திங்கள், 27 டிசம்பர், 2010

என் முதல் புகைப்படத்தை அமைதியாய் பார்ப்பவர்களே....

எட்டு மாதம் எனக்கு
உயிர் இருப்பதை உணரும்
வயதில்லை..
தாயென்னும் உயிருக்குள் உறங்கும்
வயது...
தாய் சாப்பிட்ட உணவு செரிக்கும்
சத்தம் மட்டுமே தெரியுமெனக்கு..
என் செவி வலிக்குமோ என அஞ்சி
என் தாய்,
திரவமாய் குடித்ததும் தெரியுமெனக்கு..
திடீரென வெடிச்சத்தம்...
கருவறை திரைகளுடன் சேர்ந்து
முழுதாய் வளராத
என் செவிப்பறைகளும் கிழிந்தன....

தாயின் உடலில் இருந்து
குழந்தையின் தலைதானே வெளிவரும்!!??
எனக்கு என் முழு உடலும் வந்தது..விழுந்தது...
பிய்ந்து பிய்ந்து..
நைந்து நைந்து..
அதிகமாய் குங்குமப்பூ தின்றாயோ தாயே?
நான் சிவப்பாய்..
நீயோ அதைவிட சிவப்பாய்..
உனக்குப் பிரசவம் பார்த்தது வெடிகுண்டல்லவா?

என்னை அள்ளிக்கொள்ள, கொஞ்ச
நீ வளர்த்த கைகள்,
என் விரோதிகள் போல இருபதடி தூரத்தில்
வானம் பார்த்து சிதறிக் கிடக்கின்றன..
அம்மா..
நான் பால் சப்ப
நீ காத்த முலைகளில்,
நாய்கள் சீல் சப்ப
காத்திருக்கின்றன...
அம்மா...
உயிர்தானே? உடல்தானே? ரத்தம்தானே?
விட்டுத்தள்ளு...
மீண்டும் இந்த மண்ணில்,
உன் தமிழ் வயிற்றில் பிறக்கிறேன்...
பரிணாம வளர்ச்சியில் தேவைக்கேற்ப
உறுப்புகள் முளைக்குமாம்...
கண்டிப்பாய் அடுத்த பிறப்பில்
என் தோளில் துப்பாக்கி முளைக்கும்...
அஞ்சாதே...
மீண்டும் பிற..
என்னைப் பெற்றெடு...
எவ்வினத்திலும் கடைசி ஒருவன்
இருக்கும்வரை,
விடுதலைப் போராட்டங்கள்
வீழ்ந்துபோய் இருக்கவில்லை...
வென்றெடுக்காமல் என் பிறவிகள்
ஓயப்போவதில்லை...
அம்மா...
எனக்கு எட்டு மாதம்...
நான் உலகில் பிறக்கவில்லை..
விழுந்துவிட்டேன்...
விதைந்துவிட்டேன்..
எனக்கு எட்டே மாதம்,
எதுவும் செய்யாமல்
என் முதல் புகைப்படத்தை
அமைதியாய் பார்ப்பவர்களே.....
உங்கள் குழந்தைக்கு எத்தனை மாதம்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக