செவ்வாய், 18 ஜனவரி, 2011

மாவை சொல்வது அப்பட்டமான பொய் – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கிஸ்தர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான பொய் என்று பத்மினி சிதம்பரநாதன்  தெரிவித்துள்ளார்.கூட்டுச் சேர்வது தொடர்பில் பத்மினி சிதம்பரநாதனுடனும் பேச்சு நடத்திவருகின்றோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து  அதனை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் இவ்வாறான கட்சிகளுடன் பேச்சு நடத்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏன் பேசவில்லை என்று புலம்பெயர் தளத்தில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் கூட்டமைப்பிற்கு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை சமாளிக்கும் நோக்கிலேயே மாவை சேனாதிராசா இவ்வாறான பொய்கதையினை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்.
உண்மையில் மாவை சேனாதிராசா இதுவரையில் எனக்கோ எனது கட்சியினருக்கோ ஒரு தொலைபேசி அழைப்பினைக் கூட மேற்கொள்ளவில்லை.
எமது கட்சியினருக்கு தேசியம் தொடர்பிலான தெளிவான பார்வையும், கொள்கைப் பற்றும் உள்ளன. சிறுமைத் தனமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளுக்கு எம்மையோ எமது கட்சியினையோ பயன்படுத்த வேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் என்றும் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக