திங்கள், 15 பிப்ரவரி, 2010

மறுபடியும் பிரபாகரன்..

சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல.. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்… பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்… இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்று சிந்திக்க வேண்டிய பருவம் இதுவாகும். பிரபாகரன் விவகாரத்தை தொடர் குழப்பகரமாகவே வைத்திருக்க இந்திய ஆட்சியாளர் எதற்காக முயல்கிறார்கள் என்பது பலத்த சந்தேகங்களை உருவாக்குகிறது. இது தொடர்பாக ஐந்து சிந்தனைகள் இங்கே தரப்படுகின்றன. 01. பிரபாகரன் மரணம் தொடர்பாக குழப்பமான நிலை நிலவுகிறது என்று கூறிக்கொண்டே, காலத்தை கடத்துவதே இந்திய – இலங்கை அரசுகளுக்கு வசதியானது. 02. பிரபாகரன் கடந்த ஆண்டு மே 17ம் திகதியே தப்பிவிட்டார், சிறீலங்கா அரசால் காட்டப்பட்டது போலியான உருவம் என்று வாதிடுவோருக்கு ஒரு பிடிமானத்தை வழங்க வேண்டும். அவர்கள் பிரபாகரன் வரும்வரை காத்திருப்போம் என்று வீர முழக்கமிட, அனுமதிப்பது புத்திசாலித்தனமானது. போராட்டத்தின் வெப்பத்தை மெல்ல மெல்ல தணிப்பதற்கு அவர் இருக்கிறார் என்ற கருத்து அவசியமென இந்தியா கருதலாம். பிரபாகரன் வருவார் என்ற கொள்கையை காரணம் காட்டி, எல்லாவற்றையும் பின்போடுவது தமிழரைவிட தமிழர் எதிர்ப்பு சக்திகளுக்கே அதிக இலாபமானது. 03. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பதை – இருக்கிறார் ! இல்லை ! – என்ற இரு வேறுபட்ட குழப்பான பின்னணியோடு உறுதி செய்தால், கலவரங்கள் வெடிக்காது. இந்திய அரசும் அந்தப்பழியில் இருந்து தப்பிவிடலாம். மேலும் பிரபாகரனை புதுமாத்தளினில் வைத்துக்கொன்றது உண்மையானால், அந்த வரலாற்றுப் பழியை காங்கிரஸ் சுமக்க நேரிடும். அப்படியான பழியோடு தமிழகத்தில் காங்கிரஸ் தலை நிமிர்ந்து நடப்பது கடினம். மேலும் அதைக் காரணம் காட்டியே வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்தளவு ஆசனங்களை கொடுத்து மிளகாய் அரைத்துவிடுவார் கலைஞர். ஆகவே காங்கிரஸ் தெற்கே வண்டியோட்ட இப்படி இருவிதமான கருத்துக்கள் அவசியமாகிறது. ( தமிழ்நாடு காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை இரண்டு தினங்கள் நிறுத்தியதாக சிங்கள அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியது தெரிந்ததே. ) 04. இவை எல்லாவற்றையும் விட ஆபத்தானது சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடு. இந்த முரண்பாட்டின் மையப்புள்ளியாக இருப்பதே பிரபாகரன்தான். உயிராபத்தை பார்க்காது உண்மையை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறிவருவது பிரபாகரன் தொட்ர்பான மர்மமேயாகும். 05. மேலும் சரத் பொன்சேகா பிரபாகரன் தொடர்பான தகவலை வெளியிடமாட்டார் என்று கருதுவது தவறு, இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட ஒளிநாடா ஒன்று இதுவரை வெளியாகவில்லை என்ற சந்தேகம் நிலவுகிறது. அதை அவர் எங்காவது கொடுத்திருக்கலாம். அது வெளியானால் இந்திய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் பெரும் சிக்கல் ஏற்படும். மேலும்… சரத் பொன்சேகா பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறினால் ப.சிதம்பரம் சொன்னது சரியாகும். இருக்கிறார் என்று கூறினால் சி.பி.ஐ சொன்னது சரியாகும். ஆகவே இரண்டுக்கும் தயாராக இந்தியா திட்டமிடுகிறது என்று எண்ண இந்த இரு வேறுபட்ட அறிக்கைகளே சான்றாகும். இடையில் ஒன்று.. அரசியலில் குதித்த சரத் பொன்சேகாவை ஏன் இராணுவ நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என்று சிறீலங்கா துடிக்கிறது.. ஆம்.. ! அவர் கூறுவதை எல்லாம் இரகசியமாக வைக்க இராணுவ நீதிமன்றமே தேவை. சாதாரண நீதி மன்றில் விசாரித்தால் அவர் ஏதாவது உண்மைகளை தாறுமாறாக வெளியிட்டால் அது பெரும் அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தும். அத்துடன் நின்றுவிடாது கோத்தபாய ராஜபக்ஷ, உட்பட மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் இரகசியங்களை உண்மையும் பொய்யுமாகக் கலந்து தாறுமாறாக வெளியிட வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு ஆபத்தும் உள்ளது. சரத் பொன்சேகா வேண்டுமென்றே பிரபாகரன் தப்பிவிட்டார் என்று கூறினால், மகிந்தவின் திட்டங்கள் எல்லாமே நாசமாகிவிடும். பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் தப்பிவிட்டார் என்று ஒரு பொய் சொன்னால் போதும், பாரிய சிக்கல் ஏற்படும். வரும் தேர்தலில் மகிந்த மண் கவ்வ நேரிடும்.. மறுபுறம் இப்படியான உறுதியற்ற நிலை இருக்கும்போது மரண அறிக்கை கிடைத்துவிட்டதாக இந்தியா ஒப்புக் கொண்டால் அது இந்தியா முழுவதும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே ஒரு பக்கம் சி.பி.ஐயும் மறுபக்கம் ப.சிதம்பரமும் இரு வேறு அறிக்கைகளை விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் குழம்புவதற்கு உண்மையாகவே பிரபாகரன் காரணமல்ல, சரத் பொன்சேகாவே காரணமாகும். இது குறித்து புலம் பெயர் தமிழர் வீறு கொண்டு எழுந்துவிட யாதொரு முகாந்திரமும் இல்லை. சி.பி.ஐயும் ப.சிதம்பரமும் ஈழத்தமிழருக்கு வாய்ப்பான எந்த அறிக்கையையும் வெளியிடமாட்டார்கள் என்ற அடிப்படையை விளங்கினால் அதுவே போதுமானதாக இருக்கும். உண்மையான அறிக்கை எது ? சரத் பொன்சேகா கைது விவகாரம் சடையப்படும்போது அது வெளிவரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக