சனி, 1 மே, 2010

பொறுப்புக் கூறவேண்டிய முழுப்பொறுப்பும் படையினரிடமே...............

விடுதலைப்புலிகளை போரில் வென்ற படையினருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கடத்தல், கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களை பூரணமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை நினைக்கும் போது வெட்ட வெளியில் நின்று தலையில் அடித்துக் கத்திக் குழற வேண்டும் போல் உள்ளது. யாழ். குடாநாடு 1995ஆம் ஆண்டில் இருந்து படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருப் பதை எவரும் மறக்கவும் மறுக்கவும் முடியாது. உயர்பாதுகாப்பு வலயங்கள், காவலரண்கள், சோதனைகள், ஊரடங்கு உத்தரவு, அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என இன்னோரன்னவை எங்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன. இவற்றினால் எத்தனையோ கஷ்டங்களை தமிழ் மக்கள் அனுபவித்ததை எளிதில் மறந்து விடமுடியாது. நிலைமை இதுவாக இருக்கும் போது போருக்குப் பின்பான சூழ்நிலை
ஆரோக் கியமானதாக உள்ளதா என்று ஒரு கணம் சிந்தித்தல் அவசியம். அரசைப் பொறுத்தவரை இந்த நாட்டு மக்கள் அனைவரையும் சமகண் கொண்டு நோக்க வேண்டும். சமகண் கொண்டு அரசு நோக்குவதென்பது சட்டத்தால், நீதி பரிபாலனத்தால், படைத்தரப் பால் எனப் பல்வகை அரச பரிபாலனங்களுடன் தொடர்புபட்டதாகும். எனினும் இவை தமிழ் மக்கள் விடயத்தில் எந்தளவு தூரம் நியாயத்துவம் உடையதாக வுள்ள தென்பதை ஒரு கணம் சிந்தித்தால் உண்மை புலப்படும். உதாரணத்திற்கு தென்பகுதியில் இருந்து யாழ். குடாநாட்டிற்கு வருகை தருகின்ற சிங்கள மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளில் படைத்தரப்பும் அரச அமைப்புகளும் ஈடுபட வேண்டியதாக உள்ளது. அதேநேரம் யாழ்ப்பாண மக்கள் தென்பகுதிக்குச் சென்றால் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை படையினரோ கொழும்பு மாநகர சபையோ செய்வதில்லை. ஆக, மிஞ்சினால் பொலிஸார் தங்கள் பொலிஸ் நிலையத்தில் பூட்டிய அறைக்குள் இடம் தருவர். அவ்வளவுதான். நிலைமை இதுவாக இருக்கும் போது படையினரிடம் பாரபட்சம் கிடையாதெனக் கூறுவது எவ்வகையிலும் பொருத்தமில்லை. எதுவாயினும் யாழ். குடாநாட்டில் இடம்பெறும் கடத்தல், கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்றவற்றை தடுத்து நிறுத்தும் பெரும் பொறுப்பு படையினருக்கே உண்டு. கடத்தலுக்கும், படையினருக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதானது, பிரச்சினையில் இருந்து மக்களை விடுவிக்க எவ்வகையிலும் உதவமாட்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக