சனி, 26 ஜூன், 2010

சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரை லண்டனில் கைது செய்ய கொழும்பு நீதிமன்று உத்தரவு

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை பிரித்தானியாவிலிருந்து நிர்வகித்துவரும் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரைக் கைதுசெய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் பகிரங்க பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களைத் தயார் படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்தும் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இந்த இணையத்தளம் குறித்து இரகசியக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.


போலி ஆவணங்களை தயாரித்து மோசடிகளில் ஈடுபட்டமை சம்பந்தமாக விதானாராச்சி என்பவருக்கெதிராக பல காவல்நிலையங்களில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோசடி செய்வதற்கு உதவி வழங்கியமை, அன்பளிப்பு உறுதிப் பத்திரங்களை போலியாக தயாரித்து சொத்துக்களை மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பின்னர், அவரும், அவரது மனைவியும் போலி கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்குச் சென்றுள்ளனர். இரகசியக் காவல்துறையினர் பிரான்ஸைத் தலைமையமாகக் கொண்டியங்கும் சர்வதேச காவல்துறையினரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், வித்தானாராச்சியைக் கைதுசெய்வதற்கான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதுடன், சிவப்பு அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்கள் சர்வதேச காவல்துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


லங்காநியூஸ்வெப் இணையத்தளம், இரகசிய இணையத்தளமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் அவரது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள் என்பன காணப்படவில்லை. மின்னஞ்சல் முகவரி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த இணையத்தளத்தின்மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக அடிப்படையற்ற பல செய்திகள் வெளியிடப்பட்டதாக இரகசியக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.


பிரித்தானியாவின் புதட்போர்ட்டிலுள்ள விலாசமொன்றிலிருந்து இந்த இணையத்தளம் இயக்கப்பட்டு வருவதாக இரகசியக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சந்தேக நபர்களிடமுள்ள பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு தொலைபேசிகள் மூலம் அவர் இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதாகவும், அவற்றில் ஒன்று வீட்டில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எனவும் மற்றையது கையடக்கத் தொலைபேசி எனவும் தெரியவந்துள்ளது.


அத்துடன், அவர் ஸ்கைப் மூலமும் தொடர்புகளை பேணி வருகிறார். அரசாங்கத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதற்காக இந்த தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் இணையத்தளத்தை நடத்துவதற்காக வித்தானாராச்சி இலங்கையிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் பணத்தைப் பெற்றுள்ளார்.


அரசியலில் பிரவேசித்துள்ள குறித்த வர்த்தகர் வடக்கில் தொலைபேசி இணைப்புகள், கையடக்க தொலைபேசி விற்பனை ஆகியவற்றின்மூலம் பெருமளவு பணத்தை சம்பாதித்திருப்பதாகவும், அவரது வியாபாரத்திற்காக விடுதலைப் புலிகள் பல்வேறு உதவிகளைச் செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


இலங்கையிலுள்ள பிரபல சிங்கள தேசிய ஊடகமொன்றில் பணியாற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் வித்தானாராச்சிக்கு இலங்கையின் தகவல்களை வழங்குபவர்களில் ஒருவர் எனவும், அவருக்கு அரசியலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் மாதாந்தம் கொடுப்பனவொன்றை வழங்குவதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் கடந்த தமிழ் ‐ சிங்கள புதுவருட விடுமுறைக் காலத்தில் ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொள்வதற்காக இலவச வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.


சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், பணம் வழங்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகளைத் தயார் செய்துவரும் நாட்டிற்கு வெளியில் இருக்கும் இலங்கையின் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்வோரின் உதவியும் வித்தானாராச்சிக்கு கிடைத்துவருகிறது.


கொழும்பைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஊடக அமைப்பொன்றில் நிதி மோசடி செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நபர் உள்ளிட்ட தற்போது ஐரோப்பாவில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஊடகவியலாளரின் உதவியும் வித்தானாராச்சிக்கு கிடைத்து வருகிறது.


லங்காவெப்நியூஸ் இணையத்தளம், பிரித்தானிய சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக நடத்தப்பட்டுவருவதாகவும் இணையத்தள நிர்வாகத்திற்கு சட்டங்கள் இருப்பதுடன் பொய்யான பிரசாரம் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த பிரித்தானியாவைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கும் வெளிவிவகார அமைச்சு இதுதொடர்பாக தூதரகப் பிரிவினர் மூலமாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.


கடந்த வாரம் பிரத்தியேக செய்தி என்ற தலைப்பில் முல்லைத்தீவு நந்திகடல் களப்பில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை அப்புறப்படுத்தும் பணிகளை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கியிருப்பதாக வெளியிடப்பட்ட செய்தியும் இவ்வாறு வெளியிடப்பட்ட பொய்யான செய்திகளில் ஒன்றென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நட்பு நாடுகளுடன் இலங்கைக்கு இருக்கும் உறவுகளை இல்லாமல் செய்யும் நோக்கில் இவர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுவருவதாக அரசாங்கம் நம்புகிறது.


இவ்வாறான செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளது. இலங்கையில் தேடப்பட்டுவரும் வித்தானாராச்சி பிரித்தானிய குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அங்குள்ள இலங்கையர் எவரும் அவர் வசித்து வரும் இடத்தை அறிந்திருக்கவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. சந்தம அனில் வித்தானாராச்சி, இலக்கம் 84‐1, ஸ்கூல் பிளேஸ், தலபன்பிட்டிய வீதி, நுகேகொடை என்ற முகவரியில் வசித்துவந்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.ரி.ரத்னாயக்க இவரைக் கைதுசெய்வதற்கான பிடிவிராந்தைப் பிறப்பித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக