ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்.....

இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறுகின்றார். காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள விபரங்களின்படி, பாதுகாப்பு தரப்பு மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதே இது தொடர்பான சந்தேகங்களை அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.


இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை சுமார் 95 ஆக இருந்தாலும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என தான் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா குறிப்பிடுகின்றார். தமது கட்சியாகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுக்களில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசையுடன் பேசிய 55 வயதான கொக்குவில் கிராமத்தைச் சேர்ந்த வீரக்குட்டி மாரிதமுத்து, தனது மகனாகிய புஸ்பதேவா 20 மாதங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்த சிவிலுடையினரால் அழைத்துச் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சகாயமணி என்பவரும் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஜோசப்பின் மேரி தெரிவித்துள்ளார். தனது கணவன் காணாமல் போவதற்கு முந்திய தினம் இரவு தொலைபேசி மூலம் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேகதுரை சந்திரகாந்தன், சட்டம் ஒழுங்கு மற்றும் சிவிலியன்களின் பொதுவான பாதுகாப்புக்கு காவ்துறையினரும், பாதுகாப்புப் படையினருமே பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார். இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் 1990 ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்த வேளை இராணுவத்தினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களை அவர்களது உறவினர்கள் 20 வது ஆண்டாக நினைவு கூர்ந்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தமது உறவுகளை நினைவு கூர்ந்து சிலரும், காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்னும் சிலரும் ஆலயங்களிலும் வீடுகளிலும் நடை பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்கள். 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இதே காலப் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் பெற்றமையினால் அப்பல்கலைக்கழகம் அகதி முகாமாக மாறியது.

அகதி முகாமில் தங்கியிருந்தவர்களில் குடும்பஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 174 பேர் செப்டம்பர் 5 மற்றும் 23 ஆம் திகதிகளில் இராணுவத்தினரால் விசாரணைக்கு எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போயிருந்ததாக உறவினர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர்களைப் பொறுத்த வரை உயிருடன் இருக்கலாம் என உறவினர்களில் ஒரு சாரார் இன்னமும் நம்பிக்கை கொண்டிருந்தாலும் மற்றுமொரு சாரார் இப்போது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.. 1990 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன் ஆலயம் அகதி முகாம்கள் மற்றும் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி சம்பவங்களின் போதும், தனித் தனிச் சம்பவங்களிலும் நூற்றுக் கணக்கானோர் பல்வேறு சந்தரப்பிங்களில் காணாமல் போயுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக