ஞாயிறு, 2 மே, 2010

புதிய கண்டுபிடிப்பு! எடப்பனுக்கு பிரதி அமைச்சர் பதவி கொடுத்த ஞானோதயமா?!


வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்ததாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் ஒட்டுக்கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள முகாம்களில் இன்னும் சுமார் 73 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் உடனடியாகக் குடி யேற்றப்படவேண்டும். ஒரு இலட்சத்து அறுபத்து மூவாயிரம் பேர் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சியில் குடியேற்றப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர். சிறிய குடிசைகளிலேயே அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் இது குறித்து என்னிடம் தமது அதிருப்தியைத் தெவித்தனர். அகதிமுகாம் மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பதென்பது இனியும் முடியாத காரியம். அந்த மக்கள் கூடாரங்களில் தமது சிறுகுழந்தைகளுடன் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய நிலையில் அவர்கள் பகலில் வெயிலின் தாக்கத்துக்கும் இரவில் மழையின் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இப்போது இடம்பெற்று வரும் மீள்குடியேற்றமானது விரைவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்காக நான் கூடுதலான நேரத்தைச் செலவிடவுள்ளேன். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு இன்று அவசியமாகத் தேவைப்படுவது வீட்டு வசதியே. இது தவிர, அவர்களுக்குத் தொழில் வசதிகளும் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மிக விரைவாகச் செய்து கொடுக்கப்படவேண்டும். என்று தெரிவித்துள்ள அவர், வன்னிமாவட்டத்தில் மட்டுமல்ல. கிழக்கு மாகாணத்திலும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நிரந்தர வீட்டு வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவேண்டும். வன்னி மாவட்டத்தில் வீட்டுத் தலைவனை இழந்த குடும்பங்களே அதிகம் உள்ளன. பத்துக் குடும்பங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஏழு குடும்பங்கள் வீட்டுத் தலைவனை இழந்த குடும்பங்களாகவே உள்ளன. இந்த மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. முகாமிலுள்ள மக்களுக்கான உணவு வசதிகளை உலக உணவு ஸ்தாபனம் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ அமைப்புமே வழங்கி வருகின்றன. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசும் ஓரளவு உதவிகளைச் செய்து வருகிறது. ஆனால், அது போதுமானதாகவில்லை. என்றும் முரளிதரன் ஊடகம் ஒன்றிடம் புலம்பல் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக