வெள்ளி, 14 மே, 2010


ஒரு நீண்ட தொலை தூரப் பயணத்திற்கு நான் தயாரான பொழுதில் கனவுகளையும் ஆடைகளைப் போலவே அள்ளிச் சுருட்டி விடலாம் என்று நம்பினேன்.....ஆயினும், துரத்திய மரணமும், துப்பாக்கித் தோட்டாக்களும் வழிநடத்திய இந்தப் பயணத்தில் எனது முந்தைய பயணங்களைப் போல இல்லாமல் கனவு என்கூட வருவதற்கு மறுத்துத் தப்பி ஓடி விட்டது.........., என் உடலைப் போலக் கனவுகள் அத்தனை எளிதில் இடம் மாற ஒப்புக் கொள்ளவில்லை, அவை பிறந்த மண்ணையே சுற்றி வந்தன, பெரும் சீற்றத்துடன் பொங்கும் கடலை, உலகின் மிகவும் உயரமான சிகரங்களை, பெயர் தெரியாத ஊர்களை எல்லாம் கடந்து அவை எப்படியும் தப்பி ஓடி விடுகின்றன........, கனவுகள் வழக்கம் போலவே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாளில் நான் அவற்றைப் பிரிந்து வெகு தூரம் வந்திருந்தேன், இருட்டிய பிறகு கனவுகள் மெல்லத் திரும்பித் தோட்ட மரத்தில் வழக்கமாய்க் கூவும் குயிலின் ஓசை கண்டு தாவிக் குதித்து, பூட்டிய வீட்டின் சாளரம் உடைத்து, முற்றத்தில் குதித்து, உயிர் வாழும் என்று நான் நம்பி இருந்தேன்..........., இடிபாடுகளுக்கிடையில் கனவுகள் என் வீட்டை இந்நேரம் பழுது பார்த்திருக்கும், மண்மூடிய என் வீட்டுத் தோட்டங்களில் கனவுகள் மீண்டும் மலர்களை நட்டிருக்கும், நான் விட்டு வந்த நிலவைக் கிணற்று நீருக்குள் கட்டி வைத்து என் கனவுகள் காவலிருக்கும்....., அந்த இடிந்த என் பழைய வீட்டிலிருந்து என்னை நீங்கள் துரத்தியதைப் போல என் கனவுகளைத் துரத்த உங்களால் முடியாது, அவை எப்போதும் அகதிகள் இல்லை............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக