சனி, 11 டிசம்பர், 2010

ராஜபக்ச சகோதரர்கள், இராணுவ அதிகாரிகள் கதை முடிவுறும் நிலை.....

ஒரு நெடுங்கால ஆரசியல் பிரச்சனைக்குப் போர் நடவடிக்கை மூலம் தீர்வு கண்டதற்காகப் பாராட்டப்பட்ட நாடு தானே பிரச்சனைக்குரிய நாடாக இருப்பது சமகால உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. மே 2009 ற்குப் பிந்திய சிறிது காலம் சிறிலங்கா புகழின் உச்சிக் கொப்பில் இடம் பிடித்தது.



அதன் அதிபர் வல்லமைமிக்க கதாநாயகனாகத் திகழ்ந்தார் சிறிது காலத்தில் அவருக்கு மங்கு சனியின் ஆதிக்கத்தால் சரிவும் வீழ்சியும் தொடங்கி விட்டன இன்று அவர் வேண்டப்படாத மனிதனாகத் தீண்டக்கூடாத பண்டமாக மாறிவிட்டார்.


27 மே 2009ம் நாள் ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்சில் சிறிலங்கா தனது சார்பில் வழங்கிய பாராட்டுப் பிரேரனையை 29 உலக நாடுகளின் சாதகமான வாக்களிப்புடன் நிறைவேற்றியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகியன சாதகமாக வாக்களித்தன.


பிரேரணையை கனடா பிரித்தானியா பிரான்சு யேர்மனி சுவிட்லாந்து பொஸ்னியா-ஹேர்சிகோவினா உட்பட 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன சிறிலங்காவுக்கு நிதி உதவிகள் வழங்குவதில் முன்னனி இடம் வகிக்கும் ஜப்பான் உட்பட ஆறு நாடுகள் வாக்களிப்பில் கலவாமல் விலகின.


சிறிலங்காவில் வரலாற்று உயர் அந்தஸ்த்து இந்த தீர்மான நிறைவேற்றுகையுடன் ஈட்டப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் ஆனால் அடுத்த வரும் சில மாதங்களில் அதே ஆட்கள் கண்டனங்களை தொடுக்க தொடங்கியதைப் புகழின் நிலயாமை என்று வர்ணிக்கலாம்.


பிரேரனைக்கு சாதகமாக வாக்களித்த தென்னாபிரிக்கா பற்றியும் எதிர்த்து வாக்களித்த பொஸ்னியா-கேசிகோவினா பற்றியும் அலசுவது இவ்விடத்தில் பொருத்தமாகும். இராஐதந்திர குளறுபடியால் தென்னாபிரிக்கா தவறுதலாக பிரேரனைக்குச் சாதகமாக வாக்களித்ததாக சிலர் கூறுகின்றார்கள்.


எட்டு இலட்சம் தமிழர்கள் வாழும் தென்னாபிக்கா ஒடுக்கப் படும் இனங்களுக்காக குரல் கொடுக்கும் நாடு. மன்டேலா தலைமைப் பதவி ஏற்றதும் சிறிலங்காவிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தினார் மனித உரிமைக் கவுன்சிலின் தலைவி நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழப் பெண்.


இந்தியாவுக்கு வரமுன் மகாத்மா காந்தி இருபது வருடத்திற்கு மேற்பட்ட காலம் தென்னாபிரிக்காவில் வாழ்ந்தார் அவர் வெள்ளை நிறவெறி அரசிற்கு எதிராக நடத்திய சாத்வீகப் போராட்டங்களில் தமிழர்கள் முக்கிய பங்கு எடுத்தனர் இதனால் தமிழ் மொழியை காந்தி தேவை கருதி கற்றார்.


காந்தியின் போராட்த்தில் பங்கு பற்றி சிறை சென்று அங்கு கடும் சித்திர வதைக்கு உள்ளாகி இள வயதில் உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி பற்றிய குறிப்பு காந்தியின் வாழ்க்கை நூலில் காணப்படுகிறது காந்தியை தேசபிதா என்று கொண்டாடும் இந்தியா ஈழத் தமிழர்களின் பரம வைரியாகத் தன்னை இனங்காட்டுகிறது.


ஈழத் தழிழர்களைப் போல் இன அழிப்பு, இடப்பெயர்வு, வகை தொகையான பாலியல் வன்முறை போன்ற அனர்த்தங்களை பொஸ்னியா -ஹேர்சிகோவினா வாழ் முஸ்லிம் சகோதரர்கள் அனுபவித் திருக்கிறார்கள் இந்த நாட்டின் எதிர் வாக்களிப்பு வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட சிறப்பைக் காட்டுகிறது.


1995 யூலை -ஆகஸ்த்து மாதப் பொஸ்னியா-ஹேர்சிகோவினா நிகழ்வுகள் மனித வரலாற்றை களங்கப் படுத்துகின்றது ஐநா அமைதி காக்கும் படைகளின் பொறுப்பில் இருந்த பொஸ்னிய நகரான சிறேபிரெனிக்கா (ளுசுநுடீசுநுNஐஊயு) பல நாள் நீடித்த ஆட்டிலறி குண்டு வீச்சுக்கு பிறகு யூலை11ம் நாள் சேர்பியப் படைகள் வசம் வீழ்ந்தது.


ஐநா பிரகடனப் படுத்திய சிறேபிரெனிக்கா அமைதி வலயத்தில் 40,000 பொஸ்னிய முஸ்லிம்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் அதைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஜெனரல் றாட்கோ மிலாடிக் தலைமையிலான சேர்பியப் படைகள் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு இடங்களுக்கு துவக்கு முனையில் இழுத்துச் சென்றனர்.


பெண்கள் அணைவரும் வரிசை வரிசையாக கிடத்தப்பட்டு பாலியல் வண்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். 8,000 வரையிலான ஆண்களும் சிறுவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர் சடலங்கள் பொஸ்னியாவின் பல பாகங்களில் சேர்பியப் படைகளால் புதைக்கப்பட்டன.


பொஸ்னியா முஸ்லிம்கள் மீது சேர்பியப் படைகளும் குறோசியப் படைகளும் தாக்குதல் நடத்துவது நெடுங்கால வழமை. ஏப்பிறில் 1993 ல் தமது குழந்தைகளைக் கையில் ஏந்தி நிற்கும் படி தாய் மாரைப் பணித்த குறோசியப் படையினர் அந்தக் குழந்தைகளை சுட்டுக் கொன்றனர்.


குறோசிய நாட்டதிபர் பிறான்கோ துட்ச்மான் இன அழிப்பை நியாயப்படுத்தி ‘இன அழிப்பு இயற்கை நியதி அதற்கு இறை அனுமதி உண்டு ‘ என்று கூறினார்.


சிறேபிறேனிக்கா படுகொலைகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தால் இன அழிப்பு அதாவது ஜெனோசைற் என்று தீர்ப்பிடப்பட்டுள்ளன. சேர்பியத் தலைவர் மிலோசேவிச் அதே நீதி மன்றத்தால் போர்க் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மிலோசேவிச் சிறையில் காலமானார் நெடுங்காலத் தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு ஜெனரல் றாட்கோ மிலாடிக் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிறேபிறேனிக்கா படுகொலைகளில் உயிர் தப்பியவர்கள் பெல்வெடெயர் (DELVEDESE) என்று பெயரிடப் பட்ட அகதி முகாம் தொகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் பொஸ்னியாவின் மனிதப் புதைகுழிகள் திறக்கப்பட்டடு டிஎன்ஏ ஆய்வுகள் நடக்கின்றன.


15 வருடம் சென்றாலும் இன்றும் தமது உறவுகளின் எச்சங்களைத் தேடி பொஸ்னியா முஸ்லிம்கள் திறக்கப்ட்ட புதை குழிகளுக்குச் செல்கின்றனர் பொஸ்னியா படுகொலைகள் பற்றிய சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பிரதம வழக்கு நடத்துநரான லூயிஸ் ஆர்பர் அம்மையார் தமிழினப் படுகொலைகள் பற்றிய கருத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.


போர்க் குற்றங்களுக்காக சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டு விசாரணைக்கு பின் தண்டிக்கப் பட வேண்டும் என்று அவர் வலியுறித்தினார்.


அதிபர் ராஜபக்சாவின் சரிவிற்கும் வரவிருக்கும் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக ஆகஸ்ட் 2009 ல் பிரித்தானியாவில் சனல் 4 காட்டிய ஒளிப் படம் இடம் பெறுகின்றது. எட்டுத் தமிழ் இளைஞர்கள் கண்கள் மூடிக் கட்டப் பட்டு கை கால்கள் கயிற்றால் பிணைக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் காட்டப் பட்டன.


சிறிலங்கா அரசும் அதன் ஊடகங்களும் இந்த காட்சிப் படங்கள் போலியானவை என்று வாதிட்டாலும் ஐ.நா நியமித்த நிபுணர் குழு அவை உண்மையானவை என்று சான்று வழங்கியுள்ளது.


சிறிலங்காப் போரின் போது பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் கொல்லப்படும் போதும் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் போதும் ஐ.நாவும் அதன் செயலாளர் நாயகமும் வெறும் பார்வையாளர்கலாக இருந்தனர் என்ற பரவாலான கண்டனக் குரல் ஐ.நாவின் தூக்கத்தை கலைத்ததோடு விசாரணைகளை மேற்கொள்ளவும் தூண்டியுள்ளது.


சிறிலங்காப் படைகள் போரின் போது ஜெனோசைற் இன அழிப்பு, போர்மரபை மீறும் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற மூவகைக் குற்றங்களைப் புரிந்ததற்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. காலம் காலமாக நிலவும் போரியல் அடிப்படைச் சட்டம், நியமம், விதிமுறையான பொது மக்களைத் தாக்கக் கூடாது என்ற நெறியை அரச படைகள் திட்டமிட்டு உதாசீனம் செய்தன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


வன்னிப் படுகொலைகள் ஒட்டுமொத்த பொஸ்னியாப் படுகொலைகள், சனவரி 2009ல் இஸ்ரேயில் நடத்திய காசாப் படுகொலைகள் ஆகிய வற்றிலும் பார்க்க எண்ணிக்கையில் கூடியவை என்று விமர்சகர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.


சனவரி 2009க்கும் மே 2009திற்கும் இடைப்பட்ட மாதங்களில் ஆயிரம் ஆயிரமாகப் பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சிவிலியன்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் கொல்லப்பட்டனர் காயங்களுக்கு மருந்தின்றியும் பசி பட்டினியாலும் இன்னும் பலர் உயிரிழந்தனர் என்று மதிப்பிடப்படுகிறது.


பொது மக்கள் உயிரிழப்பு படை நடவடிக்கைக்கு தடங்கலாக இருக்கக் கூடாது என்ற அரசின் கொள்கை பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் படைகளுக்கு வழங்கப்பட்ட தங்கு தடை அற்ற ஊக்குவிப்பாக அமைந்தது.


ஐனவரி 21, 2009 தொடக்கம் தாக்குதல் ஆபத்தில்லாத பொது மக்களுக்கான மூன்று வலயங்களை அரசு அடுத்தடுத்துப் பிரகடனப்படுத்தியது. ஒவ் வொன்றும் முந்தியதிலும் பார்க்கப் பரப்பளவில் சிறியது இறுதியான முள்ளிவாய்க்கால் வலயம் ஜந்து சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு கொண்டது இதற்குள் மூன்று இலட்சம் மக்கள் முடக்கப்பட்டனர்.


மேற்கூறிய பாதுகாப்பு வலயங்களுக்குள் தஞ்சம் புகுந்த பொது மக்கள் மீது முப்படைகளும் சரமாரியாகத் தாக்குதல்களைத் நடத்தின மே 8ம் திகதிக்கும் மே 18ம் திகதிக்கும் இடையில் முள்ளிவாய்க்காலில் தங்கிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40,000ம் வரையிலானோர் கொல்லப் பட்டனர்.


மனிதநேயப் பணியில் குறிப்பாக உணவு வழங்கல், மருத்துவ சேவையில் ஈடுபட்ட ஐ.நா மற்றும் ஜ.சி.ஆர்.சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைக் குறி வைத்துக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன இதிலும் மிக மோசமான குற்றச் செயலாக மருத்துவமனைகள் மீதான தாக்குதல் இடம் பெற்றது.


வன்னியில் உள்ள அரச மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக மருத்துவ மனைகள் என்பன விமானக் குண்டுவீச்சு, ஆட்டிலறிக் குண்டு வீச்சு என்பனவற்றால் முற்றாக சேதம் அடைந்தன நோயாளர்களும் பணியாளர்களும் தஞ்சம் புகுந்த பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்.


அதிபர் ராஜபக்சாவின் தம்பியும் அதிபரின் வழி காட்டியாகவும் செயற்படுகின்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஜபக்சா மருத்துவமனைத் தாக்குதல்களை நியாயப்படுத்தி அறிக்கை இட்டுள்ளார். மே 18ம் நாள் அதி காலையில் வெள்ளைக் கொடியுடன் சரண் புகந்த அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த புலித்தேவன் ஆகியோரைச் சுட்டுக் கொல்லும் படியும் அவர் உத்தரவிட்டார. இந்த உத்தரவிற்கு அமைவாக வெள்ளைக் கொடி ஏந்திய 60 பேர் கொல்லப்பட்டனர். இது பாரிய சர்வதேசக் கண்டனம் பெற்ற போர்க் குற்றமாகும்.


சர்வதேச சட்டத்தில் பொது மக்களை அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைப்பவைப்பதற்கு அனுமதியில்லை அகதி முகாமிற்குள் மக்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைப்பதற்கு அனுமதி இல்லை. அதே போல் முன்னாள் புலிப் பேராளிகளை விசாரணை இன்றி தடுத்து வைப்பதற்கும் அனுமதி கிடையாது.


ராஜபக்ச சகோதரர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் கதை முடிவுறும் நிலையைத் துரிதமாக எட்டிக் கொண்டிருக்கிறுது. மூழ்கும் கப்பலை விட்டு வெளியேறும் பயணிகள் போல் அவருடைய நட்பு நாடுகள் சிறிலங்கா தலைவரையும் அவருடைய அதிகாரிகளையும் கைகழுவி விடுகின்றன.


ஐ.நா வின் 65 ம் வருட 2010 மாநாட்டில் 150 அதிகாரிகளுடன் சென்ற அதிபர் ராஜபக்சாவை உலகத் தலைவர்கள் சந்திக்க மறுத்து விட்டனர் இந்தியா, பாக்கிஸ்தான், வாங்காள தேசத் தலைவர்களும் இதில் அடங்குவர் ராஜபக்சா நடத்திய விருந்துபராசரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஒருவரும் வரவில்லை.


ராஜபக்ச உரையாற்ற எழுந்த போது அவருடைய முகத்தில் அறைந்தாற் போல் பெரும் பாலான தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுந்து சென்று விட்டனர் சென்ற மாதம் நவம்பர் 2010 அவர் ஒக்ஸ்போட் பல்கழைக்கழகச் சிங்கள மாணவர் சங்கத்திற்கு உரையாற்ற சென்ற போது அவரைத் தலை குனிய வைக்கும் பல சம்பவங்கள் நடந்தன.


சனல் 4 தொலைக் காட்சியில் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படைகளால் கற்பழிக்கப் படும் காட்சிகள் காட்டப்பட்டன. தமிழர் நெஞ்சை பிழக்கும் இந்தக் காட்சிகளால் கொதிப் படைந்த இங்கிலாந்துத் தமிழுறவுகள் ராஜபக்ச தங்கியிருந்த டொச்செஸ்டர் நட்சத்திர விடுதியையும் சிறிலங்கா தூதரகத்தையும் பெரும் எண்ணிக்கையில் முற்றுகையிட்டனர்.


ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் தனது நெடிய வலராற்றில் முதல் முறையாக ஒரு நாட்டுத் தலைவரைத் வரவேற்க பாதுகாப்ப காரணம் காட்டி மறுத்து விட்து. ராஜபக்சாவிக்கு சிங்கள சங்கத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப் படவில்லை ராஜபக்ச பொலிஸ் உதவியடன் ஒரு கவச வாகனத்தில் ஏற்றப் பட்டு இங்கிலாந்தை விட்டு தப்பியோடும் சூழ்நிலை ஏற்பட்டது இவரோடு வந்தவர்களுக்கும் இந்தக் கதி ஏற்பட்டது.


சனல் 4 நிர்வாகம் ஈழத் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப் படும் காட்சிகள் அடங்கிய வீடியோபடங்களைச் சிறிலங்கா போர் குற்றங்களைக் விசாரணை செய்யும் ஐ.நா குழுவினரிடம் கொடுத்துள்ளது. அவற்றில் பல ஒலிபரப்புச் செய்ய முடியாதளவுக்கு மோசமானவை என்று அதே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அதிபர் ராஜபக்சவின் தலைவிதி பாதூப்புச் சபையில் அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்சியா ஆகிய நாடுகளின் பொறுப்பில் இருப்பதாக சொல்லப் படுகிறது உலக அரங்கில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற கோட்பாடு இருக்கிறது தமது தேசிய நலனுக்கு பொருத்தமாக அமைந்தால் இந்த நாடுகள் ராஜபக்சாவை கைவிட தயங்க மாட்டா என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக