செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.

இலங்கைத் திருநாட்டில் தமிழர்களின் தாயக மான வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன தான் நடக்கின்றது என்பதை உணரமுடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். விடுதலைப் போராட்டம் நடைபெற்றது உண்மை.அந்தப் போராட்டம் போர் மூலம் முறியடிக்கப் பட்டமை உண்மை.தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தின் மூலம் அரசு தோற்கடித்து விட்டமைக்காக தமிழர்கள் இந்த நாட்டின் உரித்தாளர்கள் அல்ல என நினைப்பது மகாதவறு.


தமிழர்கள் தங்களின் விடுதலைக்காக இன்னுமொரு ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்கக் கூடாது என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு அரசு செயற்படுகின்றது. இதற்காக எத்தகைய நடவடிக்கைகளை கையாண்டாலும் அது தவறல்ல என்ற நினைப்பில் அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் என்பது சடுதியாக ஏற்பட்டதன்று.

அகிம்சைப் போராட்டம் -பேச்சுவார்த்தை -ஒப்பந்தங்கள் என்ற பாதையின் வழியில் பயணித்த வேளையில், ஆளும் அரசுகள் ஏமாற்றிவிட்ட துயரத்தின் மையப்புள்ளியில் இருந்தே ஆயுதப் போராட்டம் உருவெடுத்ததெனலாம். இதனைக்கூட, ஆரம்ப கட்டத்தில் பொருத்தமான அணுகுமுறை மூலம் நிவர்த்தித்திருக்க முடியும்.

இது விடயத்திலும் அரசு தவறிவிட்டது. இப்போது உலகமயமாதலின் நன்மைகளும் , ஆயுதப்போராட்டங்களுக்கு உலகளவில் ஏற்பட்ட எதிர்ப்பும், எங்கள்மீது இந்தியா கொண்ட பகைமையும் இலங்கை அரசின் யுத்த வெற்றிக்கு சந்தர்ப்பம் கொடுத்தன.

ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பேச்சுவார்த்தை, வடக்கு கிழக்குமாகாண இணைப்பு, சுயாட்சி என்றெல்லாம் முன்மொழிந்த அரசு யுத்தத்திற்குப் பின் அவை பற்றி எதுவுமே சிந்தியாமல் நடப்பது வேதனைக் குரியது. உண்மையில் இந்த நாட்டில் யுத்தத்திற்குப் பின்பேனும் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டு மென யாரேனும் நினைப்பார்களாயின், அந்த நினைப்பின் நடவடிக்கை இனப்பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வை அமுல்படுத்துவதே ஒரே வழியாக இருக்கும்.

இதைவிடுத்து தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதை தடுப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் மக்களின் காணிகளை அரச உடைமை யாக்குதல், சிங்களக் குடியேற்றம், இராணுவக் குடியிருப்பு என்றவகையில் திட்டங்களைத் தீட்டி செயற்படுமாக இருந்தால், இலங்கைத் தீவின் எதிர்காலமும் குழப்பம் மிகுந்ததாக-அமைதிக்கு ஏங்குவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆக போருக்குப் பின் தமிழ் மக்களின் மனங்களை வெல்லது குறித்து அரசு சிந்திக்காமல் தமிழர்களின் மனங்களை நிந்திக்குமாயின் அதனை அரிசிக்குப் பதிலாக உமி கொடுத்த அவலமாகவே தமிழ்மக்கள் கருதுவர்.அத்தகைய கருத்துநிலை ஆரோக்கியமான தல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக