திங்கள், 30 ஆகஸ்ட், 2010

"உயரிய சிந்தனை" இந்த தொழில் தருநர்களுக்கு எவ்வாறு வந்தது?

வடக்கில் உள்ள இளைஞர்,யுவதிகளின் வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடனும் இன்னும் பல சலுகைகளுடனும் தென்னிலங்கையிலுள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அந்த அப்பாவிகளைத் தென்னிலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் நடவடிக்கைகளில் சில போலி தொழில் தருநர்களும் தொழில் தரகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன


யுத்தத்தின் கோரத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து இன்று வறுமையின் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் வடக்கு இளைஞர்,யுவதிகளின் குறிப்பாக யுவதிகளின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி போலி நேர்முகப் பரீட்சைகளையும் நடத்தி அவர்களைத் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தொழில் தருநர்களின் முகவர்களாகச் செயற்படும் சிலர் வடக்கின் கிராமங்களுக்குச் சென்று (இவர்களின் இலக்கு வன்னி மாவட்டத்திலேயே உள்ளது) வேலைவாய்ப்புத் தொடர்பான விளம்பரங்களை வீடு வீடாக விநியோகித்தே யுவதிகளையும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கின்றனர். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி உறுதிமொழிகளை வாரி வழங்குகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில், கண்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலைவாய்ப்பு உள்ளதாகக் கூறி நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு 40 க்கு மேற்பட்ட யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு இரவோடிரவாக பஸ்ஸில் ஏற்றப்பட்டு கண்டிக்கு அழைத்துச் செல்ல முற்படுகையில் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வளவு தொகை யுவதிகளை வன்னிக்கு வெளியே அழைத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அரச அதிபரிடமோ, பொலிஸாரிடமோ அல்லது படையினரிடமோ எவ்வித அனுமதிகளும் பெறப்பட்டிருக்கவில்லை. யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு போலி நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு கிளிநொச்சியிலிருந்து 33 ஆம் கட்டை வரை அவர்கள் சென்று விட்ட நிலையில் கூட இது தொடர்பில் பொலிஸாரும் படையினரும் கண்டும் காணாதது போல் நடந்து கொண்டமையும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

வடக்கு இளைஞர், யுவதிகளின் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை பயன்படுத்தி இன்று தெற்கிலிருந்து படை எடுக்கின்ற போலி தொழில் தருநர்கள் அதிக சம்பளம், சலுகைகள் என ஆசை வார்த்தை காட்டி இவர்களை தென்னிலங்கைக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளுக்கும் பாலியல் தொழிலுக்குள்ளும் தள்ளும் நிலையுள்ளதென எச்சரித்துள்ளதையும் புறம்தள்ளி விட முடியாது. தெற்கில் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அலைந்து திரிகின்றனர். பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்மைக்காலத்தில் வேலை இழந்துள்ளனர். பல தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

இவ்வாறான நிலையில் வடக்கில் உள்ள யுவதிகளுக்கு வேலை வழங்க வேண்டுமென்ற "உயரிய சிந்தனை இந்த தொழில் தருநர்களுக்கு எவ்வாறு வந்தது? தமிழர் என்றாலே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவர்கள் இன்று தமது தொழிற்சாலைகளுக்கு தமிழர் பகுதிகளுக்கு தேடிச் சென்று யுவதிகளை சேர்த்துக்கொள்வதில் உள்நோக்கம் இல்லாமலிருக்க முடியாது. குறைந்த சம்பளத்தில் வேலை வாங்க முடியுமென இவர்கள் நினைக்க வேண்டும் அல்லது ஏமாற்றி அழைத்துச் சென்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த திட்டமிட்டிருக்க வேண்டும். எனவே தமிழரின் அவல நிலையை பயன்படுத்தி ஆதாயமடைய முயற்சிப்பவர்கள் தொடர்பில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கியமாக பெண்கள் இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுபவர்கள் பல முகங்களுடன் எம்மைத் தேடி வருவார்கள். நாம் தான் அவர்களை சரியாக இனங்கண்டு கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எமது எதிர்காலத்தை யாராலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக