ஞாயிறு, 6 ஜூன், 2010

வாழ்ந்து காட்டிய தேசிய தலைவர் -கண்மணி

வீழ்த்த முடியாத உயரத்தில் தமிழின விடுதலை நிலைபெற்றிருக்கிறது. பன்னாட்டு அரச பயங்கரவாதங்கள் ஒன்றிணைந்து எமது விடுதலையை அதன் வீரியமிக்க போராட்ட வடிவங்களை வீழ்த்தமுடியவில்லை. உரிமையற்று, மானமற்று வாழ்வதைவிட செத்துப்போவதுதான் சாலச்சிறந்து என்கிற உயரிய மாந்த சிந்தனையோடு தமிழினம் தமது போராட்ட வடிவங்களை தளம், களம் மாற்றி கருத்தூண்றி நிற்கின்றது. நாம் வாழ்வதற்கு வெறும் உயிர் போதும். சோறு போதும். சோறு திண்று வாழ்வது மட்டும்தான் வாழ்வா? என்றால்
இல்லை என்று தான் மானமுள்ள எவரும் சொல்வார்கள். தந்தை பெரியார் மனிதனுக்கு அழகாக அணிப்பூட்டுவது மானமும் அறிவும்.


இந்த மானமும் அறிவும் தான் நமது வாழ்வை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அதுவே நமது எண்ணங்களை, நமது செயல்பாடுகளை விரிவடையச் செய்கிறது. அது வானத்தைப்போல் அகன்றதாக இருக்கிறது. ஆகவேதான் நாம் மானத்தோடு வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மானத்தோடு வாழ்வதென்றால் அடிமை தளைப்பூட்டி வாழ்வதற்கு எதிராக நிற்பது. அதற்காக தமது அனைத்து ஆற்றல்களையும் ஒன்று திரட்டி போராடுவது. இதுதான் கடந்தகால தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் நிகழ்ந்தது. உயிரைக் காட்டிலும் மானமே பெரிது என்கின்ற உயரிய தத்துவம் தமிழ் தேசிய விடுதலை வரலாற்றில் நடுப்புள்ளியாக நிலைபெற்று நின்றது. இதிலிருந்து ஒருத்துளியும் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளாமல் மேதகு தமிழ் தேசிய தலைவர் அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்.


அதில் அவர் பெற்ற அவமானங்கள், இழப்புகள், தோல்விகள் அனைத்தும் வரிசையாக வந்தபோதும்கூட அவர் மனம் மாறாமல் அந்த களத்திலே தம்மை இறுக்கமாக பொருத்திக் கொண்டார். தமது மக்களின் விடுதலைக்காக போராடுவது தமது மக்களின் வாழ்வை வென்றெடுக்க களமாடுவது வாழ்வின் அற்புதம் என அவர் நினைத்தார். எந்தஒரு அடிப்படையும் இல்லாமல் களமாடத் தொடங்கிய மேதகு தேசிய தலைவர் அவர்கள் மிகக் குறைந்த காலத்திலே ஒரு நாட்டிற்குத் தேவையான முப்படைகளை கட்டியமைத்து, தமிழ் பாட்டனார்களின் வரிசையிலே இடம் பெற்ற வைராக்கிய நெஞ்சம் கொண்டவராக விளங்கினார். அவரின்றி தமிழீழம் என்பது இல்லை என்பதே இன்றைய அடிப்படையாகும்.


அவரால் விளைந்த தமிழ் இன மான உணர்ச்சி இன்று உலகத் தமிழர் மனங்களில் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. காட்டுத்தீயைக் கூட அணைத்திட முடியும். ஆனால் எமது இனமானத்தீ இனி எந்த காலத்திலும் அணையாது என்பதை நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்க வேண்டும் என்பதை சிங்கள பாசிச அரசு தேர்வு செய்தது. தேசிய விடுதலைப் போராட்ட சமர் களத்தின் நாயகர்களை பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி பழித்துரைத்தது. தேச பக்தர்கள் தமது விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த போராளிகள் சிங்கள பாசிசத்தால் பயங்கரவாத ஆற்றல்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


ஆனால் உலகத் தமிழ் உறவுகள் அவர்களை தமது மனங்களில் சுமந்து, தமது விடுதலைக்கான மகான்களாக போற்றிக் கொண்டாடினார்கள். எமது வீரர்கள் மாண்டபோது, கண்ணீர் விட்டு அழுதார்கள். எமது விடுதலைக்காக அவர்கள் தமது சொந்த உறவு, உடல், உயிர், அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று தனித்தன்மையான எந்த கோட்பாடும் அவர்களின் மனங்களில் இல்லை. ஒரே லட்சியம் இருந்தது. அது தமிழீழ விடுதலை. ஒரே குறிக்கோள் இருந்தது. அது தமிழர்களுக்கான விடுதலை. ஒரே தலைமை இருந்தது. அது மேதகு தமிழ் தேசிய தலைவரின் தலைமை. தேசிய தலைவரின் மூளையில் பிறந்த சிந்தனையெல்லாம் நமது விடுதலையைக் குறித்தே சுற்றி வந்தது. அடிமைத் தளையை அடித்து நொறுக்க அவர் இடைவிடாது சிந்தித்தார்.


அவருக்கென்று தனி விருப்பு வெறுப்பு ஒன்றுமில்லை. அவர் மக்களுக்காக வாழ்ந்தார். மக்களோடு வாழ்ந்தார். மக்களாய் வாழ்ந்தார். அவர் தமிழுக்காக வாழ்ந்தார். தமிழரோடு வாழ்ந்தார். தமிழராய் வாழ்ந்தார். தமிழ் இன விடுதலை வரலாற்றை அவரை பிரித்து வாசிக்க முடியாது. தமிழர்களின் தன்மான இன உணர்வு அடையாளங்களுக்கு மேதகு தேசிய தலைவர் அவர்களே அடிப்படையான காரணியாக அமைந்தார் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத ஆத்ம சுத்தமான ஒரு அற்புதமான தலைவரை நாம் பெற்றெடுத்ததுதான் தமிழினத்தின் சிறப்பாகும்.


உலகெங்கும் இருக்கும் இன விடுதலை போராட்டக்குழுக்கள் இப்பேர்ப்பட்ட ஒரு தலைவர் எங்களுக்கு அமைந்திருப்பாரேயானால், இந்த உலகையே நாங்கள் வீழ்த்தியிருப்போம் என்று தேசிய தலைவரை வியந்து போற்றுகின்றன. அவர் வியந்து போற்றுகின்ற தலைவர் மட்டுமல்ல, தமது உழைப்பால் உயர்ந்த தலைவராக நம்மோடு வாழ்கிறார். எமக்கு பல்வேறு நாடுகளிலிருந்து எப்படி அவர் வாழ்கிறார், அவரை ஏன் கடவுளாக போற்றுகிறீர்கள், இறப்பே இல்லாதவரா அவர் என்றெல்லாம் விமர்சனம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர் கொல்லப்பட்டதை பக்கத்திலிருந்து தாம் பார்த்ததாக சிலர் எமக்கு தகவல் தருகிறார்கள். ஆனால் ஒன்று நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறோம். நமது எண்ணங்களை இந்த படைப்பின்மூலம் அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறோம்.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நேர்மையிலிருந்து ஒருத்துளிக்கூட பிறழாத அற்புத கட்டமைப்பைக் கொண்டது. எமது தேசிய இயக்கம் ஒருவேளை தேசிய தலைவர் மாண்டிருந்தார் என்றால், நேர்மையாக ஒப்புக் கொண்டிருக்கும். காரணம், களத்திலே முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எமது வீரர்களை விதைத்தோமே, எமது தேசிய தலைவரை பொறுத்தமட்டில் அவர் அந்த வீரர்களோடு வீரர்களாகவே வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைக் குறித்து சிங்கள பேரினவாத அரசு பல்வேறு பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறது. அவர் ஏதோ ஆடம்பரமாக ஒரு அரச வாழ்வை வாழ்வதாக எடுத்துக்கூறி, அவரை போராளிகளிலிருந்து தனிமைப்படுத்த பெரும் முயற்சி எடுத்தது. ஆனால் உணவு முதற்கொண்டு எமது தேசிய தலைவர் போராளிகள் எதை உண்கிறாரோ, அதைத்தான் தாமும் உண்டு, அவர்களோடு களத்திலே ஒரு தோழனாய், வழிகாட்டியாய், தொண்டனாய், தலைவனாய் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தாயாய் நின்று அவர்களை ஊக்குவித்தார்.


அதுதான் இந்த விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர் என்பதை துரோகிகள் மறந்துவிடக் கூடாது. சாதியை எதிர்க்க வேண்டும் என்பது சிலரின் அரசியல் நடவடிக்கையாக இருக்கிறது. ஆனால் தேசிய தலைவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதிலே சரியான பாதையில் பயணித்தார். தாம் அமைக்கப்போகும் தமிழ் தேசிய குடியரசில் சாதியற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். சாதிய ஒழிப்பு நடவடிக்கையில் அவர் கையாண்ட முறை ஒரு தாயைப் போல, ஒரு தலைவனைப் போல, ஒரு போராளியைப் போல, ஒரு படை அதிகாரியைப் போல இல்லாமல் ஒரு ஆசிரியரைப் போல இருந்திருக்கிறது.


ஒருமுறை யாழ் மாவட்டத்தில் சாதிய பேதங்களால் சூழப்பட்ட ஒரு கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட ஒருவரை உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், சாதிச் சொல்லி திட்டியதாக ஒரு புகார் எழுந்தது. இதை தாமே நேரிடியாக சரி செய்ய தேசிய தலைவர் முன் வந்தார். பாதிக்கப்பட்டவரையும், பாதிப்படைய செய்தவரையும் அழைத்துவர செய்து, இருவரையும் மேல் சட்டையை கழற்றச் சொன்னார். இருவரின் முதுகிலும் சர்க்கரையைக் கொட்டினார். முதலில் சாதிச் சொல்லி திட்டியவரை அத்தாழ்த்தப்பட்ட மனிதரின் முதுகிலிருக்கும் சர்க்கரையை நக்கிப் பார்க்கச் சொன்னார். அவரிடம் கேட்டார், சர்க்கரை இனித்ததா? கரித்ததா? என. அவர் சொன்னார், இனித்தது என. பின்னர் தாழ்த்தப்பட்டவரை உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொண்ட அவரின் முதுகில் இருக்கும் சர்க்கரையை சுவைக்கச் சொன்னார். அவருக்கும் சர்க்கரை இனித்தது.


தேசிய தலைவர் இருவரிடமும் சொன்னார், சர்க்கரை யார் முதுகில் பட்டாலும் இனிக்கத்தானே செய்கிறது. பின்னர் ஏன் நீங்கள் இருவரும் இருவேறு களங்களில் இருக்க முயற்சிக்கிறீர்கள். தவறை தொடர்ந்து செய்யாதீர்கள் என்று பாசத்துடன் கூறி அனுப்பினார். அன்று திருந்திய அவர், அதன் பிறகு சாதிய எண்ணங்களை தமது மனங்களில் இருந்து கழற்றி எறிந்ததாக வாக்குமூலம் அளிக்கிறார். இது ஒரு தலைவன் என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு சராசரி தமிழனாக தமது மக்கள் எந்த நிலையிலும் சாதி அடிமைகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தேசிய தலைவர் செய்த சிறு செயல் தான்.


இதைபோன்று ஆயிரக்கணக்கான உதாரணங்கள் தேசிய தலைவரின் வாழ்விலே நிகழ்ந்திருக்கிறது. அவரின் அருகில் இருந்து அதை அனுப்பவித்தவர்கள் தனது மனங்களைத் திறந்து பேசும்போது, ஒரு மாபெரும் தத்துவத்துடன் தாம் வாழ்ந்ததாக பெருமைக் கொள்கிறார்கள். தேசிய தலைவரை பொருத்தமட்டில் அவர் மாந்த நேய அறப்பணியாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த நிலையிலும் ரத்த வெறி கொண்ட கொடுங்கோலனாக தமது இயக்கத்தை அவர் வழிநடத்தியது இல்லை. ஒருவேளை தேசிய தலைவர் அவர்கள் கட்டளையிட்டிருந்தால், லட்சக்கணக்கான சிங்கள மக்கள் உயிரிழந்திருக்கலாம். ஆனால் உயிரின் மகத்துவத்தை, மாந்த மாண்பை அவர் போற்றி, தமது உயரிய சிந்தனைக்குள் வைத்திருந்தார். ஆகவேதான் களத்திலே மாவீரர்களான போராளிகளைத் தவிர, தனி மனிதனை இதுவரை கொடும் தண்டனையால் அவர் இடர் செய்தது கிடையாது. இதுவே அவர் மாந்த வாழ்விலே கருணையோடு வாழ்ந்த மாபெரும் மனிதர் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.


இப்படிப்பட்டவரைத் தான் இவர்கள் அரக்க மனம் படைத்தவர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் பெயர் சூட்டி அழைக்கிறார்கள். முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு அவை அனைத்தும் பொய்யென ஆக்கப்பட்டது. தேசிய தலைவரின் உண்மையான வாழ்வு, அவரின் படை நடத்துதல், அவருக்கான உள்ளார்ந்த மாந்த நேய சிந்தனைகள் மெய்யென நிரூபிக்கின்றது. இப்பேர்ப்பட்ட சிறப்புமிக்க ஆற்றல்வாய்ந்த அன்னையைப்போல் அரவணைக்கும் ஒரு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். யாரெல்லாம் தூற்றுகிறார்களோ, அவர்களும் ஒருநாள் தேசிய தலைவரின் பக்கத்தில் நிற்பார்கள் என்பதற்கு அவரது வாழ்விலேயே பல்வேறு சான்றுகள் இருக்கிறது.


யாராவது மேதகு தேசிய தலைவர் அவர்களை தவறாக பேசியதாக அறிந்தால், அவர் கோபப்பட்டது கிடையாது. படைத் தளபதிகள் இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று எமது தலைவரிடம் சொல்லும்போது, அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவர் என்னோடு வாழட்டும். பிறகு தாம் கூறியது தவறென்று அவர் உணர்ந்து கொள்வார் என்று. தாம் சொல்வது கிடையாது. எப்படி இருக்க வேண்டும் என்பது அவர் வாழ்ந்து காட்டினார். இன்று ஒரு வரலாற்று பெட்டகமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் வாழும் காலத்திலேயே தமிழனுக்கான ஒரு நாடு அமைய வேண்டும். அமைவது காலத்தின் கட்டாயமாகும். அது தமிழர் வரலாற்றின் தேவையாகும் என்பதை புரிந்துகொண்டு நமது எண்ணங்களை செழுமைப்படுத்துவோம். நமது போராட்டங்களை கூர்மைப்படுத்துவோம். நமது நாடு கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம். வெற்றி பெறுவோம். தமிழீழம் நிச்சயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக