சனி, 26 ஜூன், 2010

சிறீலங்கா ஐ.நா முறுகல்!

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு இலங்கை வர அனுமதி வழங்கப்பட மாட்டாதென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.இந்த விசேட நிபுணர் குழு இலங்கை வருவதற்கான விசா அனுமதி வழங்கப்பட மாட்டாதென
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


ஐ.நா. செயலாளர் நாயகத்தின்விசேட நிபுணர் குழு இலங்கை வர அனுமதி வழங்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பேராசிரியர் பீரிஸ் அதற்கான எந்த அவசியமும் இங்கு இல்லை. அவர்கள் இலங்கை வருவதென்றால் அதற்கு நாம் அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்கான விசா அனுமதி வழங்கப்பட மாட்டாது. அவர்கள் இலங்கை வர அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.


இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருக்கும் மூவர் கொண்ட விசேட நிபுணர் குழுவானது இறைமையுள்ள நாடொன்றின் மீதான தேவையற்ற தலையீடு என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இது பற்றி மேலும் விளக்கமளித்த அமைச்சர்;


"இந்த குழுவானது ஆலோசனை வழங்குவதற்கான ஒன்றே தவிர இலங்கை பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்படும் ஒன்றல்லவென நான் நியூயோர்க்கில் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார். சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸைச் சந்தித்த போதும் அவர் இதைத் தெரிவித்திருந்தார்.


அது மட்டுமல்லாது இது ஆலோசனைக் குழுவே என்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் சார்பாக அவரது பேச்சாளரும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.எவ்வாறிருப்பினும் இந்த ஆலோசனைக் குழுவைக் கூட இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இந்த தருணத்தில் ஆலோசனைக் குழு கூட காலத்திற்குப் பொருத்தமானதல்ல. எனவே இதனை நாம் கண்டித்து நிராகரிக்கிறோம்.


அதுமட்டுமல்லாது, இலங்கை வந்திருந்த அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் லின் பாஸ்கோவிடமும் இதை நாம் ஏற்கமாட்டோமெனக் கூறியிருந்தோம். ஏனெனில் எமக்கென உள்நாட்டு பொறிமுறை ஒன்று இருக்கும் போது அதாவது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு செயற்படும் நிலையில் அதை முன்கொண்டு செல்ல உதவுமாறே கேட்டோம்.


அதைவிடுத்து வெளிநாட்டு பொறிமுறை ஒன்று இங்கு தேவைப்படாது. ஏனெனில் வெளிநாட்டு பொறிமுறையால் இங்கு ஒரு குழப்பமான நிலை ஏற்படுமே தவிர பலன் எதுவும் கிடைக்கப்போவதில்லை.எமக்கு வெளிநாட்டு பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. தீர்வு என்பது எமது நாட்டுக்குரியதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். நாம் இந்த விடயத்தைத் தனிப்பட்ட ரீதியாகவன்றி கொள்கை ரீதியாகவே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.


இதேநேரம், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிபார்சு செய்வதென்றால் நிறைவேற்றுவோமென இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டுமென முன்வைக்கப்பட்டிருக்கும் 15 நிபந்தனைகள் பற்றியும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சிடமிருந்தே இந்த நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் தனக்குக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும். மனித உரிமைகள் விவகாரங்கள் பற்றி முறைப்பாடுகள் முன்வைப்பவர்கள் சர்வதேச நீதிமன்றம் செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற 15 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் எதுவும் வர்த்தக உடன்படிக்கையுடன் தொடர்புடையதல்ல. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இல்லாத நடைமுறைகளை கூட இலங்கையில் கொண்டுவரச் சொல்வதை ஏற்க முடியாது.


அது மட்டுமல்லாது இதில் பல பிரச்சினைகளும் இருக்கின்றன. பிரதானமாக அரசியலமைப்பின் அடிப்படையையே மாற்ற வேண்டியதாகவும் நாட்டின் உயரிய ஸ்தானமான உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவதாகவும் இந்த நிபந்தனைகள் அமைகின்றன. எனவே, இவற்றை ஏற்பதில்லையென ஜனாதிபதி தலைமையில் புதன்கிழமை கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பாக 6 பில்லியன் (600 கோடி) அமெரிக்க டொலர்கள் இருக்கிறது. எனினும் ஜி.எஸ்.பி.+ சலுகை மூலம் 150 மில்லியன் (15 கோடி) அமெரிக்க டொலர்களே கிடைக்கப்போகிறது. எனவே, இந்தக் கொள்கைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. சுயகௌரவம் கொண்ட எந்த நாடும் இம்மாதிரியான நிபந்தனைகளை ஏற்காது என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.


இலங்கையுடன் எந்தத் தொடர்பும் பான் கீ மூன் ஊடாகவே இடம்பெறும் மர்சுகி தருசுமன் கூறுகிறார்


இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐ.நா. நிபுணர்கள் குழுவானது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்யும் என்று குழுவின் தலைவர் மர்சுகி தருசுமன் கூறியுள்ளார்.ஐ.நா. வின் விசேட நிபுணர் குழுவின் தலைவராக தருசுமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய வானொலியின் ஆசிய பசுபிக் நிகழ்ச்சிக்கு நேற்று கருத்துத்தெரிவித்த அவர், உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் எனக்கூறியுள்ளார்.


மோதலின் போது இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பாக எந்தவொரு வேறுபாடும் இன்றி விசாரணை மேற்கொள்ளப்படும்என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் அரசாங்கத்திலிருந்தும் சுயாதீனமாக நிபுணர் குழு செயற்படும் எனவும் தருசுமன் தெரிவித்திருக்கிறார்.இலங்கை அரசாங்கத்துடனான எந்தவொரு தொடர்புகளோ, உறவுகளோ ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். எந்தவொரு நாட்டுடனும் சம்பந்தப்படாமல் சுயாதீனமாகவே விசேட நிபுணர் குழு செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு நிபுணர் குழுவானது பரிந்துரை செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்த ஊகம் எதனையும் அவர் வெளியிடவில்லை.ஆனால், நிபுணர் குழு உறுப்பினர்களின் மனித உரிமைகள் மற்றும் சட்ட ரீதியான பின்னணிகள் விசாரணை இடம்பெறும் திசையைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அமையுமெனக் கூறியிருக்கிறார்.எது சாத்தியமானது என்பது தொடர்பாக நாம் துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தருசுமன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக