செவ்வாய், 14 டிசம்பர், 2010

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது -ஆணைக்குழுவின் முன்னர் கருணா

பெரும்பான்மையினரின் மனத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை பிரபாகாரன் கொலை செய்தது மிகபெரிய தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.


விடுதலை புலிகளில் பிளவு 2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் மூலமே ஏற்பட்டது என கூறப்பட்டாலும் அந்த ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் பிளவு ஏற்பட்டிருக்கும் என பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.


இதனிடையே விடுதலை புலிகளுக்கு நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.


நேர்வே பணம் கொடுத்தது உண்மை என்றாலும் அது ஆயுத கொள்வனவிற்காக அல்ல சமாதான பேச்சுவார்தைகளின் பொருட்டே இவ்வாறு பணம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


இதனிடையே அவர் எதனால் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார் எனவும் குறிப்பிட்டார்.


1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் கொழும்பில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அடுத்தே தான் இயக்கத்தில் இணைந்ததாகவும் தான் யாருடைய வற்புறுத்தலிலும் இணையவில்லை எனவும் குறிப்பிட்டாhர்.


அத்துடன் அன்றைய தமிழ் மற்றும் சிங்கள் அரசியல்வாதிகள் இனவாதத்தை தங்களது பேச்சுகளில் காட்டியமையும் இயக்கத்தில் இணைவதற்கான மற்றுமொரு காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் பாரபட்சம் காட்டியமையே ஆகும் என குறிப்பிட்டார்.


நோர்வேயின் அனுசரணையில் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான பேச்சுவார்தைகளின் சமஸ்டி தீர்வு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால் அதில் கையொப்பம் இடுவதற்கு பிரபாகரனுடன் தொடர்புகொண்டு பேசவேண்டும் என்று அப்போதைய விடுதலை புலிகளின் அரசியல்துறை ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்.


நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். பின்னர் புலிகள் தரப்பில் பாலசிங்கமும் அரசாங்க தரப்பில் ஜீ.எல். பீரிஸ்சும் கையெழுத்திட்டனர்.


பின்னர் கிளிநொச்சியில் வைத்து ஒஸ்லோ உடன்படிக்கையை பிரபாகரனிடம் கையளித்தோம். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறினோம். அவர் கேட்கவில்லை.


அதனையடுத்து புலிகள் இயக்கத்திலிருந்து பிரியவேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். 6000 போராளிகளுடன் பிரிந்து வந்தேன். ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினேன். அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.


அதன்பின்னர் சிலகாலம் பிரித்தானியாவில் இருந்தேன். பின்னர் புலிகளை தோற்கடிக்க ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினேன். ஜனாதிபதி புலிகளை அழிக்கவேண்டும் என்று உறுதியான தீர்மானத்தை எடுத்தார். புலிகளை முற்றாக அழித்தார்.


யுத்தக்குற்றம் என்று எதனையும் ஏற்க முடியாது. காரணம் புலிகள் தான் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர். அரசாங்கம் தான் மக்களை மீட்டது.


இதேவேளை யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற்றம் குறித்தும் பிரதியமைச்சர் முரளிதரன் இதன்போது கருத்துரைத்தார்.


இவ்வாறு குடியேற்றப்படுபவர்கள் அரசாங்கத்தினால் குடியேற்றப்படவில்லை எனவும் தங்களது விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்கள் அங்கு குடியேறுகின்றார்கள்.


30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளனர்.


இந்தநிலையில் இவ்வாறு குடியேறுபவர்கள் தமது முன்னைய பதிவுகளை காண்பிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நிச்சயம் அங்கு குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


கொழும்பில் தமிழ் மக்கள் வீடுகள் மற்றும் கடைகளை வைத்து வர்த்தகம் என்பவற்றில் ஈடுப்படும் போது ஏன் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறக் கூடாது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.


அத்துடன் கொழும்பும் மற்றும் பாணந்துறையில் இந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பாணந்துறையில் பிரபாகரனின் தந்தையால் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.


இவ்வாறான நிலையில் அந்த கோவில்கள் இடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர் முரளிதரன் யாழ்ப்பாணத்தில் பௌத்த ஆலயங்கள் ஏன் அமைக்கப்படக் கூடாது எனவும் வினவினார்.


ஐக்கியதேசிய கட்சி விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க விரும்பியதில்லை.


அவர்கள் அரசியல் நோக்கத்திற்காகவே விடுதலைப்புலிகளின் விடயங்களை கையாண்டனர் எகவும் பிரதியமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.


இந்திய அமைதி படை இலங்கைக்கு வந்தது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே.


எனினும் திலீபனின் உண்ணாவிரதமும் இந்திய அமைதிப்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல்களுமே அவர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள தூண்டிய காரணங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பின்னர் இந்திய படையினர் இவ்வாறு தமிழ்கள் மீது மேற்கொண்ட கொடுரங்கள் மற்றும் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் என்பனவே ராஜீவ் காந்தியின் கொலைக்கு காரணம் என பிரதியமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.


இவ்வாறு இந்திய படைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவராலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இதனை விடவும் இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்கத்திற்கான ஆணைக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரை பற்றியும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் புகழ்ந்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக