ஞாயிறு, 25 ஜூலை, 2010

போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்தவிசாரணைஆரம்பமாம் !

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த முதற்கட்ட விசாரணைகளைத் தாம் ஆரம்பிக்க இருப்பதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.



போரின் இறுதிக்கட்டத்தில் ஓமந்தை வாயிலாக இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் குறித்தும் தாம் விசாரணை நடாத்த உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.


2009 மற்றும் 2010 காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து 1100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதேபோன்று காணாமல் போனவர்கள் குறித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணையகத்திலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.


எனினும் அதிகளவானோர் காணாமல் போனதாகக் கருதப்படும் வன்னியில் இதுவரை மனித உரிமை ஆணையகத்திற்கான அலுவலகம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்விடயம் தொடர்பில் விரைவில் பாதுகாப்பு அமைச்சுடன் பேசி தாம் முடிவெடுக்க உள்ளதாகவும் இது தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணையத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு கிளிநொச்சியில் ஒரு தற்காலிக அலுவலகத்தைத் திறப்பது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக