ஞாயிறு, 6 ஜூன், 2010

இன்றைய செய்தித் துளிகள்..........

வடக்கு மக்களின் அவல நிலைமைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியும் முக்கிய பொறுப்பாளி என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை நிறுத்த வேண்டுமெனக்கோரி தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்குப் புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என்பது உண்மை என்ற போதிலும் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் இலகுவானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாது தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டவேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு. இரண்டு மாகாணங்களாகச் செயற்படுவதில் தவறில்லை.


இரண்டு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மக்களின் மீள்குடியேற்ற நடவ டிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 உறுமயவின் ஆலோசனை கூட்டமைப்புக்குத் தேவையில்லை – அரியநேத்திரன் எம்.பி. பதிலடி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனையோ, அச்சுறுத்தலோ வழங்கும் அருகதை ஜாதிக யஹல உறுமயவுக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா.அரியநேத் திரன் தெரிவித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அவர்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அரசுடனான பேச்சுக்களில் பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என யஹல உறுமய எச்சரிக்கை விடுத்தது.


யஹல உறுமயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்ததேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்த அரியநேத்திரன் எம்.பி. இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் பிரதேச பொதுமக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம் மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் பெருவிழா எடுக்கப்பட்டது.


இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு பேசும் போதே அவர் இவ்வாறு ஜாதிக யஹல உறும யவுக்குப் பதிலடி கொடுத்தார். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் பெளத்தமத குருமார் கருத்துக்களை வெளியிடுகின்றமையே அந் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாகும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய கூட்டமைப்பினருக்குத் தமிழர் பிரச்சினையை எப்படிக் கையாள வேண்டும் என்று நன்றாகவே தெரியும்.


ஜாதிக யஹலஉறுமய எங்களுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. எங்களை அச்சுறுத்துகிறார்கள் என்பதற்காக நாம் வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டோம் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் மஹிந்த ராஜபக்ஸவிடம் இனப்பிரச்சினை தீர்வுக்கு மன்மோகன்சிங் வலியுறுத்த வேண்டும் – கருணாநிதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி அந்நாட்டு பிரதமர் மன்மோஹன்சிங்கிற்கு கலைஞர் கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்திய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போதே இந்த வலியுறுத்தல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


2009ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால் இன்னமும் 80ஆயிரம் தமிழர்கள் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக