ஞாயிறு, 25 ஜூலை, 2010

மு.கா – த.தே.கூ ?வடக்கு ,கிழக்கு ?...?!

ஒரு கட்சியின் நா டாளுமன்ற உறுப்பினர் தேசிய ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை முன் வைக்கும்போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது கட்டாயமாகும். நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தானது, அது சார்ந்த கட்சியின் கொள்கையாகவே கருதப்படும்.
அந்த வகையில்
இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி என்ற பெருமையையுடைய முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக ஒருமித்த கருத்துகளை காண முடியாதுள்ளது.


இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று அமையும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு வழங்கப்பட வேண்டும். வடக்குடன் கிழக்கு இணைவதாக இருந்தாலும் பிரிவதாக இருந்தாலும் நிபந்தனையின் அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கூறிக் கொண்டு வருகின்றது.


வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்ட போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் இனப்பிரச்சினைக்கான தீர்வை சிக்கலடையச் செய்துள்ளதொரு நிகழ்வாகவே பார்த்தது. முஸ்லிம்களுக்கான தனி அதிகார அலகு என்பது வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டதன் பின்னர் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறியுள்ளது.


இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தாம் கோரி நிற்கும் தனி அதிகார அலகை சாத்தியமாக்கும் நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பாக மாற்றுக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும் முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு சாத்தியமாகுமா என்பதற்கான விடை தூரமாகிக் கொண்டே போகின்றது.


முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு என்பதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அக்கட்சி வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்பதனை இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்திக் கொண்டு வருகின்றது. வடக்குடன் கிழக்கு இணையும்போது முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு அமைய அமைய வேண்டுமென்று வலியுறுத்துவாக இல்லை. இதனால், அக்கட்சி முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டு தமக்கானதை சாத்தியமாக்குவதற்கு எண்ணுகிறதென்றே கருத வேண்டியுள்ளது.


இதேவேளை, அண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் வடக்குடன் கிழக்கு இணைய வேண்டுமென்று கோருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உரிமையில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


ஒரு கட்சி தமக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு உரிமையில்லை எனக் கூற முடியாது. கருத்துச் சுதந்திரத்தை மதித்தல் வேண்டும். வடக்குடன் கிழக்கு இணையக் கூடாது என்பதனை ஹரீஸ் விரும்புகின்றார் எனலாம். அப்படியாக இருந்தால் கிழக்கு பிரிந்திருப்பதனால் முஸ்லிம்கள் அடைந்து கொள்ளும் நன்மை எவை எனவும் சிந்திக்க வேண்டும்.


வடக்குடன் கிழக்கு இணைவதோ அல்லது பிரிவதோ முஸ்லிம்களின் பிரச்சினையல்ல. முஸ்லிம்களுக்கும் ஓர் அதிகார அலகு அமைய வேண்டும் என்பதேயாகும். இது தான் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக வலியுறுத்துவதுமாகும்.


வடக்குடன் கிழக்கு நிரந்தரமாக இணைந்திருப்பது என்றால் முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு அமைய வேண்டும் என ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.


அப்படியாக இருந்தால், கிழக்கு தனியாக பிரிந்து செயற்பட்டால் முஸ்லிம்களின் நிலை என்ன? என்பதற்கான விடையை முஸ்லிம் காங்கிரஸ் தெளிவுபடுத்தல் வேண்டும்.


ரவூப் ஹக்கீம் வடக்குடன் கிழக்கு இணைவதற்கு நிபந்தனை விதிக்கின்றார். ஹரீஸ் வடக்குடன் கிழக்கு இணைவதனை கோரும் உரிமை த.தே. கூட்டமைப்புக்கு இல்லை என்பதன் மூலமாக வடக்கும் கிழக்கும் பிரிந்து செயற்பட வேண்டும் என்கின்றார். இவ்விரு விடயங்களும் முஸ்லிம் காங்கிரஸிடம் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கான சரியானதொரு தீர்வுத் திட்டம் கிடையாது என்பதாக உள்ளது.


முஸ்லிம்களுக்கு அதிகார அலகு என்பதில் தெளிவானதொரு நிலைப்பாட்டில் இல்லாத நிலையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைய வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.


கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பக்கத்தில் வைத்திருப்பதற்கு அரசாங்கத்தோடு சேர வேண்டிய நெருக்கடிக்கு உட்பட்டவராக ரவூப் ஹக்கீம் உள்ளார்.


அண்மைக் காலமாக ரவூப் ஹக்கீம் வழமைக்குப் புறம்பாக ஜனாதிபதியை புகழ்ந்து பேசி வருகின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்தவர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்த ரவூப் ஹக்கீம், திடீரென்று ஜனாதிபதியை புகழ்வது தமது கட்சியை அரசாங்கத்தோடு இணைப்பதற்காகவா? அல்லது ஜனாதிபதியை விமர்சிப்பதில் பயனில்லை என்ற பக்குவத்தை பெற்றுக் கொண்டதனாலா? என்பது புரியவில்லை.


ஓர் அரசியல் கட்சி அரசாங்கத்தின் பக்கம் இருப்பதோ அல்லது எதிர்க் கட்சியில் இருப்பதோ முக்கியமல்ல. அக்கட்சி கொள்கைப்பற்றுடன் உள்ளதா? என்பதே முக்கியமாகும்.


ஐ.தே.க. பலவீனமடைந்து கொண்டு போவதனால் அதனோடு உறவை வைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸும் பலவீனமடைந்து கொண்டு போகின்றது. இப்பலவீனத்தை இல்லாமல் செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க. வின் மீதான உறவை பரிசீலனை செய்தல் வேண்டும்.


இதேவேளை வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் த.தே. கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.


த.தே. கூட்டமைப்பின் அறிக்கைகளை அவதானிக்கும்போது தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் இருத்தல் வேண்டும் என்பதனை நல்ல முறையில் வலியுறுத்துகின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டதொரு நிலப் பிரதேசத்தில் தமிழர்கள் அதிகாரங்களை கொண்டிருத்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதென்றே புரிகின்றது.


அரசாங்கத் தரப்பினரை எடுத்துக் கொண்டால் தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்காது என்பது தெளிவாகும். ஆயினும் சர்வதேசத்தின் கண்களுக்கு காட்டுவதற்கு ஏதாவது வழங்கும் என்பது உறுதி. ஆனால், முஸ்லிம்களுக்கு அதிகார அலகோ அல்லது அதிகாரங்களோ வழங்கும் என்பதற்கான சான்றுகள் தென்படவில்லை.


பேரினவாதிகள் முஸ்லிம்களை இன்னும் சின்னாபின்னப்படுத்தவே திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்தச் சூழலில் முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் பதவிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களினால் எதனையும் சாதிக்க முடியாதுள்ள நிலையில் புதிதாக பதவிகளை எதிர்பார்ப்பவர்கள் எதனை சாதித்துக் கொடி பிடிக்கப் போகின்றார்கள் என்பது தொடரான கேள்வியாகவுள்ளது.


எனவே முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை அடைவதற்கான வழிவகைகளில் ஈடுபடல் வேண்டும். தாம் பெற்றுக் கொள்ளும் பதவிகளை பயன்படுத்தி தமது திட்டங்களை அமுல்படுத்த முயற்சிகளை எடுத்தல் வேண்டும்.


பதவிகள் சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படல் வேண்டுமே தவிர பதவியை பெற்றவர் மட்டும் நன்மையடைவதாக இருத்தல் கூடாது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் தம்மை அலங்கரித்துக் கொள்ளவே பதவிகளை தேடுகின்றார்கள்.


‘முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு என்பதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அக்கட்சி வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்பதனை இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்திக் கொண்டு வருகின்றது. வடக்குடன் கிழக்கு இணையும்போது முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு அமைய வேண்டும் என்று வலியுறுத்துவதாக இல்லை. இதனால் அக்கட்சி முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டு தமக்கானதை சாத்தியமாக்குவதற்கு எண்ணுகிறதென்றே கருத வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக