ஞாயிறு, 2 மே, 2010

பத்துத் தடவை பாடை வராது


பத்துத் தடவை பாடை வராது பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா செத்து மடிதல் ஒரேஒரு முறைதான் சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா! முத்தமிழோடு மோதினார் பகைவர் முடங்கிக் கிடப்ப தென்ன நீதி குத்தும் கணைகள் குண்டுகள் வரட்டும் குருதி பெய்யடா! கொட்டும் முரசே!! ஆற்றல் அடையாய்! ஆண்மைத் தமிழனே அடநீ என்னடா அடங்கி நின்றனை சோற்றுப் பானையும் நாமும் ஒன்றோ? சும்மா வயிறு நிரப்பவோ வந்தோம்? மாற்று வீரன் மருளத் தமிழன் மானப்போர் செய்திட மாட்டானோ? நாற்றிசையும் நடுங்க எழடா! நடந்துபோ செங்குருதி நடுவிலே! அன்னைத் தமிழோ அழுது கிடந்தார்! அருந்தமிழ் நாடோ அழுந்திக் கிடந்தது முன்னைச் சேர சோழ பாண்டியர் மூச்சு முடிந்து போச்சோ தமிழா? உன்னைத் தமிழனாகப் பெற்றாள் ஊட்டி வளர்த்த முலைப்பால் எங்கடா? தென்னைக் குலைகள் என்னப் பகைவர் சென்னி திருகடா! செருவில் எழுகவே! விடுதலை என்ன மலிவு விலையோ? வீதிக்கடையில் விற்பனைக் குண்டோ? புடலங்காயோ விடுதலை? போடா! போர்க்களம் ஆடப்போ! அதுகிடைக்கும்! கொடுவிலையாகக் குருதியும் ஆவியும் கொடடா உன்தலை ! கொள்க விடுதலை! அடநாம் மானத் தமிழர் அல்லவோ! ஆளப் பிறந்தோம்......ஆடடா களத்தே...!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக