சனி, 26 ஜூன், 2010

எதிரியை வீழ்த்துவோம் ........

எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பழமை பேசாதீர்கள், குழந்தைகளை வன்முறையாளர்களாக்காதீர்கள் என்றெல்லாம் பேசுவதின்மூலம் இவர்களில் பலர் புத்தனின் வாரிசுகளாக இல்லையெனில் அமைதியின் குழந்தைகளாக தம்மை பாவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று தோன்றுகிறது.
நாம் பலமுறை வலியுறுத்தி சொல்கிறோம், எந்த ஒரு நிகழ்வும் தாமாக நிகழ்கிறது. அவை எதிர் நிலை எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்பவே தம்மை உருமாற்றிக் கொள்கிறது. உலகம் தொடங்கிய காலத்திலிருந்து மனிதன் காலூன்றி, கையசைத்து நடக்க துணைபுரிந்தது அவர்களின் தேவைகளே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வன்முறை என்றால் என்னதென ஒரு வரையறை இருக்கிறது. மாமனிதன் காரல்மார்ஸ் குறிப்பிடுவதைப்போல அரசியல் கலக்காத வன்முறை போக்கிலி தனமாகும். ஆகவே, எந்த ஒரு வன்முறைக்கும் அரசியல் துணை நிற்கிறது. அந்த அடிப்படையில் தமிழ் தேசிய அரசியலே இனவிடுதலை குறிக்கோளுக்காக பகைவன் எடுக்கும் கருவிகளை தம்மைக் காத்துக் கொள்வதற்காக தம் தோளில் சுமக்க துணைபுரிகிறது.


மாவீரர் பகத்சிங் சொல்லிய வார்த்தைகள் பலமுறை நாம் நினைவூட்டி இருக்கிறோம். நாம் எந்த கருவியை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான். ஆக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது கருவி ஏந்தும் ஒரு நிலையை எதிரிதான் திணித்தானேத் தவிர, நாம் விரும்பி எந்த நிலையிலும் கருவி ஏந்த நினைக்கவில்லை என்பதை எதிர்மறை கூற்றுகளால் பெரும் புனிதர்களைப்போல வேடம் தரிக்கும் வேடதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். கருவி என்பதுகூட நேருக்கு நேர் நின்று பதிலுக்கு பதில் என்பதிலே நிறைவடைய முடியும். ஆனால் கருத்து என்பது காற்றிலே கலந்து, அது ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டதாக இருப்பதால் இப்போது கருவிகளை ஒழித்த இந்த கூட்டம், கருத்துக்களால் நம்மை குழப்பவும், நம்மிடமிருந்து புதிய நிலைகளை கலையவும் பெரும் முயற்சி எடுக்கிறது. இந்த நேரத்தில் நாம் மிக மிக கவனமாக, தெளிவாக, நுண் பகுப்பாய்வு செய்து நம்மை நடத்திக் கொண்டு நகர வேண்டும். இந்த கருத்துக்களால் நமக்குள் தோல்வி மனப்பான்மை உருவாகாமல் வெற்றியின் இலக்கை நோக்கி நமது ஒவ்வொரு அடியும் அழுத்தமாகவும், உறுதியாகவும், முன்னோக்கி நகர வேண்டும்.


இந்த எதிர்மறை கூற்றாளர்களுக்கு சில விவரங்களை நாம் அளிக்க வேண்டும். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. தெரிந்திருந்தும் தம்மை உத்தமர்கள்போல காட்டிக் கொள்பவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இலங்கையில் ஏதோ மிக மிக அமைதி நிறைந்த சூழல் அமைந்திருப்பது போலவும், அங்கே மகிழ்ச்சியும் மனநிறைவும் தாண்டவமாடுவதுப்போலவும் சிலரின் கருத்துக்கள் வருவது நமக்கு எரிச்சலையே தருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சென்று திரும்பிய மனித உரிமை ஆர்வலர் ஃபில்கிளென்டென்சிங் கூறிய கூற்று நம்மை திகைப்புக்குள்ளாக்குகிறது. இதை நமது எதிர்மறையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


"போர் காலத்தின்போது தமிழீழத்தை விட்டு வெளியேறிய அம்மக்கள் மிகவும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பதாகவும், அவர்கள் மீண்டும் தமது பகுதிக்கு வரும்போது அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சிங்கள பாசிச அரசு மிகவும் கொடுமைக்குள்ளாக்கி நடத்துவதாகவும், சற்றேறக்குறைய வரும் எல்லா மக்களையும் இப்படிப்பட்ட பெரும் துயருக்கு சிங்கள அரசு உள்ளாக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள கிளென்டென்னின் போர் நடைபெறவில்லை என்பதால் அங்கு அமைதி திரும்பி விட்டது என சொல்வதில் அர்த்தமில்லை" என்று தெரிவித்திருக்கிறார். ஆக, அமைதியற்ற வாழ்வதற்கு தகுதிஅற்ற தமது நிலத்தில் ஏதிலிகளாக்கப்பட்ட வாழ்வியல் கொண்டவர்களாகத்தான் தமிழீழ மக்கள் இன்றுவரை அங்கே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது பொய்.


அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள், இயந்திரங்களாக. ஆகவே, இது புரிந்தும் புரியாததைப்போல அமைதி திரும்பிவிட்டது, இனிமேல் ஆயுதம் வேண்டாம், பழைய கதைகளை பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்றெல்லாம் எதிர் கருத்துக்களைக் கொண்டு இயங்கும் ராசபக்சேவின் சகோதரர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது, நீங்கள் தமிழர்கள் என்ற போர்வையில் இதுபோன்று தமிழ் இன விரோத நடவடிக்கைகளில் இறங்காதீர்கள். முடிந்தவரை எமது மக்களுக்கு, எமது மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வாதார நிலைக்கு உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் நீங்கள் அமைதி காப்பதே எமக்கு செய்யும் பேருதவியாக அமையும்.


இலங்கையின் இன்றைய சிறார்கள் கரங்களிலே ஆயுதம் தரிப்பதை தவறு என சுட்டிக்காட்டும் இந்த வன்முறை எதிர்ப்பாளர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளும் ஒரு செய்தி, இன்றைய இலங்கையின் சிறார்கள் பாடசாலைக்கு செல்லக்கூடிய நிலையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சற்றேறக்குறைய அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட எமது தமிழ் மாணாக்கர் பள்ளிக்கு செல்ல முடியாத பரிதாபகரமான நிலையில்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெறும் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு 86,000 மாணாக்கர் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த நிலைமை மாறி, இன்று வெறும் 26,000 மாணாக்கர் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள்.


மேற்கொண்டு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் 60,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமது கல்வியை தொடர முடியாத நிலைமை அங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்? அறிவு திறன் பெற்றவர்களாக தமிழ் மாணாக்கர் வளர்ந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் முலையிலேயே கிள்ளி எறியும் மிகவும் கீழ்த்தரமான அறிவு அழிப்பு நிகழ்வை அல்லவா ராசபக்சே அரசு அங்கு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதை முறியடிக்க எப்படி நாம் முனைப்புக் காட்டுவது என்பதை மறந்து, ஏதோ அங்கே அமைதி நிலவுவதாகவும், இனிமேல் கருவிகளுக்கு அங்கே வேலை இல்லை என்பதைப்போலவும் பேசிக் கொண்டு திரியும் முட்டாள் தனமான இந்த வேதாந்திகள், இன அழிப்பு எதிரியை விட மிகவும் மோசமானவர்கள். இவர்களிடம் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


60,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் பள்ளிக்கு செல்வதில்லை என்ற செய்தியை இங்கிருந்து குறிப்பெடுத்து சொல்லவில்லை. இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முக்கிய எதிர்கட்சி தலைவருமான டி.எம்.சுவாமிநாதன் கூறுகிறார். நிலை இப்படியிருக்க, அங்கு ஏதோ அமைதியான, மகிழ்வாக சூழ்நிலை நிலவுவதுப் போலவும், இதை ஏற்றுக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்பதைப் போலவும் ஒரு முரண் தகவல்களை சொல்லிக் கொண்டு திரிவது இன துரோகம் என்பதை இந்த முரண் கருத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். செத்து மடிந்த சொந்த உறவுகளின் ஓல ஓசை ஓய்வதற்கு முன்னால் அந்த பிணங்களுக்கு மேல் நடத்தப்படும் மொழிகாக்கும் மாநாட்டிற்கு வந்திருக்கும் தமிழறிஞர் என்று சொல்லிக் கொள்ளும் சிவதம்பி, சென்னை தினமணி நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.


அந்த நேர்காணலிலே தெளிவாக சொல்கிறார், நான் முதலில் இலங்கை குடிமகன், பிறகு தான் தமிழன் என. தமிழாய்ந்த ஒரு அறிஞர், நாம் தமிழ் மண்ணிலே இருக்கிறோம் என்ற உணர்வுகூட இல்லாமல், தம்மை இலங்கை குடிமகன் என்று சொல்லிக் கொள்வதின்மூலம் தமிழின விரோதத்தின் முதல் மகனாக தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்படி இலங்கையின் குடிமகனாக இருக்கின்ற காரணத்தினால்தான், இனஒழிப்பு வெற்றி விழாவுக்கு செம்மொழி மாநாடு என்ற பெயரிலே சிவதம்பி அவர்கள் வந்திருக்கிறார், வாழ்த்தியிருக்கிறார், உலக தமிழ் இனத்தின் தலைவர் என கருணாநிதியை புகழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட இனதுரோகிகள் இருக்கும்வரை, தமிழினத்தின் விடுதலை சற்று தாமதப்படத்தான் செய்யும். சரியான புரிதல் இல்லாமல், தமிழின அழிப்பில் தலைமையாக செயல்பட்ட கருணாநிதியை தமிழினத் தலைவர் என்று வாய்கூசாமல் பொய் பேச சிவதம்பிக்கு எப்படி மனம் வந்தது. இப்படி சிவதம்பியின் வாரிசுகளாக இருப்பவர்கள் பலர், நமது இனவிடுதலைப் போராட்டத்திற்கான வடிவமைப்பை எதிர்களத்தில் நின்று விமர்சிக்கிறார்கள்.
ஒரு வரலாற்று உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் சொல்கின்றோம். உலகத்தின் பாதைகள் அனைத்தும் ரோமை நோக்கித் திரும்பட்டும் என்று சொல்லும் அளவிற்கு ஒட்டுமொத்த மாந்தத்தின்மீது தமது அழுத்தத்தைச் செலுத்திய கத்தோலிக்க திருச்சபை, கடந்த 16ஆம் நூற்றாண்டு வானியல் அறிஞர் நிக்கோலஸ் கோபர் நிக்கசின் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவரை கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கி, கொடுஞ்சிறையில் போட்டது. 1472ஆம் ஆண்டு முதல் 1542ஆம் ஆண்டுவரை வாழ்ந்த கோபர் நிக்கஸ், பூமி சூரியனை சுற்றுகிறது என்கின்ற பேருண்மையை வெளியிட்டார். அதுவரை பூமி தட்டையாக இருக்கிறது என்றும், சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருந்த திருச்சபை, இந்த புரட்சிகரமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தள்ளாடியது. எரிச்சல் கொண்டது. ஆனால் காலம் மாறியது. 16ஆம் நூற்றாண்டில் மறைந்த கோபர் நிக்கசின் உடலை மீண்டுமாய் தோண்டி எடுத்து, போலாந்தில் உள்ள பேராலயத்தில் மீண்டும் நல்லடக்கம் செய்தது கத்தோலிக்க திருச்சபை. 500 ஆண்டுகளாக முரண்களத்தில் நின்று, 500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாய் அந்த பேருண்மையை கண்டுபிடித்த புரட்சிகர சிந்தனையாளனின் உடல் மரியாதைக்கு உட்படுத்தப்பட்டது.


இது வரலாற்றில் தொடர்ந்து நிகழக்கூடிய ஒரு இயல்பான நிலைதான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய எமது தேசிய தலைவரை நிந்திக்கும் அல்லது அவரை, அவரின் போர் தன்மைகளை விமர்சனம் செய்யும் இந்த முரண் கருத்தாளர்கள் மீண்டுமாய் அவரை ஏற்றுக் கொள்ள தொடங்கும் காலம் மிக விரைவாக இருக்கிறது. கோபர் நிக்கசின் உடலை தோண்டி எடுத்ததைப் போன்று, எமது தேசிய தலைவரின் சிந்தனைகளை தோண்டி எடுத்த அரியாசனத்தில் ஏற்ற, இவர்கள் வரும் காலம் அருகாமையில் இருக்கிறது. இதுதான் சரியென அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுவரை நாம் அமைதி காக்க கூடாது. கோபர் நிக்கசுக்குப்பிறகு அடுத்தடுத்து அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்த அறிவியல் அறிஞர்களைப் போன்று தமிழ் உறவுகள் தொடர்ந்து விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.


இதுவே தேசிய தலைவரின் சிந்தனைக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும். தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ குடியரசு அமைவதற்கு நமது பங்களிப்பாகும். கருத்தாளர்கள் நேரிடையாக கருத்து மோதலுக்கு வாருங்கள். களம் அமைப்போம். கருத்து களத்திலேயே சந்திப்போம். நியாய, அநியாயங்களை குறித்து உரையாடுவோம். நாம் விடுதலையின் தேவையை முன்னிருத்தி வாதாடுவோம். உண்மை என்பது மறையக்கூடியதல்ல. ஆகவே, அதில் நாமே வெற்றி பெறுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம். தொடர்ந்து முன்னேறுவோம். கருத்துக்களால் எதிரியை வீழ்த்துவோம். நமது விடுதலை பக்கத்தில் இருக்கிறது. அதுவரை ஓய்வு, உறக்கமின்றி தொடர் பணியாற்றுவோம். தமிழீழம் காண்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக