ஞாயிறு, 25 ஜூலை, 2010

அரசின் நல்லிணக்க குழு கேலிக்குரியது...!

வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.



இந்த நிலையில் தற்போது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வுக்கு என்று கூறி நல்லிணக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளமை கேலிக்குரிய விடயம் ஆகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தமை வருமாறு,


இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவும் அதற்காகவே நல்லிணக்க குழுவொன்றினை அமைத்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால், இன்றைய உண்மையான நிலைவரம் வேறாகவே உள்ளது.


இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற முடியாத வகையில் சிங்கள இராணுவத்துக்கான நிரந்தரக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த மக்கள் இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இவ்வாறான மோசமான நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு விரிவான அறிக்கை கொடுத்தும் கூட எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


மாறாக இராணுவத் தளபதி சுதந்திரபுரத்தில் இராணுவத்துக்கான நிரந்தர குடியிருப்புகளைத் திறந்து வைத்துள்ளார். இராணுவத்தின் குடும்பங்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கலாமெனத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உண்மையாகவே ஒரு புரிந்துணர்வை உருவாக்க விரும்பினால் அந்த மக்களை அவர்களது சுதந்திர நிலத்தில் குடியேற்ற வேண்டும். அதனைக் கூடச் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக அந்த மக்கள் வாழ்ந்த மண்ணுக்கு மீண்டும் போக முடியாது என்றால் புரிந்துணர்வு என்பதற்காள அர்த்தம் என்னவென்பதனை அரசாங்கமே புரிய வைக்க வேண்டும். அத்துடன் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குப் புரிந்துணர்வு, புரிந்துணர்வு என்று கூறிக் கொண்டு வடமாகாணத்தை சிங்கள மாகாணமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது.


இன்று வரை வடமாகாணத்தில் மட்டும் ஒரு இலட்சம் துருப்புகள் உள்ளன. வடமாகாணத்தின் சனத்தொகையே பத்து லட்சமாக இருக்கும்போது இவர்களுக்கும் நிரந்தர வதிவிடம் வழங்கப்படுமாயின் அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து ஆகக்குறைந்தது அது நான்கு இலட்சமாக அதிகரிக்கும். இவ்வாறானதொரு நிலையேற்படுமாயின் வடமாகாணத்தின் விகிதாசாரப் பரம்பல் நிச்சயமாக மாற்றமடையும். இவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது. இந்த அடிப்படையில்தான் இராணுவத்தினரையும் அவர்களது குடும்பங்களையும் அரசாங்கம் துரிதமாகக் குடியேற்றி வருகிறது.


அரசாங்கம் அரச காணிகளில் இராணுவத்தினரைக் குடியேற்றுவது என்பதற்கு அப்பாலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களையும் பறித்தெடுக்கிறது. அது கண்டிக்கக் கூடிய விடயம் மாத்திரமல்ல.. பாரதூரமான விடயமும் கூட. இந்த நிலையில் அரசாங்கம் கூறும் தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு என்ற விடயம் அர்த்தப்படுத்தப்பட வேண்டுமாயின் முதலில் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்.


தென்னாபிரிக்காவில் முன்னர் உண்மையைக் கண்டறியும் குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் குழு தென்னாபிரிக்காவின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னரே உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவின் முன்தோன்றி பலர் சாட்சியமளித்தனர். பலர் மன்னிக்கப்பட்டார்கள் பரஸ்பரம் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால், இங்குள்ள நிலைமை வேறு. யுத்தம் முடிவடைந்து நீண்ட காலமாகியும் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்காக இது வரை எந்த முன்னெடுப்புகளும் இல்லை. அரசியல் தீர்வு ஏற்படாமல் எப்படிப் புரிந்துணர்வு ஏற்படும்?


ஆகவே, அரசாங்கம் நியமித்துள்ள நல்லிணக்க குழுவானது அர்த்தமுள்ள விடயங்களைச் செய்யுமென்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் இந்தக் குழு தொடர்பில் எந்தவித முன்னெடுப்புகளையும் இதுவரை செய்யவில்லை.


அரசாங்கம் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வைக் காணாமல், மக்களை அவர்களது நிலங்களில் மீளக்குடியேற்றாமல் தடுத்து வைத்துக் கொண்டு ஒரு குழுவை நியமித்துள்ளது கேலிக்குரிய விடயமே.


மேலும், இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதாகக் கூறி அரசாங்கம் பலத்த கண்டனத்தைத் தெரிவித் துள்ளது. அமைச்சரொருவரும் உண்ணாவிர தமிருந்தார்.


ஆனால், இன்று வரை தமிழ் மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உலகம் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பது எந்த விதத்தில் சரியானதாகவிருக்கும்? உள்நாட்டுப் பிரச்சினையை அரசினால் தீர்க்க முடியாது உள்ளதன் காரணமாகவே சர்வதேசம் இன்று தலையிட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக