின்றது. எனவே, அவர்களினால் அரசியல் தீர்வைக் காண முடியும் என்பதுடன், நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல முடியுமென நம்புகின்றோம்.


‘இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைய இருப்பது பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நோர்வே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் குமரன் பத்மநாதன் (கே.பி), எஸ்.புலித்தேவன் ஆகியோருட னும் தொடர்பு கொண்டிருந்தது.


விடுதலைப்புலி தலைவர்கள் சரணடைவதற்கு ஒரேயொரு வழி வெள்ளைக்கொடியை காண்பித்துக் கொண்டு செல்வதேயாகும் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.


சரணைடைவு விவகாரத்தில் வேறு யார் சம்பந்தப்பட்டனர் என்று வினவிய போது, அதற்கு பதிலளிக்க மறுத்த சொல்ஹெய்ம், புலித் தலைவர்கள் சரணடைவதற்கான பேச்சுவார்த்தைகள், யுத்தம் முடிவடைந்ததாக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்ட தினத்திற்கு 2 நாட்கள் முன் அதாவது கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற்றதாக தெரிவித்தார்.


கடந்த வருடம் முடிவடைந்த கசப்பான யுத்தத்தின் பின்னர் இலங்கையில் அரசியல் தீர்வொன்றை கொண்டு வரவேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன. ஐக்கியநாடுகள் செயலாளர்நாயகம் இலங்கை குறித்து தமக்கு ஆலோசனை கூறுவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தமை வரவேற்கத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக