சனி, 1 மே, 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதலாவது தேர்தலானது....

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதலாவது தேர்தலானது எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் நடைபெறுகின்றது. தாயகத்தில் இழந்துபோன தமிழர்களின் அரசுரிமையை நாடு கடந்தும், பல்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்தும், நாடு கடந்த தமிழீழ அரசாக அமையப்போகும் இக்கட்டமைப்புக்கான தேர்தல் என்பது தமிழர்களை பொறுத்தவரை முக்கியமானது. ஒரு நாட்டின் நடைமுறை அரசுக்கான அடித்தளம் என்பது குறித்த நிலப்பகுதி தனது ஆளுகைக்குள் கொண்டிருப்பதிலேயே தங்கியுள்ளது. எப்போது நில ஆளுகை இல்லாமல் போகின்றதோ அப்போதே ஒரு நாட்டின் அரசுக்கான அடித்தளம் இல்லாமல் போய்விடுகின்றது.
அவ்வாறான நிலைமைகளில் குறித்த அரசானது குறித்த நாட்டை கடந்த நிலையில், வேறு நாடுகளில் தனது அரசுக்கான கட்டமைப்பை அமைத்துக்கொள்ளலாம் அல்லது இழந்துபோன அரசை மீளப்பெறுவதற்கான முயற்சிகளை குறித்த நாட்டில் வாழ்ந்தவாறே முன்னெடுக்கலாம். அவ்வாறான வழிமுறை அரசியல் ரீதியான மென்முறையானதாகவோ அல்லது வன்முறையானதோ இருக்கலாம். இரண்டாவது வழிமுறைக்கான சாத்தியங்கள் இல்லாதபோது அல்லது அதற்கு பொருத்தமான சூழ்நிலைகள் அமையாதபோது முதலாவது வழிமுறை பொருத்தமானதாக தெரிவுசெய்யப்படுகின்றது. ஈழத்தமிழர்களை பொறுத்தவரையும் தாயகத்தில் வாழ்ந்தவாறு அடிப்படை உரிமைகளை பற்றியே கதைக்கமுடியாத நிலையில் அவர்களுக்கான அரசியல் உரிமைகளை பற்றி கதைப்பதற்கான அரசியல் வெளி இப்போது இல்லை. அத்தோடு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மென்முறை தழுவிய போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டியதும் தவிர்க்கமுடியாதது. இவ்வாறான நிலைமைகளே நாடு கடந்த அரசு அமைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குகின்றது. இங்கு நாடு கடந்த அரசு (Transnational Governement) என்பதையும் புறநிலை அரசு( Exile Governement) என்ற இருவேறு விதமான வெளியக அரசுக்கான அடிப்படைகளை புரிந்துகொள்ளல் முக்கியமானது. இருவேறு வெளியக அரசுகளும் பெரும்பாலான பொதுப்பண்புகளை கொண்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டுள்ளன. புறநிலை அரசை பொறுத்தவரை குறைந்தது ஒரு நாடாவது புறநிலை அரசினை அங்கீகரிக்கவேண்டும். வரலாற்றின் பக்கங்களில் புறநில அரசுகளே அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். உதாரணமாக சீனாவால் திபெத் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டபோது தலாய் லாமாவுடன் புலம் பெயர்ந்த மக்கள் இந்தியாவில் புறநிலை அரசை நிறுவி செயற்பட்டுவருகின்றார்கள். தலாய் லாமாவின் நிழல் நிர்வாகத்தின் கீழ் சுமார் ஒரு இலட்சம் மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். திபெத்திய புறநிலை அரசை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசை பொறுத்தவரை தற்போதைய சூழலில் உடனடியாக எந்தவொரு நாடும் வெளிப்படையாக அதனை அங்கீகரிக்ககூடிய சூழல் இல்லை. அதற்கான படிமுறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும்போதே அதற்கான காலம் கனியும். முக்கியமாக நாடு கடந்த அரசுகளின் பலம் என்பது புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவிலும் தாயக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைவதிலுமே தங்கியுள்ளது. தமிழர்களின் முழுமையான பங்களிப்புடன் அமையும் அவ்வாறான கட்டமைப்பில் சர்வதேசம் விலகிநிற்க முடியாத நிலைமை உருவாக்கப்படவேண்டும். அதேவேளை வழமையான புறநிலை அரசுகளை போன்று அல்லாமல் தற்போது புலத்து தமிழர்களால் கட்டமைக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசானது பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் ஆணை பெறப்பட்டு அதனூடாக தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் மூலமே கட்டமைக்கப்படுவது புதிய முயற்சியாகவும் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் பெறும். இவ்வாறான அரசானது குறிப்பாக ஒரு நாட்டுடன் மட்டுப்படுத்தப்படாமல் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒன்றிணைக்கப்பட்ட அரசாக அமைவது அதற்கான சாத்தியமான சூழலை உருவாக்கும். ஒரு நாட்டின் இறைமையானது அந்நாட்டில் வாழும் மக்களின் மூலமே கிடைக்கின்றது. அந்நாட்டில் வாழும் மக்கள் அங்குள்ள அரசை தமது அரசாக எண்ணாதவரை அது நடைமுறையில் அவர்களுடைய அரசாக இருக்கப்போவதில்லை. அதாவது தனியே சிங்கக்கொடியை ஏற்றி அனைவரையும் அணிவகுக்க விடுவதன் மூலம் தமிழ் மக்கள் சிங்கள அரசை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் தமது இறைமையை வெளிப்படுத்தமுடியாத சூழலில் தமிழ் மக்கள் இருக்கும்போது உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழீழ தேச அடையாளங்களை தாங்கிய அரச கட்டமைப்பு இயங்கும்போது அது தாயகத்தில் வாழும் மக்களின் ஏக்கங்களுக்கு ஆறுதலான விடயமாக நிச்சயம் அமையும். நாடு கடந்த தமிழீழ அரசென அமைந்து தமிழீழ தேசிய கொடியின் கீழ் அணிவகுக்கப் போகும் தமிழ் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடியுமா? இந்த அரசால் செய்யக்கூடிய பணிகள் என்ன? இதனால் தாயகத்தில் வாழும் மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்துவிடப்போகின்றது? இவ்வாறான கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் புலத்து தமிழர்களை ஒரு தனித்த இனப்பிரிவாக கண்டுகொள்ளும் தேசங்கள் அவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய தேவை நிச்சயம் வரும். ஏனென்றால் இவை சனநாயக கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள். அதனால்தான் இப்போது சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடத்தக்களவில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் பற்றி கரிசனை செலுத்துகின்றன. அத்தோடு அவ்வாறான பிரதிநிதிகள் முன்னர் நடந்த சில சந்திப்புக்கள் போன்று அல்லாமல் மனிதாபிமான விடயங்கள் பற்றிய விடயங்களை கதைக்கும்போது அவற்றை சரியான முறையிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைக்கும்போது உறுதியாக தமிழர்களின் தீர்வு என்ன என்பதை தெளிவாக சொல்லக்கூடிய நிலைமை உண்டு. ஏனென்றால் தமிழ் மக்கள் அதற்கான ஆணையை தெளிவாகவே சொல்லியிருக்கின்றார்கள். அதன் அடித்தளத்தில்தான் அதனை ஆணையாக ஏற்று செயற்படுவார்கள் என கருதித்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக பலரை தெரிவுசெய்யப்போகின்றார்கள். போர் நெருக்கடியான கட்டத்தில் இருந்தபோது, விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் வேறு என்பது போலவும் தமிழர்களின் வாழ்வுரிமை வேறு என்பது போலவும் பல கனவான்கள் சர்வதேச அரசுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை செய்திருந்தார்கள். தற்போது அவ்வாறான சூழ்நிலை உருவாகாதவாறு சரியான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும். அவர்கள் தாம் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவும் – அனைத்து மக்களின் வாக்குகள் மூலமும் நடந்து முடிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மூலமும் – அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அமையப்போகும் நாடு கடந்த தமிழீழ அரசில் தமிழீழத்திற்கான என்ன கட்டுமானங்கள் அமையப்போகின்றன என்ற தேடல் ஒவ்வொரு தமிழர்களிடமும் உள்ளது. தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளே அதனை முடிவுசெய்யவுள்ளனர். எனினும் வெளியக அரசுகள் ஏற்படுத்தப்படும்போது நடைமுறையிலுள்ளது போல தமிழீழ அரசுக்கான அனைத்து துறைகளும் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அதன் மூலம் தாம் தனித்தவர்கள் அல்ல என்பதையும் தமிழீழ தேசத்தின் ஒரு அங்கம் என்பதையும் அனைத்து தமிழர்களும் உணர்ந்துகொள்வார்கள். அவ்வாறான துடிப்பே தமிழீழ தேசத்திற்கான ஆன்மாவை உயிர்த்துடிப்புடன் வைத்துக்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக