திங்கள், 15 பிப்ரவரி, 2010

எங்கு சென்றாலும் மிக கவனமாக இருங்கள்

“அமெரிக்க நாட்டவர்களுக்கு உலக அளவில் அச்சுறுத்தல் உள்ளதால், குறிப்பாக அல்-குவைதா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உஷாராக இருக்க வேண்டும்’ என, தங்கள் நாட்டவர்களுக்கு அதிபர் ஒபாமா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, தன் குடிமக்களுக்கு உலகளவிலான பயண எச்சரிக்கை விடுத்துள்ளது; குறிப்பாக, அல்-குவைதா இயக்கத்தினர் தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல் மற்றும் குண்டு வைத்தல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தலாம்’ என, அந்நாடு அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:அமெரிக்க குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில், அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த, அல்-குவைதா பயங்கரவாத இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல், படுகொலைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்தல் போன்ற செயல்கள் மூலம், அவர்கள் அமெரிக்கர்களுக்கு பிரச்னை உண்டாக்கலாம். இதற்கு அவர்கள் எந்த வகையான ஆயுதங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், விடுமுறை நாட்களில் அமெரிக்கர்கள் அதிகளவில் கூடும், விளையாட்டு மைதானங்கள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக வளாகங்கள், ஓட்டல்கள், கிளப்கள், உணவு விடுதிகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்கள் போன்ற எந்த இடத்தை வேண்டுமானாலும், பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கலாம்.கடந்த டிசம்பரில், அமெரிக்க விமானம் ஒன்றில் குண்டு வைக்க நைஜீரியர் ஒருவர் முயன்றார். இச்சம்பவத்திற்கு அல்-குவைதாவினர் பொறுப்பேற்றுள்ளனர். அதே போன்று, கடந்தாண்டு ஆகஸ்ட் 25ல், டில்லி ரயில் நிலையத்தில் வெடி பொருட்களுடன் வந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர். அன்றைய தினமே, ஒரிசா ரயில் நிலையத்தில் மாவோயிஸ்ட்கள் ஏராளமான வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு, இலங்கையில் பயணிகள் பஸ்சிலும், 2006ம் ஆண்டு இந்தியாவில் ரயிலிலும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.அமெரிக்கர்களுக்கு உலகளாவிய அச்சுறுத்தல் உள்ளதால், எங்கு சென்றாலும் கவனமாக இருப்பது நல்லது.இவ்வாறு எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலித் ஷேக் முகமதை நீதியின் முன் நிறுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக