வெள்ளி, 28 மே, 2010

பதுங்குவது பாய்ச்சலுக்கான அடையாளம்..................

நமது வாழ்வும், நமது மகிழ்வும், நமது மண்ணின் விடுதலையிலே பிண்ணி பிணைந்திருக்கிறது. நமக்கான வாழ்வு என்பதை நமது மண்ணின் வாசத்திலே, நமது மண்ணின் அழகிலே, நமது மண்ணின் உயிர்மையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது மண்ணை பிரிந்து நமது சுவாசமோ, சிந்தனையோ ஒருபோதும் கிடையாது
. நாம் சுற்றிச் சுற்றி எதைக் குறித்து பேசினாலும், இறுதியில் நம் மண்ணின் விடுதலைதான் நமக்கான தீர்வாக இருக்கிறது. நமக்கான மகிழ்வு நமது மண்ணின் தன்மையிலே புதைந்திருக்கிறது. நாம் மகிழ்ச்சியை நமது மண்ணிலிருந்துதான் தோண்டி பருக தீர்மானித்திருக்கிறோம்.


அதற்கான விலையாக நாம், உலக வரலாற்றிலே யாரும் கொடுக்காத விலையை கொடுத்திருக்கிறோம். எந்த நிலையிலும் கொடுத்த விலைக்கான பொருளை அடையாமல் நமது போர் முடியப் போவதில்லை. நமக்கான விடுதலையை பெறாமல் நமது வாழ்வு நிறைவாகப்போவதில்லை. எந்த நிலையிலும், எத்துணை துயர்வரினும், எத்துணை இடர் வரினும், நமது தொடர் பயணம் நீண்டுக் கொண்டேதான் இருக்கும். உலக வரலாற்றில் பூமி எங்கும் பரந்து, விரிந்து வாழும் ஒரு தேசிய இனம் தமிழ் தேசிய இனத்தைத்தவிர, இதுவரை வேறொரு தேசிய இனமும் இருந்ததில்லை. இனிவரும் காலங்களில் இருக்கப்போவதும் இல்லை.


உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் தேசியத்தின் அடையாளங்களாக, தமிழ் தேசியத்தின் விளக்குகளாக சுடர் விட்டுக் கொண்டிருக்கும் எமது இனிய தமிழ் உறவுகள், இந்த உலகிற்கு, வட்டுக் கோட்டை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததின் மூலம் அழுத்தமாக கூறியிருக்கும் ஒரு செய்தி, எமக்கான ஒரு நாடு. அது தமிழீழம். நாம் நமக்கான தேசிய அடையாளத்தை ஒருபோதும் இழக்கப்போவதில்லை என்பதை தீர்மானமாக, தீர்க்கமாக அறிவித்திருக்கிறார்கள். வாக்களிப்பு நடந்த இடங்களிலெல்லாம் குறைந்தபட்சம் 98 விழுக்காட்டு மக்கள், ஆம். எங்களுக்கான நாடு ஒன்றே. எங்களது தேவை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள்.


வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு பிழைகளின் காரணமாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தவறான கொள்கையின் நிலையால் ஏற்பட்ட இந்த சறுக்கல், சிங்கள-பௌத்த பேரினவாதிகளால் நம் மீது திணிக்கப்பட்ட இந்த சுமை, இப்போது இறக்கி வைப்பதற்கான காலங்கள் நமது கைக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது. தமிழ் உறவுகளை, தமிழரின் மானத்தை மீட்டெடுக்கும் இரட்சகனாக நமது தேசிய தலைவர் இந்த மண்ணிற்கு அடையாளம் காட்டப்பட்டார். அவரின் சிந்தனை, அவரின் சொல், அவரின் செயல் இவை ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்தது.


சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத ஒரு வாழ்வு, இதுவரை இல்லாத அளவிற்கு உலகெங்கும் தமிழ் தேசியத்திற்கான அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அவர் தமது மக்களை, தமது உயிருக்கும் மேலாக நேசித்தார். தமது விடுதலையை தமது மக்களோடு ஒப்பிட்டார். தமது மக்களுக்கான விடுதலையே, தமது விடுதலை என்பதிலே அவர் நெறி பிறழவில்லை. ஒருபோதும் இந்த நிலையிலிருந்து அவர் தம்மை சமரசப்படுத்திக் கொண்டதுமில்லை. அவரின் பயணம் ஒரே நேர்க்கோட்டில் இருந்தது. அது, விடுதலை. அவருடைய இலக்கு ஒருபோதும் மாறியது கிடையாது. அது, விடுதலை. விடுதலையற்ற வாழ்வை அவர் நேசிக்கவில்லை. விடுதலையற்ற இந்த மண்ணிலே அவர் வாழ விரும்பவில்லை.


அதேப்போன்றே தமது மக்களும் விடுதலைகொண்ட மண்ணிலே வாழ வேண்டும் என்பதற்காக அவர் முன்னெடுத்த பல்வேறு களங்கள் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இன்றைய தினம் அவரின் சிந்தனை, சொல், செயல், திறன் அனைத்தும் நம்மை பெரும் வியப்புக்குள் ஆழ்த்துகிறது. அவர் என்னச் சொன்னாரோ, அது நிகழ்கிறது. அவர் என்ன நினைத்தாரோ, அதுதான் இன்றைய இலங்கையின் அவலமாய் மாறியிருக்கிறது. ஒருவேளை முள்ளி வாய்க்காலில் முடக்கப்பட்ட எமது மக்களை மீட்டெடுக்க, தமிழ் தேசிய ராணுவம் (விடுதலைப் புலிகளை நாம், நமது தேசியப் படை என்றே இனி அழைக்கப் பழகுவோம்.) முயன்றிருக்குமேயானால் அது, சிங்களத்தின் வேறறுக்க உதவி புரிந்திருக்கும்.


ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வெற்றி நிரந்தரமாய் இருந்திருக்காது என்பதை நமது தேசிய தலைமை உணர்ந்த காரணத்தினால் அமைதி காத்தது, பின்வாங்கியது, மௌனித்தது, பதுங்கியது. புலிகள் பதுங்குவது பாய்ச்சலுக்கான அடையாளம். இன்று பாய்ச்சலுக்கான தேவை அதிகரித்திருந்தாலும்கூட, காலம் கருதி பாய்வதற்கு புலிகள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தேசிய தலைவர் எதையெல்லாம் நினைத்தாரோ அவையெல்லாம் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள ராணுவத்தில் மகிந்தா அரசு, அதன் பொருளாதார ஆற்றலை மீறி, சற்றேக்குறைய ஒரு லட்சத்து எழுபதாயிரம் ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தி இருக்கிறது.


2007ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பல்வேறு சமர்களில் துரத்தி அடிக்கப்பட்ட கட்டளை அதிகாரிகள், இன்று சரத்திற்கு எதிராக மகிந்தாவின் தம்பி கோத்தபயவின் நண்பர்களாகி விட்டார்கள். சரத்தால் தண்டிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள், இன்று கோத்தபயவின் அரசியல் நகர்வுகளுக்கு பகடைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிறுசிறு பிள்ளைகளையெல்லாம் கைகளிலே கருவி கொடுத்து, சீருடை அணிவித்து, அவர்களை ராணுவம் என்று அறிவிக்கும் கேவலப் போக்கிற்கு மகிந்தாவின் அரசு மக்கிப்போய்விட்டது. மகிந்தாவிற்கு தேர்தல் வெற்றி கொடுத்த மமதை, அரசுக்கெதிராக சதி எனக்கூறி, 14 உயர் ராணுவ அதிகாரிகளை பலிவாங்கிய போது, அவர்களின் பதவிகளை பறித்து, கட்டாய பதவி விலகளை அவர்களுக்கு வழங்கி, தாம் அச்சத்தோடு வாழ்வதை அடையாளப்படுத்தியது.


வரலாறு ஒவ்வொரு முறையும் சுழன்று வருவதை மகிந்தாவின் செயல்பாடு மீண்டுமாய் நிரூபித்தது. 1962ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா அரசை கைப்பற்ற முனைந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சில ராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்த வரலாறு சுழன்று, மகிந்தாவின் அரசிலே மறுபடியும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் சிறையிலே எப்படி இருக்கிறாரோ என்று சரத்தின் மனைவி அனோமா கவலையோடு ஊடகவியலரை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தநிலை, சிங்களப் பிளவை இந்த உலகிற்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. மகிந்தாவின் ஆட்சியை தாங்கிப் பிடித்த சரத் இன்று சிறையிலே.


சரத்தின் உதவியாளராக பணியாற்றிய பலர் இன்று அவையிலே (இவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் சரத்தின் ராணுவ தண்டிப்புக்கு, கண்டிப்புக்கு உள்ளானவர்கள்). கோத்தபயவின் கண்ணசைவிற்கு இந்த ராணுவ கட்டளை அதிகாரிகள் பொம்மைகளாய் ஆடும் ஆட்டம், சிங்கள மக்களிடம் சிரிப்பாய் சிரிக்கிறது. உலகறிந்த ஒரு செய்தி. சிங்கள ராணுவத்திற்கு ஒழுக்கமோ, கட்டுப்பாடோ, செயல்திறனோ, ஆற்றலோ ஒருதுளியும் கிடையாது. ஆகையால்தான், எமது தமிழ் தேசிய ராணுவத்தோடு ஏற்பட்ட மோதலை தாங்க முடியாமல், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சொல்லாமல், கொள்ளாமல் ஓடி ஒளிந்தார்கள்.


உலக வரலாற்றில் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கில் ராணுவத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு மாபெரும் செயலை, மகிந்தாவின் சிங்கள பேரினவாதம்தான் முதல் முதல் சந்தித்தது. அதை உருவாக்கித் தந்தது, எமது தமிழ் தேசிய ராணுவம். ஆனால் அப்படி ஓடிப்போன அனைவரும் தம் கரங்களில் வைத்திருந்த கருவியோடு தப்பித்தார்கள் என்ற செய்தி இப்போது கசிந்துக் கொண்டிருக்கும்போது, இது எப்படிப்பட்ட எதிர்விளைவுகளை இலங்கையிலே உருவாக்கும் என்கின்ற சிந்தனை எல்லோர் மனதிலும் இயல்பாக திகிலோடு எழுகிறது. அப்படி ஓடிப்போன சிங்கள ராணுவத்தினர்தான், இப்போது மகிந்தாவின் தேர்தல் களத்திலே காலிகளாக, காடைகளாக களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.


இது பெரும்பாலான சிங்களர்களுக்கிடையே மோதலை தோற்றுவிப்பதற்கான செயலாக மாறி வருவதை சமூக ஆய்வாளர்கள் அறிந்துணர்ந்துள்ளார்கள். போரிலே பெற்ற வெற்றியை வைத்து சரத், அதிகார மையத்தை அடையலாம் என்று நினைத்ததும், அதுவே அவரின் அடித்தள சிறைவாழ்வுக்கு அழைத்துச் சென்றதும் சிங்கள மக்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. சிங்கள ராணுவ வரலாற்றில் சற்றேறக் குறைய 40 ஆண்டுகாலம் பணியாற்றிய ஒரே ராணுவ அதிகாரி சரத்தாகத்தான் இருக்கும். ஆகவே, அடித்தளத்திலிருந்து மேல் தட்டு அதிகாரிகள் வரை சரத்தின் விசுவாசிகளாக இருப்பதற்கு பெரும் வாய்ப்பு உள்ளதை அறிந்துள்ள மகிந்தாவின் அரசு, ராணுவத்தில் களையெடுப்பு நிகழ்வுகளை துரிதப்படுத்தி உள்ளது.


ராணுவத்தில் மட்டுமின்றி, காவல்துறையிலும் இந்த நிகழ்வு பெரும் அதிர்வையும், கசப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் சிங்கள ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 1லட்சத்து 75 ஆயிரம் ராணுவ வீரர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சந்தேகத்துக்குள்ளானவர்களாகவே மகிந்தாவின் அரசு பார்க்கத் தொடங்கியிருக்கிறது. மகிந்தாவின் அதிகார மமதை, அவரின் சகோதரர்கள் செய்யும் அட்டூழியங்கள், இவைகள் ராணுவ வீரர்களுக்கிடையே பெரும் அதிருப்தியை, விரக்தியை ஏற்படுத்தி வருவதாக உள்ளிருந்துவரும் செய்திகள் சொல்கின்றன. ஒருவேளை இந்த விரக்தி மேலோங்குமானால், நன்கு பயிற்சிப் பெற்ற இந்த ராணுவ வீரர்களால் சிங்கள மகிந்தா அரசிற்கு பெரும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல, ஆட்சி இழப்பையும் ஏற்படுத்தலாம் என்பதுதான் அங்கு இருக்கும் நிதர்சன நிலையாகும்.


இன்று பெரும்பாலும் சிங்கள சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல்கள் விரிவடைந்து, ஒரு காலத்தில் ஜேவிபியின் கிளர்ச்சியைப் போல் மாறுமேயானால், இது லட்சக் கணக்கான சிங்கள இளைஞர்களை பலி கொடுக்கும் ஒரு பரிதாபகரமான நிலைக்கு சிங்கள ஆட்சியாளர்களை அழைத்துச் செல்லும். இதெல்லாம் நிகழும் என்பது நமது தேசிய தலைவர் உணர்ந்திருந்தார். காரணம், கடந்த கால வரலாற்றில் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த பிரதமர் எல்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்காவை ஒரு சிங்கள-பௌத்த துறவியே படுகொலை செய்தார் என்கின்ற திகில் நிறைந்த வரலாறு, சிங்களத்திலே மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் ஏராளமாக இருப்பதை அரசியல் நடைமுறைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.


சிதறடிக்கப்படும் சிங்கள இனம், தம்மை காத்துக் கொள்வதற்காகவே மீண்டும் களத்திற்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த சிதறடிப்பிற்குப் பிறகு நடைபெறும் சமரில், பாயும் புலிகளை எந்த ஒரு சக்தியாலும் புறந்தள்ள முடியாது. அது நடைபெறும் காலம் இதோ நெருங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் தலைமையில் நமக்கான தமிழீழ தேசிய குடியரசு அமைவதற்கான காலங்கள் மிக அருகில் சிறப்பாக அமையத் தொடங்கி இருக்கின்றன. இது சிங்களன் சிதறடிக்கப்படுவதையும், புலிகள் சீறிப்பாய தயாராவதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக