வெள்ளி, 16 ஜூலை, 2010

48 மணி நேரத்திற்குள் நான்கு இளம் பெண்கள் தற்கொலை!!!!!

மலையகத்தில் இளம் பெண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நேற்றும் இன்றும் பாடசாலை மாணவியொருவர் உட்பட நான்கு பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றுபேர் பொகவந்தலாவையைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் உண்மையாகவே தாமக தற்கொலை செய்யப்படுகின்ரார்களா அல்லது வேறு காரணங்களா என தெரியவரவில்லை.



பொகவந்தலாவை கியூ மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று முன்தினமிரவு இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இந்தப் பெண் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டதால் வீட்டுப் பகுதியிலிருந்து புகை கிளம்பி வருவதை அவதானித்த தோட்ட மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அவதானித்த போதும் அந்தப் பெண் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


எனினும் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூரிய தெரிவித்தார்.


அதேவேளை, பொகவந்தலாவை ஜெபல்டன் டி.பி தோட்டப் பிரிவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் நேற்றுக் காலை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 3.00 மணியளவில் பொகவந்தலாவை குயினாத் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவர் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.


இவரின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


இந்த மூன்று மரண சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் பொகவந்தலாவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அத்துடன் புசல்லாவை சவுக்கமலைத் தோட்டத்தைச் சேர்ந்த புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கின்ற 16 வயது மாணவி ஒருவர் இன்று நண்பகல் வேளையில் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக