திங்கள், 19 ஜூலை, 2010

பெண்களை அதிகமாக கொண்ட சமூகமாக தமிழ்இனம் ..........!

போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில்,
சர்வதே மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்"பெண்கள் ஒரு சமூகத்தின் கௌரவத்தை உருவகப்படுத்தி நிற்பவர்களாகவும் எதிரியின் இனப்பெருக்க இயந்திரமாகவும் நோக்கப்படுவதன் காரணத்தினாலேயே அவர்கள் போரின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "ஒரு குறித்த சமூகத்தின் ஆண்களை வலுவிழக்கச் செய்யும் இராணுவ ரீதியான தந்திரோபாயமே இது என்பதும் அவரது கருத்து. உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகு தந்திரோபாயங்கள் ஒருபுறம் இருக்க, நீண்டகாலத் தாக்கம் கொண்ட நிகழ்வு ஒன்று தமிழ்ச் சமூகத்தில் நடந்தேறியுள்ளது. அதாவது, ஆண்களை அழித்து, பெண்களிடம் இருந்து பிரித்ததன் மூலம் சமூகச் சமநிலை குழப்பப்பட்டு, பெண்களை அதிகமாகக் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். இத்தகு மாற்றத்தைப் புரிந்து கொண்டு செயற்படுவது தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்புக்கு உதவும்.
 உள்நாட்டுப் போர் தமிழர்களைக் கொன்றொழித்தள்ளது. இதன்போது பெண்கள் தம் பிள்ளைகளை (பெரும்பாலும் ஆண்கள்), கணவனை இழந்துள்ளனர்.  மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோரில் இளைஞர்கள் பெரும்பான்மையினர். அப்போது கொழும்பு, இந்தியா எனப் புலம் பெயர்ந்தவர்களிலும் ஆண்களே அதிகம். ஆரம்பத்தில் போராளிகளாக இணைந்தவர்களிலும் ஆண்களே அநேகர்.  அவசர காலச் சட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் அநேகர் தமிழ் சமூக ஆண்களே. இவர்களில் திரும்பி வராதோர், வந்தும் மனநோயால் பாதிக்கப்பட்டோர், இன்றுவரை சிறைக்குள் இருப்போர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இத்தகு நிலைமையால் தமிழ் சமூகத்தில் ஆண் பெண் எண்ணிக்கையில் இயற்கை சமநிலை குலைந்துள்ளது. இதன்போது மரபு ரீதியான, இதுவரை இருந்து வந்த சமூகக் கட்டமைப்பில் பெருமாற்றம் ......?.


ஆணினுடைய பொருளாதாரப் பலம் சார்ந்த "குடும்பம்'' என்ற கண்ணோட்டம் சிதைந்தது. பொருளாதார ரீதியில் பெண்ணே குடும்பத்தைப் பாதுகாக்கும் நிலை உருவாகியது. இதனால் "பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தோன்றியுள்ளன.' தற்போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன இந்த நிலைமையானது, சமூக, பொருளாதார நெருக்கடிக்கும், ஆண் துணையற்ற ஒரு சமூகத் தனிமைக்கும் பெண்களை உள்ளாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தனியொரு பெண்ணுக்குரியதல்ல, தமிழ்ச் சமூகத்திற்குரியது.இதில் விதவைகள், கணவனைப் பிரிந்து வாழ்வோர் (வெளிநாட்டில் கணவன்), ஒத்துவராத திருமண முறிவு என்பவற்றை சமூக விளைவாக நாம் ஏற்று அதற்குரிய தீர்வை எட்ட வேண்டிய நிலைக்கு தமிழ் சமுதாயம் தள்ளபட்டுள்ளது ,,,.

1 கருத்து:

  1. இவர்களுக்குக் கைகொடுத்து உதவ வேண்டியது வெளிநாட்டுத் தமிழர் ஆகடிய நாம். அவர்களை அவர்கள் குழந்தைகளை கல்வியால் மேம்படச் செய்வது எமது கடமை,

    பதிலளிநீக்கு