வெள்ளி, 16 ஜூலை, 2010

ரம்புக்வெலவின் கூற்றுக்கு டக்ளஸ் மறுப்பு...

நாட்டிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டது, அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் வழங்கப்படமாட்டது, என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து நேற்று முன்தினம் கிளி நொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.



இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நேற்றிரவு பி.பி.ஸி. தமிழோசைக் குத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறிய கருத்து தொடர்பாக அமைச்சர் டக் ளஸ் தேவனந்தாவிடம் பி.பி.ஸி. செய்தியாளர் கேட்டபோதே அமைச்சர் மேற் கண்ட வாறு கூறினார்.


இது குறித்து அவர் பி.பி.ஸி.க்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
தென்னிலங்கையில் மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்களோ அவ்வாறே வடக்கிலும் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்று ஜனாதி பதியிடம் நான் ஒருமுறை கூறியிருந்தேன். அந்தக் கருத்தை உறுதிபடுத்திய கூடியவாறுதான் ஜனாதிபதி செயற்படுகிறார்.


ஜனாதிபதி கூறியது.....
பல இடங்களில் ஜனாதிபதி உரையாற்றும் போதும் பாதுகாப்பு வலயங்கள்நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமைச்சரவையில் நான் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றேன். அந்தவகையில் இன்றைக்கு(அதாவது நேற்று) எந்தவிதமான அமைச்சரவைக் கூட்டங்களும் இடம்பெறவில்லை. நேற்றுதான் (நேற்றுமுன்தினம்) கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. ஆனால், அங்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.


நாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் கூட யுத்தகாலப்பகுதியில் மூடப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலயங்களாக கருதப்பட்ட முக்கிய இடங்கள் தற்போது திறந்துவிடப் பட்டுள்ளன. அதேபோல்தான் வடக்கிலும் பல இடங்கள் மக்களின் நடமாட்டங்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களாக கருதப்பட்ட இடங்கள் நாளை அல்லது நாளைமறுதினம் மக்களின் பாவனைக்காக விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேமாதிரி உயர்பாதுகாப்பு வலயங்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும். இப்படி அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக