வெள்ளி, 14 மே, 2010

உலகத்தமிழர் செய்யவேண்டியவை..............!

சிறிலங்காவின் போர்குற்ற விசாரணைகளை நம்பிக்கை வாய்ந்த மூன்றாம் தரப்பு திர்ப்பாயங்கள் மேற்கொள்ளவேண்டும். இதனைஉலக அமைப்புக்களுக்கு உலகத்தமிழர்கள் அழுத்தங்கள் கொடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இனவழிப்பு போரினை செய்து சிங்கள அரசு ஓராண்டாகின்றது. அதற்கான வெற்றிவிழாவினை கொண்டாடி இனவழிப்பு போரினை மூடி மறைக்க நினைக்கின்றது.
 ஆனால் உலகத்தமிழர்கள் இந்த நாளை போர்குற்ற நாளாக அறிவித்திருக்கின்றமை நாட்களை நினைவு கூருவதற்காக மட்டும் அல்ல. பல அமைப்புக்களை நிறுவி மாறி மாறி குற்ற சாட்டுக்களை முன்வைத்து ஒவ்வொருவரும் தமது அமைப்புக்களை விளம்பரப்படுத்துவதற்காக அல்ல. உருப்படியான திட்டங்களை நிறுவி யார் யார் எதை எதை செய்வது என திட்டமிட்டு தீர்மானித்து செயற்படவும் இந்த நாட்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. கூடவே உலக அளவில் ஒன்று பட்ட ஒரே ஒரு அமைப்பு எல்லா காரியத்தையும் செய்யவும் முடியாது. காரணம் அந்த அமைப்பிற்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது உலகம் முழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தும். கடந்த கால படிப்பினைகள் இதற்கு உதாரணம்.சிலர் கூறலாம் பாதிப்பு வராமல் அமைப்பினை நடத்தலாம் என்று ஆனால் பாதிப்பும் பிரச்சினைகளும் அதனை நடத்துபவர்களால் மட்டும் வருவதில்லை. புறச்சூழல்களே அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இன்று எம்முன்னே ஒரே இலக்கை கொண்ட பல முரண்பாடான செயற்பாடுகள் வேண்டி கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக இலங்கையில் வடக்கு கிழக்கில் மக்களை சொந்த காலில் நிற்க வைப்பதற்கான புனர்வாழ்வு அபிவிருத்தி பணிகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும். அங்கு சிறைப்பட்டு இருக்கின்ற போராளிகளை மீழ்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதே வேளை போர்குற்றவாழிகளை நீதியின் முன்பாக சர்வதேச அரங்கில் கொண்டுவரப்படவேண்டும். தமிழின அழிப்பினை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். அதனூடாக எமக்கான உரிமைகளை அங்கீகரிக்க உலக நாடுகளை கேட்கவேண்டும். ஆனால் இவை இரண்டையும் ஒரே அமைப்பு செய்ய முடியுமா? உன்னை பிடித்து குற்றவாழிக்கூண்டில் நிறுத்தப்போகின்றேன் அதே வேளை நீ அங்கு இருக்கின்ற மக்களை பார்க்கவேண்டும் அவர்களுக்கு வேலை செய்ய எம்மை அனுமதிக்க வேண்டும் என்று ஒரே அமைப்பு கேட்டால் சாத்தியப்படுமா? ஆகவே நாம் ஓர் ஒற்றூமை உணர்வுடன் யார் யார் எதை செய்வது என்ற வகையில் இயங்கவேண்டும். 1 மனித உரிமை, இனப்படுகொலை, இலங்கையின் பொருளாதாரத்தினை முடக்குதல் போன்ற பணிகளை யார் செய்வது? 2 தாயகத்தில் மக்களிற்கான புனர்வாழ்வுப்பணிகளை யார் செய்வது? 3 தமிழர் தாயக விடுதலைப்போராட்டத்தினை ஜன நாயக ரீதியாக யார் செய்வது? இன்று எம்முன்பே இருக்கின்ற பிரதான பணிகள் இவைதான் ஆகவே இவற்றை முக்கியமான அமைப்புக்கள் தம்முள்ளே கலந்துரையாடி பொறுப்புக்களைபகிர்ந்து செய்யவேண்டும். இன்று புலம்பெயர் மண்ணில் தமிழீழ மக்கள் பேரவை, உலகதமிழர் பேரவை, நாடு கடந்த அரசாங்கம் என முக்கிய மூன்று முனைப்புக்கள் மே 2009 இற்கு பின்னர் இடம் பெற தொடங்கின. ஆனால் இவைகள் ஏதாவது பொது உடன்பாட்டில் வேலைகளை பகிர்ந்து கொள்ளாமல் எல்லாரும் எல்லாவற்றையும் செய்ய போவதாக தமது அறிக்கைகளிலும், பேச்சுக்களிலும் கூறி நிற்கின்றன. இது சாத்தியமா? (இணைப்பு பணிகளுக்காக ஓர் நிழல் அமைப்பு தேவை என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற்து) எடுத்துக்காட்டாக உலக தமிழர் பேரவை மனித உரிமை மீறல், இலங்கையினை புறக்கணி என்ற வேலைத்திட்டங்களை செய்யப்போவதாக இதுவரை மூன்று கூட்டங்கள் வைத்துள்ளன. கூடவே புலிகளின் தடைகளை நீக்க முயற்சிக்க போவதாக பிரான்சில் நடந்த கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது. அதே நேரம் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் செய்யபோவதாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டன. இவை இரண்டையும் செய்வது சாத்தியமா? இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகசெயற்பட்டுக்கொண்டு இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வேலை செய்யபோகின்றோம் என்றால் அது சாத்தியமா? இல்லை இல்லை நாம் எமது அங்கத்துவ நிறுவனம் ஊடாகத்தான் செய்யப்போகின்றோம் என்றாலும் கூட அந்த நிறுவனங்களும் நாளைக்கு தடை செய்யப்படலாம் அல்லவா? இதே போல தான் நாடு கடந்த அரசும் மக்கள் பேரவையும் அரசியல், புனர்வாழ்வு, மனித உரிமை என எல்லாவற்றையும் செய்யபோவதாக கூறப்படுகின்றது. எமக்கென்று தாயகத்தில் ஓர் கட்டுப்பாட்டு பிரதேசம் வரும்வரை எல்லாவற்றையும் ஒரே அமைப்பு செய்வது சாத்தியமற்றது. ஒழித்து ஓடி செய்வதும் இப்போது தேவையற்றது. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மேற்கூறப்பட்ட மூன்று வேலைத்திட்டங்களில் யார் யார் எதனை செய்வது என முன்னுரிமை படுத்தி வேலை செய்ய முன்வரவேண்டும் . கூடவே ஒவ்வொரு நாட்டிலும் இணைப்பு வேலைகளை செய்வதற்கு ஓர் நிழலாக யார் இருப்பது என்பதில் புரிண்ந்துணர்வு வேண்டும்.ஏனையோர்கள் பொதுவான புரிந்துணர்வு அடிப்படையில் அவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும். சர்வதேச அமைப்புக்கள் சில எம்மவருக்காக குரல்கொடுக்க வரும் இவ்வேளையில் அவற்றை நாம் ஒற்றுமையாக யார் யார் எதை எதை செய்யவேண்டும் என திட்டமிட்டு செயற்படவேண்டும். ஓர் சிறிய எடுத்துக்காட்டு:- 18 ஆம் திகதி மே மாதம் யூ.எம்.எச்.சி.ஆர் அமைப்பு இத்தாலி ரோம் நகரில் ஓர் கூட்டம் வைக்கின்றார்கள். இலங்கையில் மீழ் குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பான இந்த கூட்டத்தில் எம்மவர் சார்பிலும் கலந்து கொள்ளலாம். ஆகவே எந்த அமைப்பு சார்பாக யார் போவது? நிலமைக்கு ஏற்ப ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு கூட்டத்திற்கு அனுப்பி சமாளிக்கும் நிலை இனி வேண்டாம். உருப்படியான திட்ட அடிப்படையில் ஒவ்வொரு அமைப்பும் பணிகளை செய்யவேண்டும். மனித உரிமை தொடர்பில் நாம் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாக ஓர் அன்பர் எமக்கு அனுப்பிய திட்டம் எமக்கு கிடைத்தது சுருக்கமாக தெளிவாக இருக்கும் இந்த திட்டத்தினை ஏதாவது ஓன்று அல்லது இரண்டு அமைப்புக்கள் பொறுப்பு கூறும் வகையில் பொறுப்பெடுத்து செயற்படவேண்டும். இதுதான் இன்றைய நாட்களில் எமக்கான கடமையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக