ஞாயிறு, 2 மே, 2010

தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை......


தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை நெடும்பயணத்திற்குத் தயாராகிறது ஆயிரக்கணக்கில் நதிகளும் மலைகளுமாய் நடந்து தடைகளை எளிதில் கடந்தனர். மலைமுகட்டிலிருந்து பாம்புகள் போல் சீற்றலைகளோடு ஐந்து அருவிகள் கீழிறங்கி விழுகின்றன. மலையின் மச்சமாய் கோபுரம்போல் டாம்பீகமாய் உமெங் மலைச்சிகரங்கள் செங்குத்தான மலைகளின் மீது வெப்ப மேகங்கள் படர்கின்றன. அலையலையாய் தங்க மணல் விழும், இரும்புச் சங்கிலிப் பாலத்தின் கண்களின் வழியே தாது நதி குளிர்ச்சியாய் வழிந்தோடுகிறது. ‘மின்’ தொடர் மலைகளின் மீது பல மைல்கள் பனிபடர்ந்து உடையலங்காரம் நடக்கிறது. பெரிதாய் சிரித்தவாறு எங்கள் செஞ்சேனை வீரர்கள் இவற்றை எளிதாய்க் கடந்து ஏகினர் காண். -தோழர் மாவோ (1940) எமது இனிய உறவுகளே! மீண்டும் ஒருமுறை இந்த கவிதையை வாசியுங்கள்.
தோழர் மாவோ செஞ்சேனையை வழிநடத்தியபோது தமது மதிநுட்பத்தை மட்டுமல்ல, தமது மனதையும் படையோடு இணைத்து நடத்திச் சென்றார். செஞ்சேனை வீரர்கள் சிரித்தவாறு சென்றார்கள் என்ற வரிகளே எமது புலிகளின் முகம் புன்னகைப்பதை உங்களால் உணர முடியும். எமது தேசிய ராணுவம் வரலாற்றின் அசைக்கமுடியாத உணர்வு பிம்பம். அவர்களின் ஒவ்வொரு அசைவும் மண்ணின் துகளோடு பின்னி பிணைந்திருக்கும் உயிர் துளிகள். தமது இன்னுயிரை எதற்கும் விலைபோகாத தமது மானத்தை அவர்கள் இந்த மண்ணுக்காக காத்து நின்றார்கள். மண்ணின் மானமே தமது மானம் என்கின்ற எண்ணம் அவர்களில் ஓங்கி ஒளித்துக்கொண்டிருந்தது. மண்ணை இழப்பது அவமானம் என்று அவர்களின் உள்மனம் உணர்த்திக் கொண்டிருந்தது. கடும் காடுகளிலும் சீறி வந்த தோட்டாக்களின் சிதறல்களிலும் அவர்கள் சிரித்த முகமாய் அதை எதிர்கொண்டார்கள். இன்று தமிழ்நாட்டிலும் மற்றும் சில எதிர்மறை தளங்களிலும் நின்றுக் கொண்டு எமது தேசிய இயக்கத்தை, தமிழ் மானத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் நமது மானத்தின் அடையாளங்களை சிலர் அடங்காத சில வார்த்தைகளால் அடக்கி வைக்க முயல்கிறார்கள். ஒலியைக் காட்டிலும் வேகமான எமது வீரர்கள் மொழியை காக்க, தம்மை நிதானித்தார்கள். நிறுத்தினார்கள். ஏகிய துப்பாக்கி தோட்டாக்களில் அவர்களின் இயக்கங்கள் புதைந்திருந்தது. வெடித்து சிதறிய தோட்டாக்களின் வேதியல் பொருட்களில் அவர்களின் இதயங்கள் இணைந்திருந்தது. எதனையும் எதிர்கொள்ளும் துணிவை மனதில் மட்டுமல்ல, உடலிலும் கொண்டிருந்த உத்தம வீரர்கள் அவர்கள். நமது மண், நமது மானம், நமது மொழி, நமது அடையாளம், நமது எதிர்காலம் இவைகளே குறித்தே அவர்களின் கவலை. அவர்களை குறித்து எப்போது அவர்கள் கவலைப்பட்டார்கள். கட்டளைக்கு காத்திருந்தார்கள். தலைமையிடமிருந்து தாம் சாவதற்கு கட்டளை வருமா என்று அவர்கள் கண்களை கட்டளை வரும் திசை நோக்கி திருப்பி இருந்தார்கள். தாம் செத்துப்போக வாய்ப்பு தராத தலைமையை அவர்கள் விமர்சித்தார்கள். தாம் செத்துப் போவதின் மூலம் புதிய வித்துக்கள் தோன்றுவதை அவர்கள் நேசித்தார்கள். செத்துப் போக வாய்ப்பு வேண்டி வரிசையில் நின்ற வரலாற்று தோற்றங்கள் எமது தேசிய ராணுவம் என்னும் விடுதலைப் புலிகள். வரலாற்றில் அவர்களை வாசித்து வியந்து வியந்துபோகும் காலம் இருக்கிறது. நாளை அந்த தேசப் புதல்வர்களை உலகெல்லாம் ஒன்றுகூடி ஆராதிக்கப்போகிறது. அந்த மாபெரும் தற்கொடையாளர்களை படித்து தம்மை காத்துக் கொள்ளப்போகிறது. அவர்களின் வீரம் காற்றுக்கு வேகத்தை சொல்லித்தரும். கடலுக்கு அலையை சொல்லித்தரும். நதிக்கு கிளையைச் சொல்லித்தரும். அவர்களின் தியாகம் தீக்கும் கூட தித்திக்கும். அவர்களின் சிரிப்பு காற்று விரும்பி சுமக்கும் பொதியாக இருக்கும். வீரப்புதல்வர்களின் வரலாற்று நூல்கள் நாளை தலைமுறையின் கரங்களிலே வேத நூலாய் வாசிக்கப்படும். அவர்களின் சிரிப்பும் சிந்தனையும் நம் எதிர்கால குழந்தைகளின் ஏக்கப் பெருமூச்சுக்களாய் மாறி நிற்கும். மாறாத பற்றுக் கொண்ட அந்த மகத்தான பண்பாளர்களை என்னச் சொல்லி அழைக்க? எப்படி சொல்லி அழைக்க முடியும்? அவர்கள் மனிதர்களா? மனிதர்களை தாண்டிய மந்திர மனம் படைத்தவர்கள் அல்லவா? தமது மண்ணை உயிரை விட மேலாக நேசித்த மண்ணின் உயிர் துளிகள் அல்லவா? அவர்கள் தம்மை இழப்பதின் மூலம் ஒரு புதிய அடையாளத்தை இந்த உலகிற்கு விட்டுச் சென்றார்கள். அவர்களின் புரிதலும், செயல்களும் இந்த உலகிற்கு புதிய தத்துவங்களாய் மாறி நின்றது. அவர்கள் நடை இந்த கிளைகளுக்கு நடைப்பழக்கித் தந்தது. புலிகளுக்கும் வீரத்தை போதித்த தமிழ் புத்திரர்கள் எங்கள் தங்க தமிழ் புலிகள். நிகழ்வுகளைக் கண்டு நின்று யோசிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை. அந்த ஒரு நொடியில் எம் தேசம் விடிவு பெறாத என்பதற்காக தம்மை வெடித்து காற்றோடு கரைந்துபோன கற்பூர தியாகங்கள் எம் வீர வித்துக்கள். அவர்களின் வாழ்வும் அவர்களின் செயலும் எமது எதிர்காலத்தின் ஏக்கங்களை உண்மையாக்கும் உரைக்கல்லாய் அமைந்தது. சொல்லில் அல்ல, செயலில் சொல் உடுத்த செயல் வீரர்கள். தலைமையின் கட்டளையை உவப்போடு ஏற்ற வீர தலைமுறையின் முதல் அத்தியாயங்கள் அந்த தவப்புதல்வர்கள். வரலாறெங்கும் வாசித்தறியாத புதிய வரிகள். வரலாற்றில் தேக்க நிலை காணாத தெம்மாங்கு பாடல்கள். நிழல்களை நிஜங்களாக்கும் உண்மையின் சொற்றொடர்கள் எங்கள் தேசத்தின் தியாக தீபங்கள். எமது விடுதலையைத்தவிர அவர்களின் மூளை செல்களில் வேறு பதிவு ஏதும் இல்லை. எமது மொழியை காப்பதைதவிர, சிந்தனையில் புதிய சொற்கள் எதுவும் இல்லை. எமது தலைவனை நேசித்ததை தவிர, அவர்கள் நேசிப்பதில் புதிய தொன்றில்லை. தலைவனின் சிரிப்பை தலைவனின் சொல்லை, தலைவனின் விரல் அசைவை அவர்கள் உற்று நோக்கினார்கள். எங்கள் தலைவா, எங்களை சாக விடுங்கள். எம் இனத்தை வாழ வைக்க என்று தலைமையை நோக்கி குரல் எழுப்பிய உறுதியின் கோபுரங்கள் எங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்களின் அசைவுகள், அவர்களின் சிரிப்புகள், அவர்கள் நடந்த நடை, அவர்கள் உதிர்த்த வார்த்தை ஒவ்வொன்றிலும் தமிழ் மனம் கமழ்ந்தது. அவர்கள் சிந்திய சிரிப்பொலியையும், அவர்கள் பேசிய வார்த்தைகளையும் கனத்த இதயத்தோடு காற்று இன்னும் சுமந்துக் கொண்டு திரிகிறது. அவர்கள் துயிலும் இல்லங்களை அடையும்போது, அந்த காற்று சொல்லும் வார்த்தையில் இதோ, நாங்கள் மடிந்து உங்கள் விடியலுக்காய் உறங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களை எழுப்புங்கள் என்று காதோடு தென்றல் பேசுகிறது. நமது தேச விடுதலைக்காய் நாங்கள் காற்றிலே கரைந்து போனோம். நீரிலே சிதைந்தழிந்தோம். எம் தமிழினமே நீங்கள் தொடர்ந்து தேசத்தை கட்டியமைக்க உறுதிபூணுங்கள் என்கின்ற வார்த்தைகள் அந்த கார்த்திகை மலர்களில் ஒலிப்பதை உங்களால் உணர முடிகிறதா? அப்படி உணரும் போதுதான், அந்த ஈக வரலாற்றை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும். உறக்கத்தில்கூட அவர்களின் குரல் சத்தம் நம்மை உசுப்பி விடுகிறது. உறக்கம் ஏன்? விடியலுக்கான பணி உன்னிடம் மண்டியிட்டு கிடக்க, நீ ஏன் மனதை அலைக்கழிக்கிறாய் என அந்த குரலில் ஒரு கட்டளை பிறக்கிறது. இந்த தேசம், இந்த தேசத்தின் விடுதலை, இந்த தேச மக்களின் வாழ்வு இது மட்டுமே இந்த தத்துவ புதல்வர்களின் முழக்கங்களாய், முடிவுகளாய் இருந்தது. அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. பெறுவதற்கான உலகை நோக்கி தம்மை இழந்தார்கள். இந்த வீரத் தளபதிகள், இந்த வீரப் புதல்வர்கள், அந்த தீயாக தீபங்கள், தமது வாழ்வையே கொடையாய் தந்த தற்கொடையாளர்கள், தமது உடலையே தோட்டாக்களின் கல்லறைகளாக்கிய தமிழீழ உயிர் சொற்கள் உங்களிடம் கேட்பது இதுதான். எதை பெற எம்மை இழந்தோம் என்பது உங்களுக்கு தெரியும்தானே. அதைப்பெற நீங்கள் என்னச் செய்ய போகிறீர்கள். எதைப்பெற எமது தலைவர் இந்த படையை கட்டி அமைத்தார்? எதைப் பெற தமிழீழ மண்ணே குருதியால் சிவந்தது? எதைப் பெற வேதியியல் பொருட்களால் எமது மக்களின் சதைகள் சரிந்து தொங்கியது? எதைப் பெற எமது குழந்தைகள் கைக்கால்களை இழந்து ஊனமாய் நின்றது? எதைப் பெற நாம் நமது மண்ணிலிருந்து ஏதிலிகளாய் விரட்டியடிக்கப்பட்டோம்? எதைப் பெற நாம் இத்தனை ஆண்டுகாலம் போராடிக் கொண்டிருக்கிறோம்? அதைப் பெறாமல் நாம் ஓய்ந்தோம் என்றால் அதோ, ஆயிரக்கணக்கான கல்லறைகளிலிருந்து ஒட்டுமொத்தமாய் எழும் அந்த குரல்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். கல்லறைகளின் கட்டுக்களை மீறி சங்கொலியாய் முழங்கும் அந்த தரம் மிக்க தன்னலம் இல்லாத தவப்புதல்வர்களை நாம் புறக்கணிப்பவர்களாகி விடுவோம். எமது தேசிய தலைவர் இதை கட்டியமைக்க தம்மையே இழந்தார். தமது வாழ்வை அர்ப்பணித்தார். தமது இழப்பை மகிழ்வோடு ஏற்றார். தமது மகிழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தார். அந்த தத்துவத்தலைவனை, தன்னலம் இல்லாத தமிழகத்தின் அடையாளத்தை நாம் இப்போது நினைத்து அவர் சொல்லும் வழி நோக்கி நடக்க தயார் செய்யும் போதுதான் நமக்கான விடுதலை முன்னைக் காட்டிலும் வேகமாய் நம்மிடம் வந்து விழும். அதற்காக முனைப்புடன் போராடுவோம். அந்த ஈகப்போராளிகளுக்கு நன்றி கடனாக நாம் களம் காண வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மறந்துவிட வேண்டாம். நமது மகிழ்வுக்காகத்தான் அவர்கள் மரணித்தார்கள். நமது வாழ்வுக்காகத்தான் அவர்கள் தமது சுவாசத்தை கொடையாக ஈந்தார்கள். நமது மகிழ்வுக்காகத்தான் தமது உடலை சிதறடித்தார்கள். ஆகவே நமது தேசிய தலைவர் காட்டிய பாதையில் நமது ஈகப்போராளிகளை நினைவில் சுமந்து, தமிழீழம் அடையும்வரை தளராது படையணி கட்டுவோம். பாரெங்கும் தமிழ், தமிழ் தேசியம், தமிழ் அடையாளத்தை பதிய வைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக