ஞாயிறு, 2 மே, 2010

தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம்!!



இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் சதி ஒன்று அங்கு இடம்பெறத் தயாராகிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாகக் கிழக்கைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நகர்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தேர்தல்தான் முடிந்துவிட்டதே, இனி எதற்காக தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவேண்டும்? இந்த இரண்டு சமூகங்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதால், அல்லது தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஏற்படுவதால் யாருக்கு இலாபம்? – என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பலாம். ஒரு முக்கியமான அரசியல் நகர்வு ஒன்றை நோக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கம் இந்த இரண்டு சமூகங்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்த விளைகின்றது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு சர்வதேச சமூகம் வழங்கிவருகின்ற அழுத்தத்தை சமாளிப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஆங்காங்கு எழுப்படுகின்ற ஈழத் தமிழருக்குச் சார்பான குரல்களை அடக்குவதற்காகவும், ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடவேண்டும் என்று இந்தியாவிற்கு இருந்துவரும் சங்கடங்களில் இருந்து இந்தியாவின் (கருணாநிதி, மன்மோகன்சிங்) அரசுகளை காப்பாற்றுவதற்காகவும், தமிழ் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி போன்ற ஈழத் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிரந்தரமாகவே பலமிழக்கச் செய்வதற்காகவும், ஒரு முக்கிய அரசியல் நகர்வொன்றை வெகு விரைவில் சிங்கள அரசாங்கம் செய்ய இருக்கின்றது. கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இடம்பெற்ற வடக்கு கிழக்கு இணைப்பு தற்பொழுது சட்டரீதியாகப் பிரிக்கப்பட்ட நிலையில், வடக்குடன் கிழக்கு இணைந்திருப்பது அவசியமா என்னும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்றை கிழக்கில் நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டம் தீட்டி வருகின்றது. இது இலங்கை இந்திய ஒப்பந்தின் அடிப்படையிலான ஏற்பாடு. வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைவதா இல்லையா என்னும் தீர்மானத்தை பல்லின சமூகங்கள் இணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் நடாத்தவேண்டும் என்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 2.3ம் சரத்தின் ஏ –பிரிவு கூறுகின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தின் சரத்துக்களில் உள்ள அனேகமான விடயங்களை இரண்டு நாடுகளுமே நடைமுறைப்படுத்திவிட்டன. சிலவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புபையும் நடாத்தி வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான இலங்கைக்கு இருக்கும் நெருடல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க சிங்கள தேசத்தின் நவீனகால துட்டகெமுனு விரும்புகின்றார். அத்தோடு, இந்த கருத்துக் கணிப்பை நடாத்துவதன் மூலம் பல அனுகூலங்களைத் தமதாக்கிக்கொள்ளமுடியும் என்ற எதிர்பார்ப்பும் மகிந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அழுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணமுயல்கிறோம் என்று இலங்கை அரசாங்கம் உலகிற்கு கூறி, தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில் இருந்து பின்வாங்கலாம். இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளிகளாக மாறியுள்ள மேற்குலகம், இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி வாய்திறக்காது. அதேபோன்று, இந்த கருத்துக்கணிப்பை மேற்கொள்ளுவதன் மூலம் இந்தியாவின் சொல்படிதான் நாம் செய்கின்றோம் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து வரும் எதிர்புகளில் இருந்து தப்பித்திக்கொள்ளலாம். அல்லது தமிழ் நாட்டில் இருந்து வரும் எதிர்புக்களை இந்தியாவின் நடுவன் அரசை நோக்கித் திருப்பிவிட்டுவிடலாம். அடுத்ததாக, இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை மேற்கொள்ளுவதன் ஊடாக, தமிழ் அரசியல் கட்சிகளை தேசிய அரசியலில் இருந்து பின்வாங்கச் செய்து பிரதேச அரசியலுக்குள் முடக்கிவிடலாம். கருத்துக் கணிப்பில் வடக்கு கிழக்கு நிரந்தரமாகப் பிரிக்கப்படும் ஒரு சந்தர்ப்பம் உருவானால்;, “அங்குள்ள மக்களின் ஜனநாயக விருப்பம் இது. நாம் என்ன செய்வது” என்று கூறி வடக்கு கிழக்கின் பிரிப்பை நியாயப்படுத்திவிட இந்தியாவின் நடுவன் அரசுக்கும் சந்தர்ப்பமாகப் போய்விடும். இது போன்ற பல சாதகங்களை அடையும் நோக்கோடு கிழக்கில் கருத்துக்கணிப்பொன்றை மேற்கொள்ளும் நகர்வில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது. இலங்கையின் ஆட்சியைப் பொறுத்தவரையில் அவர்களது இந்த கருத்துக் கணிப்பு நகர்வுக்கு ஒரே ஒரு தடைதான் இருக்கின்றது. வடக்குடன் கிழக்கு இணையக் கூடாது என்று கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒருமித்து வாக்களிக்கவேண்டும். (இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் 2.3வது சரத்தின்படி சாதாரண பெரும்பான்மையுடனேயே வடக்கு கிழக்கு இணைவதா அல்லது பிரிவதா என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிடும். கிழக்குவாழ் மக்கள் தாம் வடக்குடன் இணைய விருப்பம் இல்லை என்கின்ற முடிவை ஜனநாயக ரீதியில் வழங்கிவிட்டார்கள் என்றால், அதன் பின்னர் யாராலுமே தமிழ் தேசியம் பற்றி மூச்சுவிட முடியாது. சுயநிர்ணய உரிமை பற்றியும் கதைக்க முடியாது. தாயகக் கோட்பாடு என்கின்ற விடயமும் கேள்விக்குள்ளாகிவிடும். எனவே இந்தக் கருத்துக்கணிப்பில் எப்படியாவது வெற்றி பெறவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு இருக்கின்றது. கிழக்கு பிரதேசவாதம் பேசும் கருணாவுக்கு நல்லதொரு அமைச்சுப் பொறுப்பு கொடுத்ததற்கும், பிள்ளையானை கிழக்கின் முதலமைச்சர் பொறுப்பில் இருத்தி அழகு பார்ப்பதற்கும் இதுதான் காரணம். கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு காலத்தில் இவர்களைக் களம் இறக்கி பிரதேசவாதம் பேச வைத்து கிழக்கு வடக்குடன் இணையக்கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கத்திலேயே இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்கள தேசத்தின் அச்சம் ஆனாலும் இலங்கையின் ஆட்சியாளர்களது மனதின் ஒரு மூலையில் ஒருவிதமான அச்சம் இருக்கத்தான் செய்கின்றது. கிழக்கு மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்ற செல்வாக்குத்தான் அது. பல வருடங்கள் கிழக்கில் இருந்து அன்னியப்பட்டிருந்த த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தல் காலத்திலேயே மீன்டும் கிழக்கில் காலடியெடுத்து வைத்திருந்தது. அப்படியிருந்தும் அவர்களால் பெருமளவிலான வாக்குகளை கிழக்கில் திரட்ட முடிந்திருந்தது. கிழக்கின் பிரதேசவாதம், கிழக்கின் அபிவிருத்தி என்ற மகிந்த சகோதரர்களின் பிரிவினைவாத ஆயுதங்கள் பெரிதாக அங்கு பலன்கொடுக்காதது அவர்களுக்கு கிழக்கு வாழ் மக்கள் தொடர்பான எதிர்பார்ப்பில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது. கிழக்கிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டு த.தே.கூட்டமைப்பு மக்கள் மத்தியில் முழு மூச்சாக இறங்கி வேலை செய்தால், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்துக்கணிப்பின் பொழுது பெருமளவு தமிழ் மக்கள் வடக்குடன் இணையவேண்டும் என்று வாக்களித்துவிடச் சந்தர்ப்பம் இருக்கின்றது. அப்படி ஒருவேளை நடந்துவிட்டால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகிப் போய் ஏராளமான சிக்கல்களை இலங்கை அரசுக்கும், இந்தியாவுக்கும் ஏற்படுத்திவிடும். அத்தோடு, இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்துள்ள கிழக்கு மாகாண மக்களும் கூட இந்தக் கருத்துக்கணிப்பில் வாக்களிக்கச் சந்தர்பம் இருப்பதாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 2.4வது சரத்து கூறுகின்றது. அதனால் வெளிநாட்டில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அரசாங்கத்திற்குச் சிறிது சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது. முஸ்லிம் மக்கள்? இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, அன்மைக்காலமாக இலங்கை முஸ்லிம் காங்கிரசுடனும் த.தே.கூட்டமைப்பு ஒப்பந்தம் அது இது என்று கூறிக் குலாவி வருகின்றது. இதுவும் இலங்கை அரசாங்கத்தை இந்த கருத்துக்கணிப்பு விடயத்தில் பெரிதும் அச்சங்கொள்ள வைத்துள்ளது. தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களில் ஒரு தொகுதியினரும் வடக்குடன் கிழக்கு இணையவேண்டும் என்று வாக்களித்துவிட்டால், நிலமை மிக மோசமாகப் போய்விடும். எனவேதான் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும் சதியை நடைமுறைப்படுத்த சிங்கள தேசம் முனைகின்றது. சற்று அவதானமாக நோக்கினால் கிழக்கில் மிக மோசமான இனவாதம் பேசுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத முஸ்லிம் தலைவர்களுக்கு மகிந்த இம்முறை நல்ல அமைச்சுப் பொறுப்பை வளங்கியுள்ளார். முஸ்லிம் காங்கிரசையும் தன்பக்கம் இழுக்க அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார். இந்த நகர்வுகளுக்கு மேலாக, தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஒரு இனக்கலவரத்தை உருவாக்குவதற்கான சதியையும், சிறிலங்கா அரசாங்கம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வப் பிரிவினரின் ஊடாக இரகசியமாக மேற்கொண்டு வருவதாக, சில செய்திகள் தெரிவிக்கின்றன. அது எப்படி முடியும்? இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா? என்று சிலர் சந்தேகம் எழுப்பலாம். ஆனால், கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவைக் கெடுப்பதில் சிங்கள தேசம் எப்படியான சதிகளையெல்லாம் அரங்கேற்றி இருக்கின்றது என்கின்ற வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு, இந்த விடயம் ஒன்றும் பெரிதான ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை. ஆம், கிழக்கைப் பொறுத்தவரையில் எப்பொழுதெல்லாம் சிங்கள ஆட்சிக்கு தமிழ் முஸ்லிம் பிரச்சனைகள் தேவைப்பட்டதோ, அந்த நேரங்களில் எல்லாம் சிறிலங்கா புலனாய்வப் பிரிவு அந்தக் காரியத்தைக் கச்சிதமாகச் செய்துவந்துள்ளது. இது கிழக்கு மாகாணத்தின் ஒரு வரலாறு. பிளவுகளின் ஆரம்பம் தமிழீழம்தான் ஒரே முடிவு என்ற தீர்மானத்தை ஆரம்பத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் மாத்திரம் எடுக்கவில்லை. இஸ்லாமியர்களும் சேர்ந்துதான் அந்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். ~தமிழ் பேசும் சமூகம்| என்ற கோதாவில் தம்மீது கட்டவிழ்த்துப்பட்டிருந்த அநீதிகளை எதிர்த்துக் களம் இறங்கியிருந்த தமிழ்-முஸ்லிம் சமுகங்களிடையே நிரந்தரப் பிரிவினையை ஏற்படுத்திவிடுவதில் இலங்கை அரசாங்கம் ஒரு சந்தர்ப்பத்தில் பாரிய வெற்றியைப் பெற்றது. அதுமாத்திரம் அல்ல தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் சிங்களம் திட்டமிட்டு ஏற்படுத்திய பிளவை, தொடர்ந்து பேணுவதிலும் அது வெற்றிகண்டே வந்திருக்கின்றது. நீண்ட காலமாக ~பிட்டும் தேங்காய்ப்பூவும்| போன்று இணைந்து வாழ்ந்து வந்த இந்த இரண்டு சமுகங்களும் பின்னர் ஈடுசெய்யமுடியாத அளவு பிளவுபட்டுப் போனதற்கும், இன்றுகூட தமிழ் பேசும் சமூகம் என்கின்ற அணியின் கீழ் இணையமுடியாமல் இருப்பதற்கும் சிங்கள அரசுகள் வகுத்த சதித்திட்டங்களே காரணம் என்பதை வரலாறு வெளிக்காண்பித்து நிற்கின்றது. போராடும் ஒரு குழுமத்தில் பிளவுகளை ஏற்படுத்தி அந்தப் போராட்டத்தின் வீச்சை மழுங்கடிப்பதற்கும், சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப் போராட்டத்தையே நசுக்கிவிடுவதற்கும் காலாகாலமாக ஆக்கிரமிப்பாளர்கள் கையாண்டுவந்த ~பிரித்தாழும் தந்திரத்தை|, ஸ்ரீலங்கா அரசும் தமிழ் பேசும் மக்களின் போராட்ட விடயத்தில் கவனமாகக் கையாண்டிருந்தது. ~தமிழர்கள்| என்ற பெயர் அடையாளத்தில் இருந்து முஸ்லிம் சமுகத்தை வேறுபடுத்தி, அந்த சமுகத்தை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஒரு சமுகமாக மாற்றிவிடுவதிலும், தமிழ் முஸ்லிம் சமுகங்களுக்கு இடையில் நிரந்தர பிரிவினையை ஏற்படுத்திவிடுவதிலும் இலங்கை அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.(சிங்களத்தின் இந்த வெற்றிக்கு விடுதலைப் புலிகளும், தமிழ் முஸ்லிம் தலைவர்களும் துனைபோனார்கள் என்பது மற்றொரு சோகம்) முதலாவது சதி: இலங்கை அரசு தனது பிரித்தாழும் தந்திரத்தில் வெற்றிபெறுவதற்கு எப்படியான நகர்வுகளை கையாண்டிருந்தது என்பது மிகவும் சுவாரசியமானது. தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்தில் இருந்து முஸ்லிம் சமுகத்தைப் பிரிக்கும் சதி முயற்சி 1970 களிலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1970களில் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்ததும், இலங்கை என்ற சிங்கள தேசத்தில் இனியும் ஒன்றாக வாழமுடியாது என்று தமிழ் இளைஞர்களை தீர்மானம் எடுக்கச் செய்ததுமான ஒரு நிகழ்வு அப்பொழுது இடம் பெற்றிருந்தது. தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புக்களைத் தட்டிப் பறிக்கும் ~தரப்படுத்தல்| என்ற முறை இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் இளைஞர்களின் உணர்வுகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த ~தரப்படுத்தல்| அமுலாக்கலில்தான் ஸ்ரீலங்கா அரசு தனது பிரித்தாழும் திட்டத்தையும் முதன்முதலில் பரிட்சித்துப் பார்த்திருந்தது. தமிழ் இளைஞர்களின் உணர்வுகளுடன் விளையாடிய இந்த ~தரப்படுத்தல்| திட்டத்தை முஸ்லிம் அரசியல்வாதியான பதியுதின் முகமட் அவர்களைக் கொண்டே அமுல்படுத்தியிருந்தது. அப்பொழுது கல்வி அமைச்சராக இருந்த பதுயுதீன் முகமட் அவர்களிடம், ~இந்த தரப்படுத்தல் முறை மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பலருக்கு உயர் கல்வி வாய்புக்கள் கிடைத்துவிடும்| என்று ஆசை காண்பித்தே இலங்கை அரசு தனது காயை நகர்த்தியிருந்தது. தமிழ் இளைஞர்களால் அதிகம் வெறுக்கப்படக்கூடிய நபராக ஒரு முஸ்லிம் இருந்துவிடவேண்டும் என்பதில் சிங்களத் தலைமை எந்த அளவிற்கு கரிசனையாக இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். தொடர்ந்தும், தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டிருந்த பலவிதமான அடக்குமுறைகளின் போதும், அந்த அடக்குமுறைகளினால் வெளிப்படக்கூடியதான தமிழ் மக்களின் கோபம் முஸ்லிம்கள் மீது திரும்பிடவேண்டும் என்பதில் சிங்களத் தலைமைகள் எந்த அளவிற்கு திட்டமிட்டு செயலாற்றி இருந்தார்கள் என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாகக் கூறமுடியும். முஸ்லிம் இராணுவ அதிகாரிகள் 1985ம் ஆண்டிலும், 90 களிலும் கிழக்கு மாகாணத்தில் இலங்கை படைகள் அப்பாவித் தமிழர்கள் மீது மிகப்பெரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தன. தமிழ் மக்களை படுகொலை செய்தும், இளைஞர்களை சித்திரவதை செய்தும் இலங்கை இராணுவம் கிழக்கில் கோரதாண்டவம் ஆடியிருந்தது. கட்டுப்பாடற்ற முறையில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் பழிவாங்கல்களை மேற்கொண்டுவந்த இக்காலப்பகுதியில் இப்படை பிரிவுகளுக்கு பொறுப்பானவர்களாக முஸ்லிம் அதிகாரிகளே சிங்கள அரசினால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டிருந்தார்கள். தமிழர் மீது இராணுவம் மேற்கொள்ளும் இன அழிப்பு வன்முறைகளுக்கு, இராணுவத்தை வழிநடத்தக்கூடிய பொறுப்பில் உள்ள முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த அதிகாரிகளே காரணம் என்று தமிழர் தரப்பை நம்பவைப்பதில் சிங்கள அரசாங்கம் கவனமாக இருந்துவந்தது. கப்டன் மொனாஸ் இதற்கு, பின்நாட்களில் வெளிச்சத்திற்கு வந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம். 1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து மட்டக்களப்பைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்கள் பலரைக் கொலை செய்து ~டயரில்| போட்டு எரியூட்டியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இருந்த 168 தமிழர்கள் 1990ம் ஆண்டு செப்டெம்பர் 3ம்திகதி இலங்கை இராணுவத்தினால் அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் காணாமல் போனார்கள்.. இதேபோன்று மட்டக்களப்பிலுள்ள தன்னாமுனை, சத்துருக்கொண்டான், குடியிருப்பு போன்ற கிராமங்களும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்காணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் காணாமல்போயுள்ளார்கள். இப்படி பல அப்பாவித் தமிழ் மக்கள் காணாமல்போன சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களிடம் பரவலாகப் பேசப்பட்ட ஒரு பெயர் ~கப்டன் மொனாஸ்| ஆகும். இலங்கை இராணுவத்தில் 1990 ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவில் (Military Intelligence Corps) மட்டக்களப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக செயற்பட்ட |கப்டன் மொனாஸ்| மட்டக்களப்பில் இடம் பெறும் சுற்றிவளைப்புக்களின் போது இராணுவத்தினாரால் அழைத்துவரப்பட்ட மக்கள் முன்பு உரையாற்றும்போது,~~நான் ஒரு நல்ல முஸ்லிம். அல்லாவைத் தவிர வேறு எவருக்கும் நான் பயப்படமாட்டேன்|| என்று தவறாமல் தெரிவிப்பார். கப்டன் மொனாஸ்| என்ற பெயர் அக்காலங்களில், அதுவும் குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் உறவுகளில் என்றுமில்லாத விரிசல்கள் ஏற்பட்டிருந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் சாதாரண தமிழ் மக்களிடையே பயத்துடனும், வெறுப்புடனும் பிரசித்திபெற்றிருந்தது. ஆனால் இத்தனைக்கும் ~கப்டன் மொனாஸ்| என்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். நீர்கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் ~பீரிஸ் மார்ட்டின்| என்று பின்னாளிலேயே தெரியவந்தது. பின்நாளில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் (Military Intelligence Directorate) ஒரு பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்த இந்த சிங்கள கிறிஸ்தவ அதிகாரியை திட்டமிட்டு முஸ்லிம் பெயரில் மட்டக்களப்பிற்கு அனுப்பி, தமிழ் முஸ்லிம் விரோதத்தை வளர்ப்பதில் ஸ்ரீலங்கா அரசு தீட்டியிருந்த திட்டம் பற்றி பின்நாட்களிலேயே சிங்கள் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அரச படைகள் மீது தமிழ் மக்களுக்கு இயல்பாகவே தோன்றக்கூடிய வேறுப்புணர்வுகளை, முஸ்லிம் சமுகத்தின் மீது திருப்பிவிடுவதில் சிங்கள அரசாங்கம் எப்படி திட்டமிட்டு செயற்பட்டது என்பதற்கு உதாரணம்தான் ~கப்டன் மொனாஸ்| என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள். கலவரங்களின் பின்னணியில் இதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களை ஆராய்ந்து பார்த்தால், அதன் பின்னணியில் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்ததை கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும். 1985 மற்றும் 1990 ஆண்டுகளில் கிழக்கில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் கலவரங்களின் போது ஸ்ரீலங்காப்படைத்துறை நேரடியாக கலவரங்களில் பங்குகொண்டிருந்ததை நடுநிலையாக முஸ்லிம் தலைவர்கள் இப்பொழுது வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஓட்டைமாவடி 30.11.2001 அன்று ஓட்டைமாவடி, மாவடிச்சேனை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய தமிழ்-முஸ்லிம் மோதல்களின் பின்னணியில் ஸ்ரீலங்கா அரச படைகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததை கல்குடா தொகுதி பள்ளிவாயல் நிறுவணங்களின் சம்மேளனம் பின்னர் அம்பலப்படுத்தியிருந்தது. ஓட்டைமாவடி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து 29.11.2001 கைதுசெய்யப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த மணாளன் மகேசன் என்ற தமிழ் மீன் வியாபாரி மறுநாள் கொலைசெய்யப்பட்டு பிணமாக முஸ்லிம் பிரதேசமான மாவடிச்சேனையினுள் போடப்பட்டார். இதனைத் தொடர்ந்தே இனக்கலவரம் ஆரம்பமானது. தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தச் செயல் இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக கல்குடா தொகுதி பள்ளிவாயல் நிறுவனங்களின் சம்மேளனம் பின்நாட்களில் தெரிவித்திருந்தது. அக்கரைப்பற்றில் 2002ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி, அக்கரைப்பற்றில் அப்துல் வஜீட் என்ற 24 வயது முஸ்லிம் வாலிபன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வாலிபன் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவன் என்பதால், இது புலிகளின் வேலையாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறிக் கொதித்தெழுந்த அப்பிரதேச முஸ்லிம்கள், ஆர்ப்பாட்டம், ஹர்த்தால், கடையடைப்பு என்று இறங்கியிருந்தனர். தமிழ் மக்களை தாக்கி, வன்முறைகளில் அவர்கள் இறங்கிவிடக்கூடிய அபாயமும் அங்கு காணப்பட்டது. ~~முஸ்லிம் இளைஞனைக் கடத்தியது விடுதலைப் புலிகளே|| என்று அத்தாவுல்லா போன்றவர்கள் அடித்துப் பேசினார்கள். முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் ஆவேசமாக அறிக்கைகளையும் விடுத்தார்கள். அப்பிரதேசத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மிக மோசமாக இருந்தது. தமது அமைப்பிற்கும் இந்தக் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்த போதிலும் அவர்களை நம்புவதற்கு எவரும் தயாராக இருக்கவில்லை. இச்சம்பவம் நடைபெற்று மூன்றாம் நாள் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அப்துல் வஜீட் இனது வீட்டை பொலிஸார் திடீரென்று சுற்றிவளைத்தபோது, குறிப்பிட்ட வாலிபன் தனது வீட்டில் சாவகாசமாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவனைக் கைது செய்தார்கள். தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத்தொடர்ந்தே அந்த வாலிபனின் வீட்டில் தாம் தேடுதல் நடாத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட அப்துல் வஜீட் என்ற அந்த வாலிபன், ~~வெளிநாடு செல்வதற்கு தனக்கு பணம் தேவைப்பட்டதால், இந்த கடத்தல் நாடகத்திற்கு தான் சம்மதித்ததாக|| தெரிவித்தான். இந்தக் கடத்தல் நாடகத்தின் பின்னணியில், ஈ.பி.டி.பி. அமைப்பினரும், முஸ்லிம் குழு ஒன்றும் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் பழியை புலிகள் மீது போட்டுவிட்டு, புலிகளால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளி உலகிற்கு காண்பிக்க இந்த கடத்தல் நாடகம் மேற்கொள்ளப்பட்டிந்ததாகக் கூறப்பட்டது. அதுவும் நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கெசன் மற்றும் நோர்வே தூதுக் குழுவினர் இலங்கை வந்து புலிகளின் தலைவரைச் சந்தித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் பற்றி ஆராய இருந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்தல் நாடகம், புலிகளுக்கும், சமாதான முயற்சிகளுக்கும் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிடப்பட்டு ஈ.பி.டி.பி. மற்றும் முஸ்லிம் ஆயுதக் குழுவினரால் அரங்கேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிண்ணையடி 2003ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நள்ளிரவு ஹ{சைன் என்ற 27 வயது முஸ்லிம் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிண்ணையடி என்ற தமிழ் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டைமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் பதட்டநிலை ஏற்பட்டதுடன், தமிழ் முஸ்லிம் கலவரம் ஒன்று தோன்றுவதற்கான ஏதுநிலையும் உருவானது. வழமை போலவே, இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகலாலேயே மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். ஒருவேளை புலிகள்தான் இதனைச் செய்திருப்பார்களோ என்று தமிழ் மக்களே அஞ்சும் அளவிற்கு, இந்தக் கொலை பற்றிய பிரச்சாரங்கள் கச்சிதமாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் கொலைச் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரிகள் பின்னர்; பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் பற்றிய உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவில், மட்டக்களப்பில் செயற்படும் தமிழ் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருக்கும் கப்டன் ஹஜ்ஜி என்ற இராணுவ அதிகாரியே இந்தக் கொலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஹ{சைன் என்ற அந்த முஸ்லிம் இளைஞன், ஓட்டைமாவடியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடாத்திவரும் பெண் வைத்தியருடன் காதல் தொடர்புகளை வைத்திருந்தான். 15.05.2003 அன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ஹ{சைன் செல்லும் நேரம் பார்த்து, ஹ{சைனை வான் ஒன்றில் கடத்திச் சென்ற இலங்கை புலனாய்வப் பிரிவினர் அவனை கொலைசெய்துவிட்டார்கள். பின்னர் ஹ{சைனின் பிணத்தை ஆட்டோ ஒன்றில் எடுத்துச் சென்று மிராவோடை-கிண்ணையடி வீதியில், தமிழ் பிரதேசத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். தீவிர விசாரணையை மேற்கொண்ட வாழைச்சேனைப் பொலிஸார், இராணுவ அதிகாரி ஹஜ்ஜியையும், ஆட்டோச் சாரதியையும், வேறு சில இராணுவ வீரர்களையும் கைது செய்தார்கள். இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவில், தமிழ் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருக்கும் கப்டன் ஹஜ்ஜி இந்த கொலையில் சம்பந்தப்பட்டடிருந்தைத் தொடர்ந்து, இந்த கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இருந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞனின் பிணம் தமிழ் பிரதேசத்தின் மத்தியில் போடப்பட்டதானது, தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை தூண்டிவிடும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது என்கின்ற உண்மை உலகிற்குத் தெரிய வந்தது. (அந்த நேரத்தில் இலங்கை பொலிஸ் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவின் கீழும், இலங்கை இராணுவப் புலனாய்வப் பிரிவு சமாதானத்தைக் குழப்ப முயன்ற சந்திரிகாவின் கீழும் செயற்பட்டு வந்தது இந்த இடத்தில் நோக்கத்தக்கது) நிந்தவூர் ஓட்டைமாவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர், நிந்தவூர் என்ற முஸ்லிம் கிராமத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரத்தை தூண்டும்படியான மற்றொரு சம்பவம் இடம்பெற்றது. 21.05.2003 அன்று புதன் கிழமை, விடுதலைப் புலி உறுப்பினரான பூவண்ணன் (காத்தமுத்து கோணேஸ்வரன்) என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் நிந்தவூர் என்ற முஸ்லிம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ந்தெழவும் செய்திருந்தது. கொலை செய்யப்பட்ட பூவண்ணன், விடுதலைப் புலிகளின் தேசியப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர். காரைதீவு பணிமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இவர் கொலை செய்யப்பட்டதும், இவரது உடல் தனி முஸ்லிம் கிராமம் ஒன்றின் நடுவில் கண்டெடுக்கப்பட்டதும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியிலும் பாரிய சினத்தை ஏற்படுத்தியிருந்தது. எந்த நேரத்திலும் எதுவும் நடந்துவிடலாம் என்று மக்கள் அச்சம் அடைந்திருந்த நேரத்தில், விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல்துறைப் பணியகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. ~தமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருங்கள்| என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ~~காரைதீவில் வைத்து ஈ.பி.டி.பி. கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட பூவண்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் முஸ்லிம் கிராமமான நிந்தவூரில் போடப்பட்டதாகத்|| தெரிவிக்கப்பட்டிருந்தது. ~~தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோதத்தை தோற்றுவித்து இரு சமுகங்களுக்கும் இடையில் இனமோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கும் நோக்கத்தில் இந்தச் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக|| புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். ~நாட்டில் தற்பொழுது தோன்றியுள்ள அமைதிச் சூழலை சிர்குலைத்து, மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தி சுயலாபம் தேட முனையும் தீய சக்திகள் தற்பொழுது இதுபோன்ற சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த விடுதலைப் புலிகள், இதனையிட்டு தமிழ் முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்கள். பெரிய அளவில் உருவாக இருந்த தமிழ்-முஸ்லிம் கலவரம் ஒன்று, விடுதலைப் புலிகளின் சரியான கணிப்பீடு காரணமாக தற்காலிகமாக தணிக்கப்பட்டது. இதேபோன்று, கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு இனக்கலவரங்களின் பின்னணியிலும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் கரங்கள் இருந்து வந்ததுடன், எச்சந்தர்ப்பத்திலும் இவ்விரு இணங்களுக்கிடையேயான இனமுறுகல் நிலை தணிந்துவிடாமலும் அது பார்த்துக்கொண்டிருந்ததை பின்னாட்களில் இரண்டு சமுகங்களைச் சேர்ந்தவர்களும் புரிந்து கொண்டிருந்தார்கள். தலைமைகளை அகற்றும் நடவடிக்கை இது இவ்வாறு இருக்க, சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து ஒரு விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ்-முஸ்லிம் சமுகங்கள் இரண்டுமே இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி செயற்பட்ட முஸ்லிம் தலைமைகளைக்கூட கொலைசெய்து அகற்றிவிடும் நடவடிக்கைகளிலும்; ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் அக்காலங்களில் ஈடுபட்டிருந்தார்கள். தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் பின்னிப்பிணைந்திருக்கவேண்டியதன் அவசியம் பற்றி விளக்கியதுடன், பிளவுபட்டிருந்த இரு சமுகங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் முன்நின்று செயற்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த அகமட் லெப்பை மற்றும் மூதூரைச் சேர்ந்த மஜீத் போன்றோர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகளும், ஸ்ரீலங்கா அரச படைகளின் உத்தரவுப்படியே முஸ்லிம் இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ~முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்| என்ற தலைப்பில் சமாதான காலத்தில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்றின் முடிவில் இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, சிங்கள அரசு மேற்கொண்ட சதி நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தெரிந்துகொhண்டே விழுந்து தங்களைத்தாங்களே அழித்துக்கொண்ட அவலங்களையும் நாம் கவனத்தில் எடுத்தத்தான் ஆகவேண்டும்.ஆக மொத்தத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கை இராணுவ புலனாய்வப் பிரிவையும், அந்தப் பிரிவின் கீழ் செயற்பட்டுவரும் தமிழ் முஸ்லிம் ஒட்டுக்குழுக்களையும் பயன்படுத்தி கடந்த காலங்களில் மேற்கொண்டது போன்றதான ஒரு இனக்கலவரத்தை தற்கால தேவை கருதி வெகு விரைவில் ஏற்படுத்த முடியும்.ஒரு இனக் கலவரத்தை உருவாக்கி அதில் அரசியல் நன்மையடையவேண்டிய அவசியத் தேவை ஒன்று சிங்கள ஆட்சியாளர்களுக்கு தற்பொழுது இருக்கின்றது. எனவே, தமிழ் முஸ்லிம் உறவுகளே நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. தமிழ் முஸ்லிம் தலைவர்களே நீங்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலம் இது.

1 கருத்து:

  1. கருணாவும், பிள்ளையானும் அரசுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் குண்டி துடைப்பவர்கள். தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கேர்னல்.ராமையும், காஸ்ட்ரோவின் புலிகள் நினைப்பது போல் கிழக்கு மாகாணத்தில் அளித்து விட்டால், தமிழர்கள் ஆகிய எம்மை காக்க எவரும் இல்லை. நாங்கள், சிங்களவனுக்கும் முஸ்லிமுக்கும் நிரத்திரமாய் அடிமைதான்.
    முகில்வண்ணன்

    பதிலளிநீக்கு