புதன், 26 மே, 2010

கூட்டமைப்பின் நோக்கம் என்ன?

அரசியலுக்கான சூழல் எம்மைத் தேடிவரும் என்றிருக்காமல் வருகின்ற சூழலை அரசியலாக்குவதே ஒரு சிறந்த அரசியலாளனின் வெற்றிக்கான பாதையாகும். சூழலை அரசியலாக்கும் செயற்பாடு போரின் இறுதிக்காலத்தில் போதிய அளவு கைக்கொள்ளப்படாமையே எமது போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணம் என்கின்ற குறிப்பிட்ட அளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.
 இவற்றில் எவ்வளவு உண்மை உள்ளது. அல்லது அந்தக் கருத்து முற்றிலும் தவறா என்பதை தற்போது ஆராய்வதனை விடுத்து அதே போன்றதான மற்றொரு வகையான தற்போதைய சூழலுக்கு வருவோம்.


வன்னிக்கான 'சுற்றுப் பயணத்தினை' மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி பலரது பாராட்டையும் பெற்றது. கூட்டமைப்பு முகாம்மக்களைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லை என்ற தொடர்குற்றச்சாட்டுக்களை கடந்த தேர்தலின் போது எதிர்கொண்டிருந்தது.
ஆனாலும் தேர்தலில் வென்ற பின்னர் வன்னி மக்களைச் சந்திக்க கூட்டமைப்பு மேற்கொண்ட முயற்சி பாராட்டைப் பெற்றதில் தவறில்லைத்தான். ஆனாலும் கூட்டமைப்பினைத் தலைமை தாங்கும் அரசியல் வாதிகள் மிக முதிர்ந்த அரசியல் கலாசாரங்களுடன் வாழ்ந்தவர்கள். ஆனால் அவர்கள் தமக்கு தாமாக வாய்த்த அரசியல் செயற்பாட்டு நழுவ விட்டமை பற்றிய கசப்பான உண்மைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகின்றோம்.
வன்னி மக்களைச் சந்திக்க கூட்டமைப்புச் சென்றபோது முகாம் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் வெளிவரும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் முகாமிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தரிக்காமல் கூட்டமைப்பு அங்கிருந்து வெளியேறியிருந்தது மட்டுமல்லாமல், ஏனைய முகாம்களுக்குச் செல்லாமலும் தவிர்த்தது தான் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது.


உண்மையில் கூட்டமைப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்வியை மேற்குறித்த சம்பவம் எழுப்புவதனைத் தவிர்க்க முடியாததாகின்றது. வன்னியின் மக்கள் சென்ற பகுதிகளைப் பார்வையிடுவதற்குச் செல்வதற்கு பாரிய அளவு தடைகள் இல்லை முயற்சித்தால் மக்கள் உள்ள பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்குமோ இல்லையோ, கூட்டமைப்பினருக்குத் தெரிந்திருக்கும் என நம்புகின்றோம். ஆகவே ஜனாதிபதியின் பிரத்தியேக செயலரிடம் லலித் வீரதுங்கவிடம் அனுமதி பெற்ற கூட்டமைப்பினர் குறிப்பாக பிரதானமாக முகாம் மக்களைச் சந்திப்பதையே பிரதான இலக்காக கொண்டிருப்பர் என அனைவரும் நம்பியிருந்தனர்.
ஆனால் அந்த அனுமதியின் பின்னர் முகாம் மக்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட விடயத்தினை ஒரு சிறிய அறிக்கையுடன் கூட்டமைப்பு கைவிட்டது தான் மிகக் கவலைதருகின்ற விடயமாகும்.
சாத்வீகப் போராட்டத்தில் கை தேர்ந்தவர்கள், ஆயுதப் போரில் கை தேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், ஊடகப் போராளிகள், சட்டவல்லுனர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டியதாகக் காணப்படுகின்ற கூட்டமைப்பு முகாம் மக்களைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் வரையில் முகாம் வாசலிலேயே ஏன் தரித்திருக்க முடியாது? அந்தக் களத்தினை அரசியலாக்க அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை?, பிபிசியின் செய்தியாளர் ஒருவரை கூட தமது பயணத்தில் இணைத்திருந்த கூட்டமைப்பினால் அந்தக் களத்தினை ஏன் அரசியல் களமாக மாற்றமுடியவில்லை.
வன்னிக்கான பயணத்திற்கான தீர்மானிக்கப்பட்ட அனைத்து நாட்களையும் முகாம் வாசலில் ஏன் அவர்களால் கழித்திருக்க முடியாது? அந்த இடத்தில் உண்ணாவிரதத்தினையோ, அல்லது வேறு விதமான போராட்டத்தினையோ ஏன் கூட்டமைப்பினால் முன்னெடுக்க முடியவில்லை என்ற பல கேள்விகள் எழுகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமது மக்களைப் பார்வையிட அனுமதிக்காமைக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் என்ற செய்தி ஐ.நாவரை எட்டியிருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு கைக்குள் வந்தும் அதனை கூட்டமைப்பு உதறியதோ? அல்லது அந்த உத்தியை சிந்திக்காமலேயே கைவிட்டுவிட்டதோ? என்பது தான் புரியவில்லை. அரசினால் அனுமதி மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதன் பின்னரும் அதே அரசுடன் நல்லிணக்க சமிக்ஞை வெளியிடுவதால் பயனில்லை என்றே கருதமுடிகின்றது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் முகாம்களிலேயே முடங்கிக் கிடக்கவேண்டும் என்று தேர்தலுக்கு முன்னர் றிசாட்டும், கனகரட்ணமும் நேரடியாக விடுத்த மிரட்டலை மீறியும் கூட்டமைப்புக்கு வாக்களித்து, அதற்காக அதன் பின்னர் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, நீர் இல்லாமல் கண்ணீர்விட்டு, முகாமில் மலமும், குப்பைகளும் எடுக்கப்படாமல் முகாமே நாற்றமடைய வைக்கப்பட்டு என எல்லாம் நடந்தேறி சில மாதங்கள் ஆகாத நிலையில் கூட்டமைப்பு தமக்கான வாய்ப்பை ஏன் நழுவ விட்டது? ஒரு நாள் குறைந்தது ஒரு நாள் அந்த இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருந்திருந்தால் கூட அந்த மக்களின் மனதில் ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை, ஒரு உத்வேகம் பிறந்திருக்கும் என்பது சத்தியமான விடயம்.


இந்த இடத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது, கொழும்பின் மூத்த அரசியல்வாதி ஒருவர் அவர் மகிந்தவின் நண்பரும் கூட ஒருமுறை மகிந்தவைச் சந்தித்த போது வடக்கு கிழக்கினை சம்பந்தனிடம் கொடுத்தால் சில வருடங்களில் முழுமையாக அபிவிருத்தி செய்துவிடுவார் எனத் தெரிவித்தாராம். இதற்கு மகிந்த சொன்னாராம் 'சம்பந்தரை என்னிடம் வரச் சொல்லுங்கள் நான் மந்திரி பதவியே கொடுக்கிறேன்' என்று. இதனை பெருமையாக சிலர் சொல்லிப் புகழாங்கிதம் அடைந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள்.


சரி, அது இருக்க மற்றைய முக்கிய விடத்திற்கு வருவோம்,
வன்னி மக்களின் பயணத்தின் போது முடிந்தளவில் பெருமளவு மக்களைச் சந்தித்த கூட்டமைப்பினர் இன்னொரு மிக முக்கியமான விடயத்தினை முன்னெடுப்பார்கள் என்று தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதாவது துயிலும் இல்லங்கள் வரலாற்றுச் சின்னங்கள் அமைந்திருந்த இடங்களைச் சென்று தரிசிப்பது அல்லது பார்வையிடுவது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.


சர்வதேச ரீதியில் எதிரிகளாய் இருந்தால் கூட இறந்தவர்களை உரியவகையில் காக்கவேண்டும் என்பதே மரபு. ஆனால் 'எமக்காக அவர்கள் அவர்களால் நாங்கள்', என்ற எண்ணம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்திருந்தால் அவர்கள் துயிலும் இல்லங்களுக்கும் ஏனைய வரலாற்று இடங்களுக்கும் சென்றிருப்பார்கள் என வன்னியில் மீளக்குடியேறிய மக்கள் பேசிக் கொண்டதாகக் கேள்வி.
ஒரு வகையில் பார்த்தால் அது கூட உண்மை போலத்தான் தோன்றுகின்றது. காரணம் தனியே ஒரு உறுப்பினர் ஒரு நினைவிடத்திற்குச் செல்லும் போது பிரச்சினைகளை எதிர்கொள்வதில் நெருக்கடிகள் எழலாம். ஆனால் அனைவரும் செல்லும் போது எந்த நெருக்கடிளும் எழிதில் நெருங்காது என்பது எமக்கே புரியும் பொழுது மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் எழவில்லை என்ற கேள்வி கவலையுடன் எழுகின்றது.
சில ஊடகர்கள் இது தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பயணத்தின் போது தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு நழுவல் பதில்கள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் பொருமிக்கொண்டார்கள். பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர் துறந்த மாவீரர்கள் பற்றியோ, துயிலுமில்லங்களுக்குச் செல்வது பற்றியோ உள்ளுக்குள்ளே எண்ணிக்கொண்டாலும் அதற்கு சில தடைகள் உணரப்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் பேசிக்கொண்டன. ஆனால் அந்தத் தடைகள் என்ன என்பதையும் விரைவில் வெளிப்படுத்தக் காத்திருக்கின்றோம்.


நிற்க,
கூட்டமைப்பின் பயணத்தின் அடுத்த கட்டம் என்ன? என்ற கேள்வியை நாம் முன்வைக்கின்றோம். வன்னியின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் போது அந்த மக்களின் வலி, அவர்களின் அன்றாட நெருக்கடிகள், அவலங்கள் அனைத்தையும் பார்த்தால் கண்ணீர் விடாதவர்கூட கண்கலங்குவர் இது தான் வன்னியின் நிலை. இந்த நிலையில் அங்கு சென்ற கூட்டமைப்பினர் சொல்வதை விட செய்வதையே அதிகரிப்பர் என்ற நம்பிக்கை அங்கிருக்கின்ற மக்கள் மத்தியில் தோன்றியிருப்பதாக தெரியவருகின்றது.






இதனை எந்தளவிற்கு ஆரோக்கியமாக கூட்டமைப்பு முன்னெடுக்கும் என எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இதன் அடிப்படையில் மக்களுக்கான பொதுவான உதவும் அமைப்பு ஒன்றினை கூட்டமைப்பு பதிவு செய்வதற்கான முனைப்புக்களை தேர்தல் முடிந்த நாளில் இருந்து முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது. அந்த நடவடிக்கையினை தனிப்பட்ட குறித்த ஒரு சிலர் முன்னெடுப்பர் அவர்கள் தான் அதனைச் செய்யவேண்டும் என்றிராது கூட்டமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து அந்த நடவடிக்கையினைத் தீவிரப்படுத்த முன்வரவேண்டும்.






வன்னியின் தற்போதைய நிலை என்ன என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த மக்களுக்கு உதவுவதற்கு அண்மையில் யாழின் முன்னணி வர்த்தகர்கள் சிலர் அவர்களைத் தெரிந்தவர்களின் ஏற்பாட்டில் சென்று சிலருக்கு குறித்த தொகைகள் பணம் வழங்கி அதனை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என சொல்லித் திரும்பினார்களாம்.






அந்தப் பணத்தினை பெற்றுக்கொள்ளும் போது பெற்றுக்கொண்டவர்களின் கண்கள் பனித்ததை என்றென்றும் மறக்க முடியாது என்று கண்கலங்கினார்களாம் வர்த்தகர்கள்.
இவ்வாறாக யார் யாரோ அந்த மக்களின் வலி தெரிந்து முடிந்தவரையில் சாத்தியமான வழிகளில் உதவத்தாயார் இருக்கிறார்கள். எனவே கூட்டமைப்பினர் மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என பிரபல்யமாக விளங்குபவர்களும் வன்னி மக்களின் கண்ணீர்களைத் துடைக்க கைகொடுக்க முன்வரவேண்டும்.

1 கருத்து: