புதன், 26 மே, 2010

ஏன் நமக்கு விடுதலை தேவையாக இருக்கிறது?

கத்தோலிக்க கிறித்துவ நிறுவனத்தின் ஒரு அமைப்பாக காரிதாஸ் லங்கை அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 30 ஆண்டுகால கடும் சமர்களுக்குப் பின்னர் நிறைவு பெற்ற சமர்காலம் என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட, சற்றேறக்குறைய 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணிலே ஏதிலிகளாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு, தற்போதைய கடுமையான வெப்பநிலை மற்றும் பருவக்கால சூழ்நிலைகளால் தண்ணீர் பற்றாக்குறை, அதனால் ஏற்படும் உள்ள உடல் பாதிப்புகளை வருத்தத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறது. கொத்து வெடுகுண்டுகளை பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் சட்டத்தை வருகிற ஆகஸ்ட் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில்
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த சட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டும் என ஜே.ஆர்.எஸ். என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.




கடந்த ஏப்ரல் 21ஆம் நாளன்றுவரை நிலவரப்படி இந்த கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள 106 நாடுகளில் 30 நாடுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கி இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்துதல், தயாரித்தல் மற்றும் இடம் மாற்றுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் சேமிப்புகிடங்கிலுள்ள வெடிகுண்டுகளை அழித்தல், பாதிக்கப்பட்ட நிலங்களை சுத்தம் செய்தல், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகங்களுக்கு அரசுகள் ஆதரவளித்தல் ஆகியவையும் நடைமுறைப்படுத்தப்பட காலவரை அறிவிக்கப்படும், அறிவிக்கப்பட வேண்டும் என்பதை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மரணம் குறித்த அச்சமே பலரை வாழ்க்கையில் நம்பிக்கையற்றுப்போக செய்கிறது. அதோடல்லாமல், அவர்களை பொய்மையான ஒரு ஆறுதலை தேட வைக்கிறது என கத்தோலிக்க கிறித்துவத்தின் உலகத் தலைவர் வத்திகானில் புனித பேதுரு பசிலிக்காவில் இடம்பெற்ற கர்தினால் பவுல் அகஸ்டின் மேயெரின் அடக்க சடங்கில் பேசியிருக்கிறார். மரணத்தைக் குறித்து அச்சம் வேண்டாம் என்பதை மறுபடியும் அவர் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.


செய்திகள் இவ்வாறு இருக்கையில், நாம் நமது விடுதலையைக் குறித்த தன்மைகளை, அதன் உள் கட்டுமானங்களை ஆய்வு செய்வதற்கு இச்செய்திகளை பயன்படுத்த வேண்டும். சொந்த நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏதிலிகளாய் வாழ்வது உலக மாந்த நாகரீகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதைக் கண்டு உலகச் சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும். ஆனால் ஏனோ இதைக் கண்டும் காணாமல் இச்சமூக அமைப்பு இருக்கிறது. ஒருவேளை இந்த கொடிய நிலைப்பாடு உலக சமூக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவில்லையா என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளால்தான் எமது தமிழ் உறவுகள் ஆயிரக்கணக்கில் கொடூரமாய் கொலை செய்யப்பட்டார்கள். அப்படி தடைசெய்யப்பட்ட ஒரு பேரழிவுக் கருவியை சிங்கள பாசிச அரசு பயன்படுத்தி இருக்கிறது. மகிந்தாவின் மனநிலை எவ்வளவு கேவலமான அழிவுமனம் கொண்டதாக இருக்கிறது என்பதற்கு இது சாட்சியமாகும்.




இத்தனை நிகழ்விற்குப் பிறகும்கூட நாம் இன்னமும் மௌனித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், இதற்கு என்னக் காரணம்? ஒன்று, எந்த நிலையிலும் நாம் நமது சுகங்களை இழக்கத் தயாராக இல்லை. இரண்டு, நாம் மரணத்திற்கு அச்சப்படுகிறோம். இந்த இரண்டு காரணங்களே கொடியவர்களின் நிழல் ஆதிக்கங்களை எதிர்த்து நம்மை களம் அமைக்க முடியாமல் தடுக்கிறது. கோழைகளின் ஆயுதம் அடக்குமுறை என்பதை இந்நேரத்திலே நாம் நினைவூட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கோழைகள் தான் கருவிகளைக் கொண்டு மாந்தத்தை நொறுக்குவார்கள். மாந்த நேயம் என்பது இவர்களுக்கு எந்த நேரத்திலும் இருக்காது. மாந்த வாழ்வைக் குறித்த ஒரு மதிப்பீடு இல்லாவிட்டால், மாந்தத்தின்மீது பற்று, மாந்த நாகரீகம் குறித்த உயரிய கோட்பாடு இவர்களுக்கு இல்லாத காரணத்தில் சீரழியும் மாந்தத்தைக் குறித்து இவர்கள் மகிழ்கிறார்கள்.




அவர்கள் சிந்தும் குருதியிலே அவர்கள் குளிக்க விரும்புகிறார்கள். இந்த குருதி பிசுபிசுப்பிலே மனம் மகிழ்கிறார்கள். ஆனால் வரலாற்றின் பக்கங்களை ஆய்வு செய்து நாம் சொல்கிறோம், இந்த கொடியவர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த செயல்கள் குறித்து அவர்களுக்கு வெட்கம் கிடையாது. ஆனால் ஏதோ மாபெரும் ஆளுமையோடு வெற்றிக் கண்டதாக மாந்தத்திற்கெதிரான தோல்வியை வெற்றியாக கொண்டாட திட்டம் வகுக்கிறார்கள். இது நீடிப்பதற்காக அல்ல. அவர்களை நிர்மூலமாக்கவதற்கு என்பதை நாம் நமது செயல்களின் மூலமாக வடிவமைக்க வேண்டும். அச்சப்படாமல் இந்த களத்திற்கு நாம் வரவேண்டும். நமது மனங்களில் நமக்கான விடுதலையைக் குறித்த உயரிய சிந்தனை செழித்து உயர்ந்து நிற்க வேண்டும். இந்த உலகில் நாம் பிறந்தது அடிமைகளாக வாழ்வதற்கு அல்ல. நாம் அடிமைகள் என்பதே நம்மை நம் கேவலப்படுத்திக் கொள்வதாகும். ஆகவே அடிமையின் நிலையிலிருந்து அந்த அடிமையின் ஆற்றலிலிருந்து எழுச்சியோடு அந்த சங்கிலியை உடைத்தெறிந்து மீண்டு வர வேண்டும்.




அதற்கான முயற்சியை தொடங்கவேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம். துன்பப்படுபவர்களுக்காக எவருடைய இதயம் குருதி வடிக்கிறதோ, அவர்களையே மகாத்மா என்பேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நாம் நமது சொந்த உறவுகளுக்காக நமது இதயத்தை குருதி வடிக்கும் இதயமாக மாற்ற வேண்டும். இந்த உளவியல் பக்குவம் நமக்கு வரும்போது நமக்கேத் தெரியாமல் நமது போர்குணம் நம்மை அழுத்தம் கொடுக்க தொடங்கும். இந்த அழுத்தமே மேலும் மேலுமாய் இந்த போராட்டத்தை சிறப்புற வழிநடத்திச் செல்லும். அடக்குமுறையாளர்களும், ஆணவக்காரர்களும் இந்த அகிலத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாது. மகிந்தா என்கின்ற சாதாரண மண் துகள் நமது இனத்திற்கெதிராக கரம் உயர்த்த முடியாது.




உலக நாடுகளின் கருவிகள் ஒன்றிணைந்து நமது விடுதலையை ஒடுக்கிட முடியாது. நமது விடுதலை என்பது காற்றிலே கலந்த ஒரு அளவில்லா ஆனந்த வெளிப்பாடு. விடுதலை என்பது நமது மூச்சுக்காற்றிலே தொடர்ந்து இயங்கும் உயிர் ஆற்றல். இந்த விடுதலைக்காகத்தான் எமது மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை தானமாக தந்திருக்கிறார்கள். இந்த விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஆயிரக்கணக்கான போராளிகள் கடும் சித்ரவதைகளை மகிழ்வோடு தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடுதலை என்கின்ற சுகத்திற்காகத்தான் தமது சுகங்களை ஈகமாக படைத்தளித்திருக்கிறார்கள். ஆக, எந்த நிலையிலும் நம்மை நாம் விடுதலை என்கிற தத்துவத்திலிருந்து தளர்த்திக் கொள்ள வேண்டாம். விடுதலை என்பது நமக்கான தேவையாக இருக்கிறது.




அது நமது இனத்தின் அடையாளத்தை அறிவிக்கும் கருவி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நமது இன அடையாளத்தை அதன் உள்ளடக்கத்தை இனத்தின் வளர்ச்சியை, நமது இன குறிப்புகளான மொழி, இலக்கணம், இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை இந்த அடிமைத்தனம்தான் அழுத்தி கொல்ல முயற்சிக்கிறது. ஆகவே, நாம் வெடித்துச் சிதறவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். கடந்த 30 ஆண்டுகளில் எமது தேசிய தலைவரின் மகத்துவமான தலைமை மாபெரும் மாற்றத்தை தமிழீழ மண்ணிலே பதிவு செய்திருக்கிறது. இதன் அடுத்த அத்தியாயத்தை நாம் தொடங்க இருக்கிறோம். எந்த ஒரு வரலாற்று நகர்வுகளானாலும் அவை ஒரு இடத்தில் ஓய்வெடுத்து மீண்டும் புறப்படும். அப்படி புறப்படும் காலத்திற்கும் ஓய்வெடுக்கும் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்பது நாம் சிந்திக்கும் காலம். இந்த சிந்திக்கும் காலத்திலே நமக்குள் செயல் ஊக்கம் பொங்கி வழிய வேண்டும். நமது விடுதலை குறித்த தேவையை அதன் உள்வெளி அரங்குகளை உலகெங்கும் பரப்புரையாக்க தொடர்ந்து நாம் முயற்சிக்க வேண்டும்.




எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அங்கெல்லாம் நமக்கான நியாயத்தை எடுத்துரைக்க வேண்டும். ஏன் நமக்கு விடுதலை தேவையாக இருக்கிறது? என்பதைக் குறித்த வரலாற்றை நாம் சந்திக்கும் அந்நியர்களிடம் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். நமக்கான விடுதலை என்பது நமது கடந்தகால உறவினர்மீது தொடுக்கப்பட்ட அநீதியால், அடக்குமுறையால் முளைத்தது என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். நமது சொந்த மண்ணில் நாம் வாழ்வதற்கான தீர்வை அந்நியனிடமிருந்து நாம் போராடிப் பெற வேண்டிய அவசியம் குறித்து நாம் நம்மீது அக்கறை கொண்ட வேற்றுஇன மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும். இது எங்களுடைய தாயக மண், எங்களுடைய மூதாதையர் இந்த மண்ணிலேதான் பயிர் செய்து உயிர் வளர்த்தார்கள்.




இந்த மண்ணிலேதான் எமது வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். தமிழீழ மண் என்பது எங்களின் தாய் மடியைப் போன்றது. அந்த மண் எங்களுக்கு உணவூட்டியது, மகிழ்ச்சியூட்டியது, மனநிறைவை தந்தது, எங்களுடைய சந்ததியை தலைமுறைத் தலைமுறையாக பாதுகாத்து வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இடையில் வந்த சிங்கள பாசிச வெறியர்கள் எமக்கான அடையாளங்களை பறித்தெடுத்தது மட்டுமல்லாமல், எங்களது மண்ணையும் பறித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்கின்ற உண்மையை இந்த உலகிற்கு தெளிவாக நாம் உணர்த்த வேண்டும். எந்த நிலையிலும், யாரிடமும் கையேந்தி நின்று நமது உரிமையை பெற வேண்டாம். நாம் போராடியே நமது உரிமைகளை பெற வேண்டும். போராட்டத்தால் மட்டுமே உரிமைகள் நமக்கு நிலையாக கிடைக்கும். அந்த உரிமைக்கான நிலையை எட்டுவதற்கு காலம் தாமதிக்காமல் உடனே பணியாற்ற வேண்டும். இல்லையெனில் நாளை நாம் நமது மண்ணை மட்டுமல்ல, நமக்கான அடையாளத்தையும் இழக்க நேரிடலாம். நமது அடையாளம் என்பது நமது மண். அந்த மண்ணை மீட்டெடுக்க எந்த விலை கொடுக்கவும் நாம் தயாராக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக