வெள்ளி, 14 மே, 2010

ஓர் இனக்கூட்டம் ஈனஸ்வரத்தில் தனது அஞ்சலிக்காகத் தானே கதறித் தவம் இருக்கும் குரல் கேட்கிறதா! அந்தத் திசையைப் பாருங்கள் – தெரிவதுதான் ஈழம்!


ஆயிரக்கணக்கான மரணங்களை, கொடூரக் கொலைகளை, குண்டு வீச்சுக்களைத் தாங்கி சாட்சிகளே இல்லாத சாவுக் களமாய்க் கிடக்கிறது தாய் மண். கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரசும் இன்ன பிற நச்சு ஆயுதங்களும் வீசிய சத்தம் இன்னமும் நினைவிலாடும் தேசம். சொந்த தேசத்து மக்களையே கொன்று குவித்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் வெற்றி விழாவை நடத்தினாலும், காட்டுக்குள் இருந்து கணைகள் வருமோ, கடலுக்குள் இருந்து பகை வருமோ என்ற பயத்தால் அலரி மாளிகைக்குள் ஆட்சியாளர்கள் பதுங்கி இருக்கிறார்கள். ஓர் இனக்கூட்டம் ஈனஸ்வரத்தில் தனது அஞ்சலிக்காகத் தானே கதறித் தவம் இருக்கும் குரல் கேட்கிறதா! அந்தத் திசையைப் பாருங்கள் – தெரிவதுதான் ஈழம்! உலகம் வேடிக்கை பார்க்கவில்லை, தூண்டியேவிட்டது.
 பக்கத்து நாடுகள் கண்டிக்கவில்லை, ஆயுதங்கள் கொடுத்தன. ஆலோசனைகள் சொல்லின. ஆதரவாக நின்றன. மொழி, இனம் பற்றிப் பேசியே உலகத் தலைவர் ஆனவர்களின் கண்களில் நீர் இல்லை, கழுத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள். எதையாவது செய்திருக்க வேண்டிய சொந்தங்கள், கதை கேட்க ஆரம்பித்தார்கள். ‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காத’ நம் முன்னே ஈழத்தில் சாவுச் சங்கு ஊதப்பட்டு ஓராண்டு ஆகிறது. ‘மே’ மாதம் கிரிகோரியன் காலண்டரில் உலகத் தமிழன் குறித்துவைத்திருக்கிறான், ‘வலி சுமந்த மாதம்’ என்று. இனி ஒவ்வோர் ஆண்டும் அக்னி வெயிலைவிடக் கொடுமையாக நமது உள்ளங்களை அது சுடும். ஆனால், கொழும்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. மே 12 முதல் 20-ம் தேதி வரை போர் வீரர்களின் வாரமாகக் கொண்டாடுகிறார்கள். முப்படைகளின் தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் இருக்கும் மகிந்தா ராஜபக்ஷே, தனது முழுக் குடும்பத்தையும் ஆட்சிக் கட்டிலில் உட்கார்த்தி அழகு பார்க்கப் பயன்பட்ட யுத்தத்தின் வெற்றி அல்லவா இது! இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ‘நாடு இப்போது அமைதியின் பக்கம் இருக்கிறது’ என்று மகிந்தா அறிவித்திருக்கிறார். ஆனால், யதார்த்தம்? ”உங்கள் நாட்டில் குண்டுச் சத்தம் இல்லைதானே… அப்படியானால் அமைதி யுகம் ஆரம்பமாகிவிட்டதா?” என்ற கேள்விக்கு, கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார்… ”பாதிப் பேரைக்கொன்று விட்டார்கள். மீதிப் பேர் நடைப்பிணங்களாக அலைகிறார்கள். அவர்களையும் கொல்ல குண்டுகளை வீணடிக்க சிங்கள இனவாதம் விரும்பவில்லை.” ஈழத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கு உடல் நலம் இல்லை என்ற தகவல் வந்ததும், பிரிட்டனில் இருந்து புறப்பட்டார் சபேசன். போர் முடிந்துவிட்டதால், போய் வரலாம் என்பது அவரது எண்ணம். கொழும்பு வந்து… அங்கே இருந்து வவுனியாவில் போய் இறங்கினார். திடீரெனச் சுற்றி வளைக்கப் பட்டார் சபேசன். அவருடைய கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டன. கைகளைப் பின்னால் இழுத்துக் கட்டுகிறார்கள். மதவாச்சி சித்ரவதைக் கூடத்துக்குக் கொண்டுபோகப்பட்டு… சொல்ல முடியாத வகையில் வதைக்கப்படுகிறார். யார் யார் பெயரை எல்லாமோ சொல்லி, அவரைத் தெரியுமா… இவரைத் தெரியுமா என்று கேட்டால், சபேசனுக்கு அவரது அம்மாவைத் தவிர, யாரையும் தெரியவில்லை. பழுக்கக் காய்ச்சிய கம்பியால் முதுகில் கோடு போட்டு, அதில் தண்ணீரைப் பாய்ச்சி… பிறப்பு உறுப்பிலும் மிளகாய்ப் பொடி தூவி என… சபேசன் அனுபவித்தவை அதிகம். முடிவாக, லட்சக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டு இருக்கிறார். இதே மாதிரிதான் லண்டனில் இருந்து உறவினர்களைப் பார்க்க வந்த பா.ஜெயவதனன், வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று, ‘நான் என்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டுமா?’ என்று அப்பாவியாகக் கேட்க… உள்ளே போய் உட்காருங்கள் என்று சொன்னார்கள். அங்கே இருந்த நான்கைந்து பேர் ஜெயவதனனைக் கடத்திப் போய் சித்ரவதை செய்கிறார்கள். சரமாரியான அடி உதை வாங்கி, சோறு தண்ணீர் இல்லாமல் கிடத்தப்படுகிறார். சில லட்சம் பணத்துடன் உறவினர்கள் வந்து அவரை மீட்டுச் சென்றுள்ளார்கள். கபிலநாத் என்ற மாணவனைக் கடத்திய கும்பல் மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டுக் காத்திருந்தது. அவ்வளவு பணம் தரும் அளவுக்குப் பெற்றோரிடம் வசதி இல்லை. கபிலநாத் கொல்லப்பட்டான். 13 வயதான ரீ.அஜீத்குமார் என்ற பையனை மானிக்ஃபார்ம் முகாமுக்கு அருகில் கறுப்பு வேன் ஆசாமிகள் கடத்தினார்கள். அதே முகாமில் இருந்த பெண்களை இரவு நேரத்தில் ஆட்கள் இழுத்துச் சென்று கற்பழித்துக் கொலை செய்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. பொறியாளர்கள் பி.மகேஸ்வரன், எஸ்.மகேந்திரன் ஆகிய இருவரையும் மர்மக் கும்பல் கடத்த முயற்சிக்க… உறவினர்கள் சூழ்ந்து தடுத்துவிட்டார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சட்டத்துக்குப் புறம்பான கைது, ஆள் கடத்தல், கப்பம் கோருதல், கொள்ளைச் சம்பவங்கள், கொடூரக் கொலைகள், கற்பழிப்புகள்… ஆகியவை நடக்கும் இடமாக இப்போதைய ஈழம் இருக்கிறது. இந்தச் சம்பவங்களைப் பட்டியலிட்டு நாடாளுமன்றத்தில் அப்பாத்துரை விநாயகமூர்த்தி என்ற தமிழ் எம்.பி. பேசியிருக்கிறார். ‘ராணுவத்தின் ஆட்சி நடக்கும் பகுதியில் இந்தச் சம்பவங்கள் நடக்கின்றன. இவை திட்டமிட்டுச் செயல்படும் குழுக்களால் நடத்தப்படுகிறது. ராணுவத்துக்குத் தெரியாமல் இது எப்படி நடக்க முடியும்?’ என்று கேட்டார். பதில் சொல்வதற்குத்தான் யாரும் இல்லை. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா எனக் கொஞ்சம் காசு வைத்திருக்கும் தமிழர்கள் தலைமறைவாக வாழ்ந்தாக வேண்டிய சூழலே இன்றும் நிலவுகிறது. மூன்று லட்சம் மக்களை முள்வேலிக் கம்பிகளுக்குள் வைத்திருந்து முடமாக்க நினைத்த அரசுக்கு எதிராக உலக நிர்பந்தம் அதிகமானது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேவிட்டனர். இன்னமும் 73 ஆயிரம் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் இருக்கிறார்கள். புலிகள் அமைப்பில் இணைந்து உயிரைவிட்ட 40 ஆயிரம் போராளிகளின் குடும்பங்களே இதில் அதிகம். ‘உங்களை வெளியில்விட்டால், எங்கள் நாட்டுக்கு ஆபத்து. மறுபடியும் ஆயுதம் தூக்க நீங்கள் உதவியாக இருப்பீர்கள்’ என்று, வெளியேவிட மறுத்துவிட்டார்கள். அதே வெயிலிலும் மழையிலும் கூடாரங்களுக்குள் இந்த 73 ஆயிரம் பேரும் இன்னமும் இருக்கிறார்கள். ”இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேரை மீள் குடியேற்றம் செய்துள்ளோம். இவர்களும் அடிப்படை வசதி எதுவும் இல்லாத இடங்களில் தவிக்கிறார்கள். கிளிநொச்சியில் குடியேற்றப்பட்ட மக்கள், மோசமான நிலையில் உள்ளனர். அவர்களை நான் பார்க்கச் சென்றபோது, மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். வன்னியில் மட்டுமல்ல, கிழக்கிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி இல்லை. 10 குடும்பங்களை எடுத்துக்கொண்டால், ஏழு குடும்பங்களில் குடும்பத் தலைவர் இல்லை. சிறு குழந்தைகளுடன் பல்வேறு அசௌகரியங்களுடன் மக்கள் இருப்பதை நான் பார்த்தேன்” என்று மீள்குடியேற்ற அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ள கருணா சொல்கிறார். அவராலேயே மறைக்க முடியாத அளவுக்கு மக்கள் அநாதைகளாக அலைவது தொடர்கிறது. சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டால் அங்கு வீடுகள் இருந்த தடயம் மட்டும்தான் இருக்கிறது. விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாமல் நாசம் செய்துள்ளார்கள். மீன்பிடி படகுகள் உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளன. இப்படி ஏதுமற்ற நிலையில்தான், மீள்குடியேற்றம் நடந்துள்ளது. விவசாயமும் மீன் பிடித்தலும்தான் அவர்களுக்குத் தெரிந்த தொழில். ஆனால், அதைச் செய்வதற்கு வழி ஏதும் இல்லை. கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் தமிழ்ப் பெண் கள் இப்போது விதவைகளாக இருக்கிறார்கள். இதில் 25 ஆயிரம் பேர், 30 வயதுக்கும் குறைந்தவர்கள். அடுத்தகட்ட வாழ்க்கை என்ன என்பதே தெரியவில்லை. குழந்தைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை. ”பெரிய கடல் இருக்கு… ஏரி இருக்கு. வெள்ளாமைக்கு வயல், விறகு வெட்டக் காடு இருக்கு. நல்ல வழமான இடம் எங்கட வாகை. ஆனா, யுத்தம் எங்கட வாழ்வில் விளையாடிப் போட்டுது பாருங்கோ. எங்கட நிலத்தில வெள்ளாமையைச் செய்வம். மீனைப் பிடிப்பம். காட்டுக்குப் போவம். பட்டினி கிடக்க மாட்டம். ஏதோ வசதியா இருந்தனங்க. இப்ப ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பாடுபடுறம்? எல்லாம் போச்சு! முன்னயெல்லாம் புலியள் இருக்கிறதென்று கெடுபிடி பண்ணினாங்க. இப்ப தேனெடுக்க, விறகு வெட்ட, தொழில் செய்ய, காட்டுக்குப் போக படையிட்ட பெர்மிஷன் வாங்கணும். அபிவிருத்தின்னு அரசாங்கம் சொல்லுது, குடியேற்றத்துக்கு உதவின்னு சொல்லுது. நிவாரணம் தாரேனெண்டு சொல்லுது. எல்லாமே பொய்யி!” என்று வாகை மீனவர் சொல்லும் வார்த்தைதான் மொத்த ஈழத்துக்குமான நிலை. தமிழர்கள் வசதியாக வாழ்ந்து தொழில் செய்த இடங்களில் எல்லாம் இப்போது சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு, விவசாயம் பார்க்கிறார்கள். மீன் பிடிக்கிறார்கள். பெரும்பான்மைத் தமிழர் பகுதியாகச் சொல்லப்படும் வட கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் குடியேற்றம் மிகத் தீவிரமாக நடக்கிறது. ‘தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்’ என்ற பெயரால் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் ஒரு ரகசிய துண்டறிக்கை எல்லா வீடுகளுக்கும் போடப்பட்டுள்ளது. ‘தென்இலங்கையில் இருந்து அதிக அளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகளாக எம் மண்ணை ஆக்கிரமித்து, தமிழ் மக்களாகிய எம்மைச் சிறுபான்மையினர் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். வர்த்தக நிலையங்களில் சிங்களப் பெயர்ப் பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகள் கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடுகள், காணிகள் விற்றல், சிற்றூர்திகளில் சிங்களப் பாடல்களை ஒலிபரப்புதல் ஆகியவை தொடங்கிவிட்டன’ என்கிறது இந்தப் பிரசுரம். அதாவது, வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீடு இடிப்பு, கரும்புலி மில்லர் நினைவாக நெல்லியடியில் வைக்கப்பட்ட நினைவுத் தூண் உடைப்பு, யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் இருந்த மாவீரர் துயிலும் இடம் இடிப்பு… என போர் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் வெளிப்படையான சிங்களக் குடி யேற்றமும் தடங்கல் இல்லாமல் நடக்கிறது. ”உணவுக் களஞ்சியமான வன்னி மண்ணில் உற்பத்தியைப் பெருக்கி, மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம், ஒரு பிடிச் சோற்றுக்குக் கையேந்தி வரிசையில் நிற்கிறோம்” என்று தமிழ் எம்.பி-யான சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அன்றாட வாழ்க்கைக்கு அவஸ்தைப்பட்டு… சொந்தத் தொழிலும் செய்யவிடாமல், கிடைக்க வேண்டிய சிறு வேலையும் மறுக்கப்பட்டு… வாசலுக்கு வந்தால் வளைக்கப்படுவோமோ என்று பயந்து, உட்கார ஒரு நிரந்தரக் கூரை இல்லாமல் தவித்து… என நான் சொல்லாத துன்பம் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது, ஈழத் தமிழினம். இந்தக் கஷ்டங்கள் எதற்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பல்லாயிரம் கோடி முதலீடுகளை சீனா இறக்கி வருகிறது. ‘உங்களுக்கான அத்தனை உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறோம்’ என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்து இருக்கிறார். மிகப் பெரிய காற்றாலை மின் திட்டத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறது இந்தியா. இன்னும் எத்தனையோ நாடுகள் தங்களது முதலீட்டுக்கான சந்தையாக இலங்கையை மாற்றிவிட்டன. அமைதி தோய்ந்த கடல்பரப்பு முழுமையும் கேளிக்கை விடுதிகள், சுற்றுலா மாளிகைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. கொடூரம் என்னவெனில், கொழும்பு சுற்றுலாவின் அங்கமாகப் பாலியல் தொழில் மாறிப்போனதுபோல, இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப் பரப்பும் மாற்றப்பட இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் எதிர்காலத்தை நினைத்தால், பகீரென்கிறது. பன்னாட்டு, பண்பாட்டுச் சந்தைக்கு திரிகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவை மொத்தமாகத் தாரைவார்க்கும் படலத்தில் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்திருக்கின்றன. இந்த வளம் கொழிக்கும் பகுதியை எதைக் காரணம் காட்டி யும் கைவிட்டுவிடக் கூடாது என்று பல்வேறு நாடுகள் துடிக் கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள், அமைப்புரீதியாகவோ அல்லது தனித்தனிக் குழுக்களாகவோ அங்கு இயங்குகிறார்களா என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் இதுவரை இல்லை. ஆனால், புலி வருது பூச்சாண்டிகளைச் சிங்கள அரசு நிறுத்தவில்லை. ‘புலிகளின் புதிய ராணுவப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் டி.எம்.ஜனரட்ண அறிவித்துள்ளார். ”பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக்கூடிய சந்தர்ப்பங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்கிறார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய. ”இன்னும் பயங்கரவாதம் கனன்று வருகிறது” என்று சொல்கிறார் மகிந்தாவின் மகன் நமல். நண்பர்களைவிட எதிரிகளுக்குத்தான் எல்லாம் தெரியும்… என்பதை வைத்துப் பார்த்தால், ஈழத்தில் ஏதோ நடக்கப்போவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகின்றன. சக்கரம் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. துன்பத்தில் அதிக துன்பமும், சோகத்தில் இன்னும் துயரமுமே ஈழத் தமிழ் இனத்துக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையை எந்த தேவதூதன் மாற்றுவான் என்பதுதான் தெரியவில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக