சனி, 26 ஜூன், 2010

வரலாறு உங்கள் கைகளில்! தந்துள்ள காலங்களையும், சந்தப்பத்தையும் பயன்படுத்துங்கள்....

விடுதலைப் புலிகளின் தலைமைகளின் அழிவுடன் அதன் தகமைகளும் அழிவடைந்துவிட்டதை யாராலும் மறுக்க முடியாத கட்டாய கால கட்டத்திற்குள் உள்ளோம் என்பதை சகல தரப்பாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு தகமை இழந்தது வெறும் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல தமிழர்களும் தான். இக் கருத்தை ஏற்பதில் கடினமாக இருக்கலாம், ஆனால் அதுவே உண்மை.
ஆகவே தாமாக தேடிக்கொண்ட வலி இது என கூறுவேரும் தாம் விட்ட தவறை திருத்திக் கொள்ள வேண்டும். உணர்ந்தும் கொள்ளவேண்டும்.
எப்படித்தான் புலிகளின் வாரிசுகள் நாம் என்று கூறினாலும், உண்மைக்கு தலைவணங்கி சத்தியவழியில் செல்லாது உண்மையான தமிழ் உணர்வாளர்கள் மீது கல்லெறிவதற்கு நாங்கள் என்றும் உள்ளோம் என்பதற்கு சிலரின் செயல்களும் உள்ளன என்பதை எல்லோரும் உணரவேண்டும்?


விமர்சனம் என்ற போர்வையில் வசைபாடுதல், பொய்யை உண்மையாக்குதல், தம்மை புனிதர்களாகக் காட்டுதல் போன்றவற்றை தவிர.............?


இன்று வரைக்கும் எதுவித இராஜதந்திரமற்ற சுட்டுவிரல் நகர்வை மட்டுமே கொண்டுள்ளது தமிழ் இனம்


முப்பது வருட ஆயுத போரில் எப்போதுமே நிறைவான வளங்களும், போரிடும் திறன் இல்லாது போனாலும் நவீன ரக ஆயுத தளவாடங்களை கொண்ட இராணுவமாக சிறீலங்கா இராணுவம் இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் வன்னியை தளமாக அமைத்துக் கொண்டதும் அது தான் காரணம் அதனையே அவர்கள் ‘இராணுவ தந்திரம்’ என்ற சொற்பதம் மூலம் சுட்டி காட்டினர்.


புலம் பெயர் தமிழ் சமூகம் சில சொற்பதங்களின் உள்ளாந்தங்களை புரியாவிட்டாலும் புலத்திலுள்ள தமிழர்கள் அறிவார்கள்.


1990ம் ஆண்டளவில் பலாலி இராணுவ முகாம் முற்று முழுதாக புலிகளின் சுற்றிவளைப்பில் இருந்த போது ‘புலிகளிடம் ஒரு ஹெலி இருந்தால் போதும் பலாலி கட்டுப்பாட்டில் வந்துவிடும்’ என ஏங்கினர் குடாநாட்டு மக்கள்.


அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் தமது அரசியல் நகர்வுக்காக தொட்டு நக்கும் ஊறுகாயைப் போல் யுத்தத்தை நகர்த்திவந்தனர். சிறீலங்கா படைகள் அவ்வப்போது மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் குறிக்கப்பட்ட பகுதிகளை கைபற்றவே செய்தனர்.


மக்கள் அச்சப்பட்டது போல 1994ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் தொடர் இராணுவ நடவடிக்கைகைள மேற்கொண்டு யாழ் குடாநாட்டை கைப்பற்றியிருந்தது. தற்போது முழு திறனையும் எதோ வழியில் பயன்படுத்தி புலிகளின் தலைமையை அழித்தன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கான முகவரியை இழக்க செய்துள்ளது மகிந்த தலைமையிலான அரசு.


சிறீலங்கா இராணுவத்தை கூட்டாக தமிழ் போராளிகள் எதிர்த்த காலத்தில் போதிய ஆயுதங்கள் இல்லாத நிலையில் ஒரிருவர் மட்டும் நிஜய ஆயுதங்கள் வைத்திருக்க மற்றவைகள் பனை மட்டைகளையும் ஊமல்கொட்டன்களையும் அடைந்த பொதிகளுடன் போராளி குழுக்கள் நடமாடிய போது இராணுவம் அஞ்சி ஓடியதும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதும் ஒற்றுமையின் வரலாறுகள்.
அன்று எல்லோரும் ஓரணியில் இருந்ததால் சாதிக்க முடிந்தது.


ஆனால் இன்று?..


2009 மே 18 இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து புலம் பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவசியமற்ற பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.


இதுவரை நாளும் தேசத்திற்காக உண்மையாக பாடுபட்டவர்கள் துரோகிகள் என விமர்சிக்கப்படவும். சுருட்டுவதற்கென இருந்த கூட்டம் கொள்ளையடிக்கவும். மீதியானவர்கள் தமக்குள் மோதிக்கொள்ளவும் என சர்வதேசத்தில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
இன்று சீறீ லங்காவில் யுத்தம் முடிவுற்றதே தவிர தமிழர்களுக்கான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. சொந்த நிலத்தில் வாழ்வதற்கு தம்மை அடையளப்படுத்த வேண்டியவர்களாக, அனுமதி பெற வேண்டியவர்களாக தமிழர்களை மாற்றியுள்ளது


தமிழர்களுக்கிடையிலான பிரினைவாதங்கள். தமிழர் தாயகத்தை அனுபவிப்பதற்கு சொந்த நிலத்து மக்களுக்கு கிடைக்காத உரிமை வந்தேறிகளுக்கு கிடைத்துள்ளது. அத்துடன் புதிய சின்னங்களும் விதைக்கப்படுகின்றன.


சிறீ லங்காவில் இல்லாமல் போகும் ஒரு இனமாக தமிழன் மாறியுள்ளதை அறிந்தும் அறியாதவர்கள் போலுள்ளனர்.


இந்த நிலையில் குடா நாட்டு பகுதியில் கொலை சம்பவங்களும் மற்றும் சமூக அச்சுறுத்தல் சம்பவங்களும் பதட்டமான மன நிலையை உருவாக்கியுள்ளன.


இச் சம்பவங்கள் சிறிதாக இருந்தாலும் பாரிய அழிவை நோக்கி நகர்த்துவதாகவே அமையும். மேலும் இச் சம்பவங்களுக்கு முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீது பழி போடுவதும், மாற்று கட்சிகள் மீதும் பழி சுமத்துவதும் தமிழினத்தன் மீதான முற்று முழுதான களையெடுப்பே.


சில சமூக அச்சுறுத்தல்களை கட்டுப்படுதுவதற்கு விடுதலைப் புலிகள் இல்லையே என்ற மக்களின் எண்ணப்பாட்டை அறிந்துள்ள புலனாய்வு பிரிவினர், அதனை சாதகமாக பயன்படுத்தி தமது கூத்துகளை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர்.


புலிகளின் இழப்பினை ஈடுசெய்ய முடியாத ஒன்றாக நினைப்பவர்களின் உணர்வுகளுக்குள் ஊடுருவும் புலனாய்வினர், புலிகளின் மீள் உயிர்ப்பு தொடர்பான சுவையான கதைகளை அள்ளி வீசுகின்றனர் இலகுவாக இதில் சிக்கிக் கொள்ளும் தீவிர ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக, உணர்ச்சிவசமாக புலிகளின் மீள் வருகையை ஆதரிக்கிறார்கள்.


இந்த மோட்டுத்தனமான ஆதரவு சிறீலங்க புலனாய்வு பிரிவினருக்கு மிகவும் உதவியாக அமையும். ஏற்கனவே இடம் பெற்ற பல தாக்குதல்கள் (ராஜீவ் கொலை) சம்பவங்களுக்கு இவ்வாறாக கண்மூடித் தனமாக விசில் அடித்ததன் பலனை இன்று அறுவடை செய்து நிற்கின்றது தமிழினம்.


இந்த விசிலடிப்புகளை எதிர்பார்த்து தான் ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரத்தில் குடா நாட்டில் துண்டு பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டவற்றின் சுருக்கம்


‘அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்’ தேசப்பற்று விடயங்களை சுட்டிக் காட்டவதனால் மறுத்துப் பேச முடியாத சூழ் நிலை, ‘துணிச்சலா விட்டுட்டாங்கள்’ என்று அறிக்கைகளை ஆராயாமல் ஆதரிப்பது. இது போன்ற பின்னனிகளை ஆழமாக நோக்க வேண்டும்.


இவ் அறிக்கையின் பின்னர் இரண்டு அரசியற் படு கொலைகள் வடமராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும் வி.புலிகள் இருந்த காலத்தில் ஈ.பி.டி.பி யினரை உசுப்பேற்றிய அரசு இன்று அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க துணிந்திருக்கிறார்கள்.


பழிவாங்கும் எண்ணத்தில் இவ் விடயத்தில் சந்தோசப்பட்டலாம் ஆனால், தமிழன் என்ற அடிப்படையில் ஏற்க முடியாது.


ஏனெனில் ஜனநாயக வழியில் இணைவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று கூறிக் கொண்டிருந்த இக் கட்சிகள் இன்று தமது சொந்த பெயரில் கூட போட்டியிட முடியாதவர்களாக உள்ளதுடன், தற்போது சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் தமது கட்சி விழுங்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தில் உள்னர்.


தமிழினத்தின் எந்தவொரு அரசியல் சக்தியையும் செயழிழக்க செய்ய வேண்டும் என்ற பேரினவாத சிந்தனையின் உள்நோக்கம் மாற்றுக் கட்சிகளுக்கும் உறைக்கத் தொடங்கிவிட்டது.


ஆகவே


‘பொது சக்தி’ அல்லது ‘பொது சபை’ இல்லாத தமிழ் தலைமைகளை தனித்தனியே செயழிழக்க செய்வது இலகுவான விடயம் என்பது பேரினவாதத்தின் கணக்கு. இதற்கு புலம் பெயர் தமிழர் சமூகத்திலும் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளும், சேறு பூசுதல்களும், தேசத்துரோகி, தமிழினவிரோதி என்ற பட்டம் சூட்டுதல்களும் பேரினவாதத்தின் சாதகமான போக்கிற்கே கைகொடுக்கும்.


சர்வதேச சமூகம் தற்போது தாம் கையில் வைத்திருக்கும் குற்றச் சாட்டுகளை தமது தேவைகளுக்காக வைத்திராமல் உண்மையான தீர்விற்காக பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்களை, ஒத்துழைப்பக்களை வழங்குவதை விடுத்து தமிழன் ஒரு போக்கு கெட்டவனான ‘சுட்டுவிரல்’ சமூமகாக மாறியுள்ளது.


விடுதலைப் புலிகளால் மாற்று இயக்கங்கள் தடைவிதிக்கப்பட்ட போது அவ் அமைப்புக்கள் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வில்லை, மாறாக பழிவாங்கும் சக்தியாக மாற்றமடைந்து மக்களின் நம்பிக்கையற்றவர்களானார்கள்.


இத்துயர சறுக்கல்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழ் சமூகமும் அகப்பட்டுள்ளமையானது தமிழினத்தின் வேதனையை அதிகரிக்க செய்துள்ளது.


ஓரேயொரு தமிழனால் அறிமுகப்படுத்தப்பட்டு, வரையப்பட்ட ‘பயங்கரவாத தடைசட்டம்’ உலகம் முழுக்க நடைமுறையில் இருக்குமானானல், குறிப்பாக அமெரிக்காவின் சிறந்த ஆயுதமாக அது பயன்படுமானால், ஏன் தமிழருக்கான ஒரு தீர்வை ‘ஒரே குரலில்’ அழுத்தி கூற முடியாது?


தமிழ் தலைமைகள் யாவுமே ஏக பிரதிநிதுத்துவம் என்ற விடுபடமுடியாத கொள்கையுடையவர்கள் என்பதே உண்மை.


இக் கொள்கையை மக்களுக்காக கைவிட்டு பொது உடன்பாட்டுக்கு ஒத்து போகாதிருந்தால் எதிர்காலத்தில் மக்கள் முற்றுமுழுதாக அரசியலிலிருந்து விலகியே நிற்பர், [கடந்த தோர்தல்களில் வாக்களித்த வீதம் நினைவிற்கொள்க]


ஆகவே அந்தந்த கட்சிகளின் தற்போதைய தலைவர்கள் மறைந்து விட்டால் அக்கட்சியே இல்லாமல் போகும் என்ற இன்றைய சூழ்நிலையை உணராமல் இல்லை. விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் அவ் அமைப்பின் தகுதியை தாராளமாக கணித்து வைத்துள்ள இன்றைய தலைவர்கள் தாங்களும் தவறு விடலாமா?


ஆகவே மரணித்து போனவர்களின் கல்லறைகளை துவம்சம் செய்வதானது நாளைய எமது வரலாறுகளையும் சேர்த்துத்தான் என்பதை உள்ளுர உணர்ந்தும், மௌனித்து நிற்பது ஏன்? மக்களை தெருக்களுக்கு இழுத்து வந்தவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல நீங்களும் தான்.


தேசத்தின பெயராலும், அல்லலுறும் மக்களின் கண்ணீராலும், ஈழ விடுதலைக்காய் மரணித்த ஒவ்வொரு உயிர்களின் பெயராலும் மற்றவர்களுக்கு அபாயமிடுவதை விடுத்து வரலாறு உங்கள் கைகளில் தந்துள்ள காலங்களையும், சந்தப்பத்தையும் பயன்படுத்துங்கள்.
சகல தமிழ் அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு தமிழர்களுக்கான பொது சபையை உருவாக்க வேண்டும், குறிப்பிட்ட பொது சபையிற்கென வகுக்கப்படும் கொள்கைகளுக்கமை தத்தமது கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் வேண்டும்.


இது காலத்தின் தேவையும் கட்டாயமுமாகும். கௌரவமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கும், சர்வதேசத்தின் பார்வையில் திருப்பு முனையாக அமைவதற்கும் உதவும்.கட்சி பிளவுகளால் ஏற்பட்டுள்ள சமூக அச்சுறுத்தல்களை நீங்கவும். நம்பிக்கையையும் வளர்க்கும்.


புலம் பெயர் தமிழர் சக்திகளும், புலத்து வாழ் தமிழர் சக்திகளும் ஒன்றுபட்டு பலமான அறிவியல், அரசியல் சக்தியை தமிழருக்கென்று ஏற்படுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக