செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

போரின் முடிவுக்குப் பின்னரான நிரந்தரமான படைகளின் பிரசன்னம்

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகளைப் பொறுத்தரை அரசாங்கத்தின் அறிவிப்புக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றவைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதற்கு நாம் இங்கு உதாரணங்களைக் காட்ட வேண்டிய தேவையில்லை. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைக்கக்கூடிய போதிய உருப்படியான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதாக இல்லை.


வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக வழமையாகக் கூட்டப்படும் செய்தியாளர் மகாநாடும் கிளிநொச்சியிலேயே நடத்தப்படுமென்று ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அதற்கான ஏற்பாடுகள் கைவிடப்பட்டு கொழும்பிலேயே செய்தியாளர் மகாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டத் தீர்மானங்களை அறிவித்த அமைச்சர் ரம்புக்வெல கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென்றும் தேவையானால் அந்த நோக்கத்துக்காகத் தனியார் நிலங்களையும் அரசாங்கம் சுவீகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். "அத்தகைய பாதுகாப்பு வலயங்களைத் தொடர்ந்தும் பேண வேண்டிய அவசியம் இருக்கிறது. இது நாட்டினது பாதுகாப்புக்கு முக்கியமானது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அமெரிக்கா பாதுகாப்பு வலயங்களைப் பேணிவருகிறது. அவற்றுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பியக்கங்களை நடத்திவந்திருக்கின்ற போதிலும், அமெரிக்கா விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு "நியாயத்தையும் அமைச்சர் ரம்புக்வெல கற்பித்தார்.

தேவையேற்படும் பட்சத்தில் மேலும் கூடுதலான தனியார் நிலங்களை அரசாங்கம் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்காகச் சுவீகரிக்கும் என்ற அமைச்சரின் அறிவிப்பு ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறிகொடுத்து அகதிகளாகி நிற்கும் வடபகுதி தமிழ் மக்களைப் பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் அனுசரணையுடனான புதிய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பில் வட பகுதி மக்களுக்கு ஏற்கனவே இருந்துவரும் சந்தேகங்களையும் அமைச்சரின் இந்த அறிவிப்பு வலுப்படுத்தியிருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. போரின் முடிவுக்குப் பிறகு இலங்கையின் சமூகங்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய செயன்முறைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக தமிழர்களை மேலும் அச்சுறுத்தக்கூடிய அறிவிப்புகளே அரசாங்கத்திடமிருந்து வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டதாகப் பெருமை பேசுகின்ற அரசாங்கம் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் படிப்படியாக இராணுவ மயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக இராணுவ மயத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது. உண்மையில் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் வாழ்வு ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள மக்களின் வாழ்வை ஒத்ததாகவே காணப்படுகிறது.
போரின் இறுதிக்கட்டங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதிநிதியாகப் பதவிவகித்த வரும் அரசியல் அவதானியுமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்தவாரம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் "தமிழர் அரசியலில் புதிய போக்குகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வடக்கு,கிழக்கில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகளை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால், தென்னிலங்கையை ஆக்கிரமித்து நிற்கும் கடும்போக்கு சிங்கள தேசியவாத அலைக்கு மத்தியில் சிங்கள அரசியல் சமுதாயத்தினதும், புத்திஜீவிகளினதும் சிந்தனைப்போக்கு எவ்வாறானதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும் என்பது அபிப்பிராயம்.

"எந்தவொரு இலங்கை அரசாங்கமும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்போவதில்லை. குறிப்பாக, பிரிவினைவாதப் போர் பல தசாப்தங்களாகத் தளராமல் தொடருவதற்கு வசதியாக இருந்ததுடன் தமிழ்த் தேசியவாத ஆயுதப்படையணியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தொகுதி வாழ்ந்ததுமான பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறப் போவதில்லை. அமெரிக்காவிலே பிரிவினைவாத வாதக்குரல்களை எழுப்பிய தென்மாநிலங்களில் மத்திய அரசின் இராணுவம் சிவில் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரும் 12 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. செச்னியாவில் ரஷ்யப்படைகள் பத்து வருடங்கள் நிலைகொண்டிருந்தன. ஹிட்லரைத் தோற்கடிக்கப்போன அமெரிக்கப்படைகள் ஜேர்மனியிலும் ஜப்பானிலும் பல தசாப்தங்களாக நிலைகொண்டிருந்தன. இலங்கைப் படைகள் வடக்கு,கிழக்கில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கவே செய்யும். கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டுவதை முன்கூட்டியே தடுப்பதற்கும் , ஆதரவுக் குழுக்களைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் மாகாணத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் நிரந்தரமான படைகளின் பிரசன்னம் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக