வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுனர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்

இலங்கைத் தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையையும், தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலும் , சிங்களம் தமிழின மக்கள் மீது கொண்டுள்ள இனவஞ்சம் இலங்கை தீவின் எல்லைகளினையும் தாண்டி தமிழக மக்களையும் நோக்கி நீண்டிருப்பதானது இலங்கையின் எல்லைதாண்டிய ஒடுக்கு முறையின் கொடூர முகத்தினையும், அது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வினையுமே நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.


இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீன நிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்பட அனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது

இதனையிட்டு இந்திய ஆட்சியாளர்களும் தமிழக அரச தலைவர்களும் கொண்டிருக்கக்கூடிய நீண்ட மௌனம் இந்தியாவுக்கும் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கும் ஆபத்தான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்.இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் இலங்கைத்தீவில் அதிகரித்துவரும் சீன மேலாதிக்கம் தொடர்பாகவும் தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டு துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக பாக்கு நீரிணையிலும் அதனை அண்டிய கடற் பகுதிகளிலும் இலங்கையின் ஆயுதப்படைகளினால் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அவர்களது கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுக் கடலில் வீசப்படுவதும் உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழரின் ஆழ்ந்த கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விடயமாகியுள்ளது என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்துகிறது.

வரலாற்றுக் காலந்தொட்டே தமிழக மீனவர்கள் இந்து சமுத்திரத்தின் பாக்கு நீரிணைத் தொடரிலும் மன்னார் வளைகுடாவிலும் அதனையொட்டிய கடற்பரப்பிலும் மீன்பிடிப்பதிலும் ஏனைய கடல் வளங்களினை ஈழத்தமிழ் மீனவர்களுடன் இணைந்து பகிருவதிலும் வலுவான நல்லுறவினையும் வாழ்வாதார உரிமையினையும் கொண்டிருப்பவர்கள். இலங்கையின் கடற்படை கடலில் நிகழ்த்தும் வன்முறை தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையினை மறுப்பதோடு அதனைப் பாதுகாக்க வேண்டிய இந்தியாவின் இறையாண்மையினையும் தமிழக அரசின் ஆட்சி வலுவினையும் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலையினையும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளினையும் எதிர்த்து பாதிக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைக்காக குரல்கொடுத்து வரும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு. சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையினை மிகவும் கவலைக்கும் கண்டனத்துக்குரிய விடயமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக